(எம்.சி. அன்சார்)

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் தனித்தும், ஐக்கிய தேசியக்கட்சியோடு இணைந்தும், முஸ்லிம் தேசிய கூட்டமைப்பிலும் மற்றும் ஜனநாயக ஐக்கிய முன்னணியிலும் இணைந்து நாடுமுழுவதிலும் நான்கு விதமாக முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிடுகின்றது.

அதிகமாக ஆசனங்களைப் பெற்றுக்கொள்வதற்காகவும், பல உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து போட்டியிடுகின்றதே தவிர எமது கட்சியை ஒருபோதும் ஐக்கிய தேசியக்கட்சிக்கு நாம் அடகு வைக்கவில்லை. என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூரின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச சபைக்கான தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச்சின்னத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களுடனான சந்திப்பு பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் நேற்று இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியோடு இணைந்து போட்டியிட வேண்டுமென்ற முடிவானது மிகவும் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு எல்லோரினாலும் எடுக்கப்பட்ட முடிவாகும். இந்த இணைப்பின் மூலம் எமது கட்சிக்கு கிடைக்கின்ற வாக்குகளைக் கூட்டிக்கொள்வதற்காக தேவையான வியூகங்களை வகுப்பதற்காகவே தவிர ஐக்கிய தேசியக்கட்சிக்கு நாம் தெனையும் அடகு வைக்கவில்லை என்பதனை நான் மிகவும் தெளிவாகவும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அம்பாறை மாவட்டத்தின் முக்கியமான இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுகிறோம். அங்கு யானையில் போட்டியிடும் வேட்பாளர்களை நாங்கள்தான் தெரிவுசெய்கிறோம். ஐக்கிய தேசியக் கட்சிக்கார்களாக இருந்தாலும் சரி, அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுவதை நாங்கள்தான் தீர்மானிப்போம். அந்தளவு அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சி அம்பாறை மாவட்டத்தில் எங்களுக்கு தந்துள்ளது. அந்த உரிமையுடன்தான் நாங்கள் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகிறோம்.

அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள அனைத்து சபைகளுக்கான ஐக்கிய தேசியக்கட்சியின் . வேட்பாளர் பட்டியலை நாங்கள்தான் தயாரித்திருக்கிறோம். ஐக்கிய தேசியக்கட்சியின் தேர்தல் முகவர்களாக எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நான்கு விதமான முறைகளில் எதிர்வருகின்ற உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்றன. பல இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து யானை சின்னத்திலும், சிங்கள பிரதேசங்களில் எங்களுடைய ஜனநாயக ஐக்கிய முன்னணி கட்சியில் (துஆ) இரட்டை இலை சின்னத்திலும், சில இடங்களில் எங்களது முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் தராசு சின்னத்திலும், அதிகமான இடங்களில் முஸ்லிம் காங்கிரஸின் மரச்சின்னத்திலும் போட்டியிடுகிறது.
சம்மாந்துறை பிரதேச சபையினை முழுமையாக கைப்பற்றக்கூடிய அளவிற்கான பலத்தினை கொண்ட அணியாக ஐக்கிய தேசியக்கட்சி காணப்படுகின்றது. இத்தேர்தலானது எனக்கு புதிதான ஒன்றல்ல. நான் நான்கு முறை சந்தித்துள்ளேன். இம்முறை மயில் கட்சிக்காரர்கள் எதனைச் செய்தாலும் சம்மாந்துறை பிரதேச சபையை ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து முஸ்லிம் காங்கிரஸ் நிச்சயமாக கைப்பற்றும் இதில் எவ்விதமான சந்தேகங்களும் கிடையாது. அதற்கான வியூகங்களை வகுத்துள்ளது..

எனவே, என்றுமில்லாதவாறு நான்கு முறைகளில் முஸ்லிம் காங்கிரஸ் தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது. புதுமையான வியூகங்களை கையாண்டுவரும் முஸ்லிம் காங்கிரஸ் பல பிரதேசசபைகளை கைப்பற்றுவதற்கான முஸ்தீபுகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், வேட்பாளர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM