புதக்கவிதைக்கும் மரபுக் கவிதைக்கும், இடையே இணைப்பப் பாலமாகத் திகழ்ந்த கவிக்கோவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகுமெனஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் சென்னையில் தமது இரங்கல் உரையில் தெரிவித்தார்.

சனிக்கிழமை நண்பகல் கவிக்கோவின் ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுவதற்கு முன்னர் சென்னை, திருவான்மியூர் நூர் மஸ்ஜிதில் தொழுகையை அடுத்து இரங்கல் உரையாற்றுகையிலேயே அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அமைச்சர் ஹக்கீமின் இரங்கல் உரையின்போது மேலும் தெரிவித்ததாவது,

இந்த புனித ரமழான் மாதத்தில் எங்களுக்கெல்லாம் இலக்கிய உலகத்தில் பெரு விருட்சமாக இருந்த கவிக்கோ மறைந்து விட்டார் என்ற செய்தி எல்லோரையும் உளுக்கியிருக்கின்றது. தமிழ் கூரும் நல்லுலகம் என்றுமே மறக்க முடியாத அண்மையிலே பொன்விழா கண்டு, பலராலும் பாராட்டுப் பெற்ற இந்த தனிப் பெரும் ஆளுமையை ஈடுசெய்ய முடியாத இழப்பாக நாம் எல்லோரும் பார்க்கின்றோம்.

இவரைப் பற்றி ஒவ்வொருவரும் சொன்ன கருத்துக்களை மேற்கோள் காட்டினாலே இவரது உண்மையான கீர்த்தி எதுவென்பதை நாங்கள் புரிந்து கொள்ளலாம்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் இவரைப்பற்றி குறிப்பிட்ட பொழுது, விருது பல பெற்று பரிசு பெற வரும் பொழுது வெகுமானம் எதுவென்று கேட்டால் அப்துல் ரஹ்மானை தா என்பேன் என்று கலைஞர் வாயினால் புகழ்பாடப்பட்டவர். மறைந்த கவிஞர் வாலி இவரைப்பற்றிச் சொல்லுகின்ற பொழுது, அப்துல் ரஹ்மான் இல்லாமல் கம்பன் அரங்கில்லை என்றார். இவரைப்பற்றி கவிஞர் வைரத்து சொல்லியிருந்ததை இன்று பத்திரிகைகளில் படித்தேன் கவிக்கோ இல்லாத கவியரங்கம் சொல் இல்லாத மொழி போன்றது என்கிறார். இவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது இந்த அரும் கவிஞருடைய படைப்புக்கள் நித்தியமாக இலக்கிய உலகில் நிலைத்து நிற்கக்கூடிய தன்மை வாய்ந்தவை. அவருடைய படைப்புக்களில் பக்கம் சாராத ஆன்மீகம் என்பது நிறைய விரவியிருந்ததை நாங்கள் படித்திருக்கின்றோம்.

எனவே, புதுக்கவிதைக்கும் மரபு கவிதைக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாக அவரை நாங்கள் பார்க்கின்றோம். எனவே, இலக்கிய உலகம் மறக்க முடியாத மிகப் பெரிய பொக்கிசமாக இருந்த விருட்சம் சாய்ந்து விட்டது. ஆனால் அந்த விருட்சத்தின் நிழலில் எத்தனையோ கவிஞர்கள் கூட இருக்கின்றார்கள்.

ஆகையால் மறைந்த இந்த மாபெரும் கவிஞருக்கு இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் சார்பில் என்னுடைய அனுதாபத்தை தெரிவித்தவனாக, அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற மேலானா சுவனபதி கிடைக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM