Web
Analytics
அமைச்சர் ஹக்கீம் தலைமையில் -கல்முனை அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் - Sri Lanka Muslim Congress

-நாச்சியாதீவு பர்வீன் –
நகர திட்டமிடல் , நீர்வழங்கல் அமைச்சினால்  முன்னெடுக்கப்பட்டுள்ள அபிவிருத்திப்பணிகளில் கல்முனை, சம்மாந்துறை பாரிய அபிவிருத்தித் திட்டத்தை துரிதப்படுத்துமாறும், ஏற்கனவே நிறைவடைந்துள்ள செயற்திட்டங்களை மக்கள் பாவனைக்காக கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், இவ்வருடத்திற்கான மேலதிக  நிதித்தேவைகளை மதிப்பீடு செய்யுமாறும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் உயர் அதிகாரிகளை பணித்துள்ளார்.

கல்முனை அபிவிருத்தி திட்டங்கள் சம்பந்தமான  மீளாய்வுக்கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சில் செவ்வாய்க்கிழமை(13) பிற்பகல் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு பணிப்புரை விடுத்தார்.

சவூதி அரேபியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தை நிறைவு செய்துகொண்டு நாடுதிரும்பியவுடன் தமது அமைச்சில் நடாத்திய உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலின்போது அம்பாறை மாவட்டத்தில் கல்முனையை மையப்படுத்தி  நகர திட்டமிடல் அமைச்சினால் ஒதுக்கப்பட்டுள்ள 160 மில்லியன் ரூபாய் செலவிலான செயல்திட்டங்கள் உட்பட ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது.
குறிப்பாக கல்முனைப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஏழு அபிவிருத்தி செயல் திட்டங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. அவற்றில் ஏற்கனவே நிறைவடைந்துள்ள இஸ்லாமாபாத்,பெரியநீலாவணை போன்ற பிரதேசங்களில் உள்ள சனசமூக நிலையங்கள் நற்பிட்டிமுனை அஷ்ரப் விளையாட்டு மைதானம் என்பவற்றை மக்கள் பாவனைக்கு விரைவில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
சந்தாங்கேணி மைதானத்தில் ஐக்கிய சதுக்க பார்வையாளர் கூடம் பற்றியும், கல்முனை சந்தைக்கட்டிட விவகாரம் பற்றியும் ஆராயப்பட்டது.
நகர திட்டமிடல் அமைச்சு ஒப்பந்த அடிப்படையில் இலங்கை காணி மீள்நிரப்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினூடாக மேற்கொண்டு வரும் சாய்ந்தமருது தோணாவின் இருமருங்கிலும் பாறாங்கற்களையும்,சல்லடையையும் கொண்டு எழுப்பப்படும் பாதுகாப்பு அரணை இவ்வாண்டில் நிறைவு செய்வதற்கான நடவடிக்கைளை சம்பத்தப்பட்ட அமைச்சுக்களின் மேலதிகாரிகள், அம்பாறை மாவட்ட செயலாளர், கல்முனை மாநகர சபை ஆணையாளர், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஆகியோரின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்குமாறு அமைச்சர் ஹக்கீம் கூறினார்.
பிரஸ்தாப தோணாவில் படர்ந்து வியாபித்துள்ள சல்வீனியா தாவரங்களை அகற்றுவதற்கும், அவற்றின்  பரவலை கட்டுப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் தெரிவித்த போது  அதில் எதிர்நோக்குகின்ற சிரமங்களை உயர் அதிகாரிகள் எடுத்துக்கூறினர்.
அத்துடன் காணி மீள்நிரப்புதல் பற்றி ஆராயப்பட்டதோடு ஐம்பது மில்லியன் ரூபா செலவில் இறைவெளிக்கண்டத்தில் முதல் கட்டமாக ஐம்பது ஏக்கர் நிலத்தை நிரப்புவது பற்றி சீர்தூக்கி பார்க்கப்பட்டது.
  அமைச்சர் ஹக்கீமின் முயற்சியின் பயனாக இப்பிரதேசங்களின்  அபிவிருத்தி வேலைகளுக்கு வரவுசெலவு திட்டத்தில்  200 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சுனாமி மீள்குடியேற்ற கிராமங்களின் அபிவிருத்தி செயற்திட்டங்கள் பற்றியும் பேசப்பட்டது.
இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் சரத் சந்திர சிறி விதான, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதிச் செயலாளர் நாயகமும் முன்னாள் கல்முனை நகர பிதாவுமான சட்டத்தரணி நிஸாம்காரியப்பர், அமைச்சின் மேலதிக செயலாளர் ஏ.சி.எம் .நபீல், கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி, அம்பாறை கச்சேரி மாவட்ட பொறியியலாளர் எம் .ஐ.எம்.ரஸீஹ்.காணி மீள்நிரப்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபன செயல்திட்ட பொறியியலாளர் சமந்த லொகு லியன, அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் எம்.நயீமுல்லாஹ், இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர்   ஆகியோர் உட்பட உயரதிகாரிகள் பங்குபற்றினர்.
Displaying _DSC0032.JPG
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM