ஆண் பிள்ளைகளினுடைய கல்வித்தரம் மற்றும் அப்பிள்ளைகளினுடைய கல்வி வளம் என்பது பொதுவாக முஸ்லிம் சமூகத்தினை பொறுத்தமட்டில்

ஒரு கேள்விக்குறியாக மாறிவருகின்ற காலகட்டத்தில் இவ்வாறானதொரு ஆண் மாணவர்கள் மாத்திரம் கல்வி கற்கின்ற பாடசாலை நிகழ்வில் கலந்துகொள்வதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
 
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் 2016ஆம் ஆண்டுக்கான பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்திற்கு போட்டோகொப்பி இயந்திரம் கையளிக்கும் நிகழ்வு 2017.07.12ஆந்திகதி-புதன்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.
 
பாடசாலையின் அதிபர் இஸ்மாயில் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் கலந்துகொண்டு போட்டோகொப்பி இயந்திரத்தினை கையளித்துவிட்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்…
 
ஆண் பிள்ளைகள் எதிர்காலத்தில் எமது சமூகத்தினுடைய பொறுப்புக்களை தங்களது தோள்களில் சுமந்தவர்களாக நம் சமூகத்தினுடைய விடிவுக்காக போராட காத்திருக்கின்றவர்கள். அவர்கள் அரசியல் ரீதியாக என்பதற்கு பதிலாக அறிவு ரீதியாக போராட வேண்டியதொரு சமூகமாக இருந்துகொண்டிருக்கின்றார்கள்.
 
நாட்டிலே இப்பொழுது இருக்கின்ற சூழல் என்பது முஸ்லிம்களை இந்த நாட்டில் அவர்கள் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வந்தார்கள் என்பதைக்கூட கேள்விக்குட்படுத்தப்படுகின்றதொரு நிலையில் முஸ்லிம்கள் எங்கெல்லாம் சிதறி வாழுகின்றார்களோ அங்கெல்லாம் அவர்கள் பல பிரச்சினைகளுக்கு உட்படுத்தப்படுகின்றவர்களாகவும் எங்களது மார்க்க விடயங்களை கொச்சைப்படுத்துகின்ற மார்க்க அனுஸ்தானங்களை செய்கின்ற மதஸ்தலங்களை உடைக்கின்றதொரு மிகப்பெரும் பயங்கரமானதொரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம்.
 
இவைகளை நாங்கள் வெல்ல வேண்டுமாக இருந்தால் அறிவுமிக்கதொரு சமூகத்தினை உருவாக்க வேண்டியதொரு பொறுப்பு எமக்கு இருக்கின்றது. அரசியலினால் எதனையும் சாதிக்கலாம் என்கின்ற காலம் மாறி அறிவு ரீதியாக நாங்கள் மற்றவர்களை விழிப்பூட்டக்கூடிய பதிலளிக்கக்கூடியதொரு தேவைப்பாடு இருக்கின்றது.
 
அந்த வகையில் ஆண் பிள்ளைகள் கல்வி விடயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியதொரு தேவைப்பாடு இருக்கின்றது. எந்தவொரு பெறுபேற்றினை எடுத்துக்கொண்டாலும் அதில் ஐம்பது வீதத்திற்கும் கூடுதலான பெறுபேறுகளை பெண் பிள்ளைகள் பெறுகின்றனர். மிகவும் குறைந்த நிலையிலேயே ஆண் மாணவர்கள் இருந்துகொண்டிருக்கின்றார்கள்.
 
எம்சமூகத்தினை பொறுத்தமட்டில் எந்தவொரு விடயத்தினை எடுத்துக்கொண்டாலும் பொதுவாக கல்வி, பண்பாடு. கலாச்சாரம் எல்லாவற்றையும் அரசியலுக்குள் போட்டுக்கொண்டு குழப்பிக்கொள்ளுகின்றதொரு சமூகமாகவே நாங்கள் மாறி இருக்கின்றோம்.
 
எம்முஸ்லிம் சமூகம் மாத்திரம் தங்களுடைய அரசியல் பிழைப்புக்காக நம் சமூகத்திற்குள் குழப்பங்களை ஏற்படுத்தி பிளவுகளை உண்டுபன்னுகின்றதொரு விடயத்தினை அவதானிக்க முடிகின்றது. இவ்வாறு எம்சமூகத்தினுடைய வளர்ச்சியில் அவைகள் தாக்கம் செலுத்தக்கூடாது என்பதே எங்களுடைய விருப்பங்களாக இருந்து கொண்டிருக்கின்றது. அரசியல் என்பது நிரந்தரமானதல்ல.
 
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் அஸ்ரப், கல்குடாத்தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் புதல்வர் முகைதீன், வாழைச்சேனை ஹைராத் பள்ளிவாயல் தலைவர் கலந்தர் லெப்பை, மாகாண சபை உறுப்பினரின் கல்குடாத்தொகுதி இணைப்பாளரும், ஊடக இணைப்பாளருமான ஹைதர் அலி, கல்குடாத் தொகுதி இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திபாஸ், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் ஆப்தீன், பாடசாலையில் கற்பிற்கும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM