சீரற்ற கால நிலை காரணமாக திடிரென ஏற்பட்ட வெள்ளம் வடிந்து, மக்கள் தமது வீடுகளில் மீளக்குடியமர்ந்து வரும் இவ்வேளையில், அவர்களின் வீடுகள் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக மதிப்பிடும் பணிகளைத் துரிதப்படுத்துமாறும், அவற்றை மேற்கொள்வதற்கான அதிகாரிகளின் பற்றாக்குறை இருப்பின் ஏனைய பகுதிகளிலுள்ள துறைசார் அதிகாரிகள் மூலமாகவது இந்நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் பணிப்புரை விடுத்தார்.

களுத்துறை மாவட்ட செயலகத்தில் இப்பிரதேச அனர்த்த நிவாரனப் பணிகளுக்கு இணைப்பாளர்களாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் அர்ஜுனா ரணதுதுங்க ஆகியோர் தலைமையில் புதன்கிழமை (07) நடைபெற்ற அனர்த்த நிவாரண மற்றும் மீளகட்டியமைக்கும் பணிகளின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டத்திலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

மக்கள் வாழ்க்கையில் சுமூக நிலையை ஏற்படுத்துவதற்கு தேவையான சுத்திகரித்தல், இழந்த உடமைகளுக்கு இழப்பீடு வழங்ககுதல், பாதிப்புக்குள்ளான மக்கள் மத்தியில் தன்னம்பிக்கையைக் கட்டியெழுப்புதல், டெங்கு பொன்ற தொற்று நோய்கள் பரவாது தடுத்தல் முதலான விடயங்கள் தொடர்பில் இக்கூட்டத்தின்போது கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

நிவாரணப் பணிகள், சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மற்றும் இழப்பீடு வழங்கள் நடவடிக்கைகளின் நிலைமை தொடர்பாக நிலைமையைக் கேட்டறிந்த பின்னர் அமைச்சர் ஹக்கீம் அங்கு உரையாற்றும்போது, இழப்பீடு வழங்கப்படும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சு, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சு என்பவற்றின் அதிகாரிகளுடனான அமர்வொன்றை விரைவில் நடாத்துவதற்கு ஆவன செய்ய வேண்டுமெனவும், இப்பிரதேசத்திலுள்ள நகர சபை மற்றும் பிரதேச சபை கிராம அலுவலர்கள் ஆகியோர் அனர்த்த நிவாரண பணிகளில் ஈடுபடும் போது அவர்களுக்குரிய விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்கு தனியாதொரு அமர்வை ஏற்பாடு செய்ய வேண்டுமெனவும் அமைச்சர் கூறினார்.

இதுவரை நிறைவு பெற்றுள்ள மீளக்கட்டியமைக்கும் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பாக ஆராயப்பட்டபோது, கிணறுகளைச் சுத்திகரித்து குளோரின் இடல், பாதைகளை சுத்திகரித்தல், வீடுகள் மற்றும் கடைகள் முதலானவற்றை சுத்திகரித்தல் போன்ற பணிகளில் சிவல் பாதுகாப்பு அதிகாரிகளும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகலாப்புச் சபையின் ஊழியர்களும் மிகச் சிறப்பாக ஈடுபட்டு வருவதாக களுத்துறை பிரதேச செயலாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், குடிநீர் தட்டுப்பாடு நிலவும் பகுதிகளில் தற்காலிக நீர் தாங்கிகளை வைத்தும், நீர் போத்தல்களை வழங்கியும் மக்களின் குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்படும் பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கருத்துத் தெரிவித்தனர்.

பாதிப்புக்குள்ளான சகல பகுதிகளிலும் அனர்த்தத்திற்கு உள்ளான குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கும் நடவடிக்கைகள் பிரதேச கிராம அலுவலர்கள் மூலம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

டெங்கு முதலான தொற்று நோய்கள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக குட்டைகளில் தேங்கியுள்ள சுத்தமான நீரை அகற்றுதல், கிணறுகள் சுத்திகரித்தல் முதலான பணிகளை சிவில் பாதுகாப்பு படையினரும், பிரதேச சுகாதார திணைக்களமும், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் வெள்ள நிவாரண செயலணியும் ஒன்றிணைந்து மிக வெற்றிகரமாக மேற்கொண்டு வருவதாக பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பட்டார்.

களுத்துறை தேர்தல் தொகுதியில் பாதிப்புக்குள்ளான மக்கள் தொகை 11850 ஆகும். அனர்த்தத்துக்குள்ளான 317 வீடுகளுள் முற்றாக சேதமடைந்த 18 வீடுகளும், ஓரளவு சேதத்திற்குள்ளான 265 வீடுகளும் காணப்படுகின்றன. 113 வர்த்தக நிலையங்கள் மற்றும் நான்கு வழிபாட்டுத்தலங்களும் சேதங்களுக்குள்ளாகியுள்ளன.

இந்த உயர்மட்டக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலாளர் யு,டீ.சீ.ஜயலால், களுத்துறை பிரதேச செயலாளர் ருவணி சமரதுங்க உள்ளிட்ட களுத்துறை நகர சபை மற்றும் பிரதேச சபை, சுகாதார திணக்களம், பொலிஸ் திணைக்களம், டெங்கு ஒழிப்பு செயலணி அனர்த்த நிவாரண செயலணி என்பவற்றின் உயரதிகாரிகளும் பாதிப்புக்குள்ளான பிரதேசங்களைச் சேர்ந்த கிராம சேவை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

ஜெம்சாத் இக்பால்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM