கிழக்கு மாகாணத்தில் டெங்கு நோயினால் அதிகளவான மனித உயிர்களை பறிகொடுத்துக் கொண்டிருக்கின்ற இந்த கால கட்டத்தில் இவ்வாறானதொரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற விதமாக அவசரமாக செய்யப்பட வேண்டிய விடயங்களை தொட்டு நோக்குகின்ற ஒரு விடயமாக இந்த அவசர பிரேரணையை பார்க்கின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையின் 75ஆவது அமர்வு 2017.03.21ஆந்திகதி-செவ்வாய்கிழமை சபைத் தவிசாளர் சத்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்றது. இம்மாகாண சபை அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

எங்களுடைய மாகாண சபை உறுப்பினர் அன்வர் பேசுகின்றபோது ஒரு விடயத்தினை குறிப்பிட்டார். ஜேர்மனியில் திடிரென்று பரவிய எலி காய்ச்சல் என்கின்ற ஒரு தொற்று நோயினால் ஒரு புகையிரத்தில் பயணித்து கொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டு ஏனையவர்கள் பாதுகாக்கப்பட்டனர் என்று. இவ்வாறான விடயங்கள் எதிர்காலத்தில் நம் நாட்டிலும் சில கிராமத்திலுள்ள மக்களை வெளியேற விடாமல் அக்கிராமத்திலுள்ள மக்களை முற்றுமுழுதாக எரிக்கப்படுகின்ற ஒரு சந்தர்ப்பம் ஏற்படும் என்றும் நான் நினைக்கின்றேன்

இவ்விடயத்தினூடாக நான் சுட்டிக்காட்ட வருவது மக்களினுடைய சனத்தொகைக்கு ஏற்ற வகையில் அவர்கள் வாழ்வதற்குரிய காணி பங்கீடுகள் கொடுக்கப்படாமல் மிக நெரிசலாக இருப்பதென்பது ஏதேனும் தொற்றுநோய் ஏற்படும்போது அந்த நோய் மக்கள் மத்தியில் மிக வேகமாகப்பரவிவிடும். ஆகையால் இந்த டெங்கு காய்ச்சலை இவ்வாறானதொரு சந்தர்ப்பத்திற்குரிய முன்னெச்சரிக்கையான விடயமாக நான் பார்க்கின்றேன்.

மக்கள் பரந்து விரிந்து வாழ்வதற்குரிய வாய்ப்பு வசதிகளை ஏற்படுத்தாமல் சிறிய பிரதேசங்களுக்குள் அவர்கள் ஒடுக்கப்பட்டு வாழ்ந்து வருகின்ற வேளைகளில் இவ்வாறு திடிரென்று ஏற்படுகின்ற தொற்று நோய்கள் காரணமாக ஒரு இரவு பொழுதுக்குள் ஒரு கிராமத்தில் வாழும் எல்லா மக்களையும் இவ்வாறான தொற்று நோய்கள் பீடிக்கின்ற ஒரு சந்தர்ப்பம் ஏற்படுமென்று நான் நம்புகின்றேன். அவ்வாறானதொரு நிகழ்வு இலங்கையில் ஏற்படுமாக இருந்தால் அது மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள காத்தான்குடி பிரதேசமாகத்தான் இருக்குமென்று நான் நினைக்கின்றேன்.

இரண்டு பக்கங்களும் நீரினால் சூழப்பட்டு அடுத்துள்ள இரண்டு பக்கங்களும் காத்தான்குடியில் வசிக்கும் மக்கள் எந்த விதத்திலும் வெளியேறி செல்ல முடியாத வகையில் ஒடுக்கப்பட்ட பிரதேசத்திற்குள் கிட்டத்தட்ட ஐம்பதாயிரம் மக்கள் 4.52 சதுர கிலோமீட்டர் பரப்புக்குள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

சில தினங்களுக்கு முன்னர் காத்தான்குடி பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு மரணித்திருந்தார். இட்டெங்கு நோய் பரவுவதனை தடுப்பதற்கு காத்தான்குடி சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் மாகாண சுகாதார அமைச்சர் ஆகியோரை அழைத்து இதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய ஆக்கபூர்வமான விடயங்களை நாங்கள் செய்திருந்தோம்.

மேலும் இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும்போது இந்த மாகாணத்தினுடைய சுகாதார வசதியினை எவ்வாறு மேம்படுத்துவது. அதற்குரிய ஆளணி விடயங்களை எவ்வாறு கையாளுவது என்ற விடயங்களை நாங்கள் ஆராய வேண்டும். இங்குள்ள அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களால் இயலாத ஒரு விடயமா இருப்பது மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிகமான நிதிகளையும், ஆளணிகளையும் எங்களுடைய மாகாணத்திற்கு கொண்டு வர இயலாமல் இருக்கின்ற ஒரு விடயமாகும்.

இதே விடயங்களை பேசுகின்ற மத்திய அரசாங்கத்திலுள்ள அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறுமெனே வாய் மூடி மௌனிகளாக பாராளுமன்றத்தில் இருந்துவிட்டு மாகாணத்தினை குறைகூறி திரிகின்றவர்களாக மாத்திரமே இருக்கின்றார்கள். இதனை பார்க்கும்போது இந்த மாகாணத்தினுடைய மக்களை இவர்கள் நேசிக்கின்றார்களா…? இந்த நாட்டு மக்களை இவர்கள் நேசிக்கின்றார்களா…? அல்லது அடுத்து வரும் தேர்தலுக்கு மக்களின் உயிர்களை பலி கொடுத்து எதிர்வரும் தேர்தல்களில் தமது வாய்ப்புக்களை உறுதிசெய்கின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்களா என்கின்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகின்றது.

மேலும் கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு கீழே இருக்கின்ற உள்ளுராட்சி மன்றங்கள் உடனடியாக இன்றிலிருந்து 24 மணிநேரமும் செயற்படும் வகையில் அவசர அனர்த்த ஆளணிகளை வைத்துகொண்டு தங்களது பிரதேசங்களிலுள்ள வடிகான்கள் மற்றும் நோய்கள் பரவக்கூடிய இடங்கள் என்பனவற்றை கண்டறிந்து துப்பறவு செய்கின்ற வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.

எதிர்காலத்தில் இவ்வாறான தொற்று நோய்கள் பரவாமல் எவ்வாறு கையாளுவது அதனை தடுப்பது என்கின்ற விடயங்களை சிறந்ததொரு திட்டமிட்ட அடிப்படையில் கையாள வேண்டும் .வெறுமெனே பிரேரணைகளை மாத்திரம் சபைகளில் கொண்டு வந்து பேசுகின்ற சபைகளாக மாற்றி விடாமல் தூர நோக்குடன் நல்ல திட்டங்களை முன்மொழிந்து மத்திய அரசாங்கத்தினூடாக அத்தனை நிதி மற்றும் வளங்களையும் பெற்று நாங்கள் இந்த மாகாணத்தை சிறந்ததொரு மாகாணமாக வளர்த்தெடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்படன் செயற்பட வேண்டும்.

அத்துடன் காணி அமைச்சரிடம் இச்சபையில் ஒரு வேண்டுகோளாக நான் முன்வைப்பது இந்த மாகாணத்திலுள்ள அனைத்து இன மக்களுக்கும் அவர்களின் இன விகிதாசாரத்திற்கு ஏற்ப காணி பங்கீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும். அரச காணி என்பது ஒரு குறிப்பிட்ட இனத்துக்குரிய காணியல்ல. அரச காணி என்பது இந்த நாட்டிலே இருக்கின்ற மக்கள் தங்களது ஜீவனோபாயத்திற்கும் அவர்கள் உயிர் வாழ்வதற்கும் அடிப்படையாக கொடுக்கப்பட வேண்டியதொரு விடயமாகும் என சபையில் தெரிவித்தார்.

ஹைதர் அலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More