இலங்கையில் வாழும் சமூகங்கள் கடவுள் நம்பிக்கையோடு சம்மந்தப்பட்டவை. எல்லாவற்றையும் இறைவன்தான் தீர்மானிக்கிறான் என்பதை எல்லோருமே நம்பி இருக்கிறோம்.

அந்த அடிப்படையில் சில விடயங்களில் சமநிலையை ஏற்படுத்துவதற்கான இறை நியதியே வெள்ள அனர்த்தம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டுமெனக் கூறினார் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் விவகார வேலைவாப்புத்துறைச் செயலாளருமான ஏ.எல்.தவம் அவர்கள்.

இன்று (2), நாட்டில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கிழக்கு மாகாண சபையினால் மேற்கொள்ளப்படக்கூடிய நிவாரண மற்றும் வளப்பகிர்வு நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்காக இடம்பெற்ற விசேட மாகாண சபை அமர்வில் உரையாற்றும் போதே தவம் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் உரையாற்றும் போது,
இன்றைய இந்த விசேட கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. வேறு மாகாணங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, பாதிக்கப்படாத ஒரு மாகாண சபை கூடுவது இலங்கை வரலாற்றில் இதுதான் முதல் தடவையாகும்.

சுனாமி போன்ற மிகப்பெரிய இயற்கை அனர்த்தம் இடம்பெற்ற போது கூட இப்படி எந்த மாகாண சபையும் கூடியது கிடையாது. அதனை கிழக்கு மாகாண சபை நிறைவேற்றுவதை எண்ணி நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.
மனிதனுக்குதான் தமிழர், முஸ்லிம், சிங்களவர் என்ற வேறுபாடெல்லாம் இருக்கிறது. அனர்த்தங்களுக்கு அது கிடையாது.

மனிதர்கள் விலங்குகளிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் நிறைய இருப்பதைப் போன்று, இயற்கையிடமும் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதை உரத்துச் சொல்லும் ஒரு தருணமாகவே இவ்வெள்ள அனர்த்தத்தைப் பார்க்க முடிகிறது.
இலங்கையில் வாழும் சமூகங்கள் கடவுள் நம்பிக்கையோடு சம்மந்தப்பட்டவை. எல்லாவற்றையும் இறைவன்தான் தீர்மானிக்கிறான் என்பதை எல்லோருமே நம்பி இருக்கிறோம். அந்த அடிப்படையில் சில விடயங்களில் சமநிலையை ஏற்படுத்துவதற்கான இறை நியதியே வெள்ள அனர்த்தம் என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.

பாதிக்கப்பட்ட மக்களில் எல்லா இன மக்களும் இருக்கிறார்கள். சிறுவர்கள், ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் இவ்வெள்ளம் எல்லோரையுமே தாக்கி இருக்கிறது. உயிர்களைக் காவுகொண்டிருக்கிறது. இந்தத் தருணத்தில் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணத்தில் நாம் இருக்கிறோம். மனிதாபிமான உதவிகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் நம்மெல்லோரிலும் உள்ளது. அதனைத் தட்டிக்கழிக்க முடியாது.

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பலவகையில் சுமார் 44 நாடுகள் முன்வந்துள்ளன. அதில் முஸ்லிம் நாடுகளே அதிகம் என்பது எமக்குச் சந்தோசத்தைத் தருகின்ற விடயமாகும். சவூதி இளவரசர் தனது சொந்த நிதியிலிருந்து இலங்கை மக்களுக்கு உதவியுள்ளதையும் இங்கு சுட்டிக்காட்டுகிறேன். இப்படி பலநாடுகள் செய்கின்ற அதே விடயங்களையே கிழக்கு மாகாண சபையும் செய்ய வேண்டியதில்லை.
மாறாக, பாதிக்கப்பட்ட மக்கள் தங்களது வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்காக பல்வேறு விடயங்களின் தேவைகள் இருக்கின்றன.

அவர்களுடைய சுத்தமான குடிநீருக்கான ஏற்பாடுகள், வீட்டு உபகரணங்கள், பாடசாலை உபகரணங்கள், வீதி போன்ற உட்கட்டமைப்பு வசதிகள், மின்சார வசதிகள் போன்றவற்றை வழங்கவும் திருத்தவும் வேண்டிய தேவை இருக்கிறது. அவற்றைச் செய்வதில் நமது கவனத்தைச் செலுத்த வேண்டும்.

நம்மிடம் இருக்கின்ற சுகாதாரத் திணைக்களம், விவசாயத் திணைக்களம், உள்ளூராட்சி மன்றங்கள், வீதி அபிவிருத்தித் திணைக்களம், கிராமிய மின்சாரத் துறை போன்றவற்றின் உபகரணங்களையும், இத்திணைக்களங்களிலுள்ள விற்பன்னர்களையும் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட பிரதேசங்களைத் துரிதமாக மீளக்கட்டியமைக்கவும், அம்மக்கள் மீளக்குடியேறவும் உதவ வேண்டுமெனவும் அவர் சபையில் கூறினார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM