Web
Analytics
உண்மைப் போராளிகள் இருக்கின்ற வரைக்கும், மு.கா வை அசைப்பது என்பது இயலாத காரியம் - Sri Lanka Muslim Congress

(பிறவ்ஸ்)
கட்சியின் பாராளுமன்ற குழுவுக்குள் ஒரு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் தேசியப்பட்டியல் நியமனத்தில் நான் கவனமாக இருக்கவேண்டியேற்பட்டது. காழ்ப்புணர்ச்சி இல்லாமல், நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்பதற்காக பல எத்தனங்களை எடுத்தும் சந்தேகங்கள் முழுமையாக கலையப்படாத நிலையில், நான் பிழையான முடிவை எடுத்துவிடக்கூடாது என்பதற்காகவே தேசியப்பட்டியல் நியமனத்தில் தாமதிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் வெள்ளிக்கிழமை இரவு கல்முனையில் நடைபெற்ற ~மண்ணெல்லாம் மரத்தின் வேர்கள்| பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,
தேசியப்பட்டியல் விவகாரத்தை வைத்துத்தான் கட்சிக்குள் இருந்த சிலர் தற்போது முரண்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். மத்திய அரசிலும் மாகாண அரசிலும் பலத்தில் இருக்கின்ற முஸ்லிம் காங்கிரஸ் ஆசனங்களை வழங்கும்போது, அதனை எடுத்துக்கொண்டவர்கள் கட்சிக்கு குழிபறிப்பவர்களாக மாறிவிட முடியாது. அதற்காக நான் அவதானத்துடன் இருக்கவேண்டிய தேவை ஏற்பட்டது. அதனை வைத்து, இப்போது கட்சிக்குள் பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக ஒரு பிரமையை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்; பலமான இயக்கம் என்ற நம்பிக்கை வைத்திருக்கின்ற போராளிகள் இருக்கின்ற வரைக்கும், இந்தக் கட்சியை அசைப்பது என்பது இயலாத காரியம். பாராளுமன்றக்குழு, மாகாணசபை உறுப்பினர்கள், கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள் தலைமையின் பின்னால் நிற்கின்றபோது, நாங்கள் எதற்கும் அஞ்சவேண்டிய தேவை கிடையாது.

அபிவிருத்திகளை தரமாட்டோம் உரிமைகளை மட்டுமே பெற்றுத்தருவோம் என்ற கோசத்துடன் மர்ஹ_ம் அஷ்ரப் இந்தக் கட்சியை ஆரம்பித்தபோது, அன்று கல்முனை என்ன நிலைப்பாட்டில் இருந்ததோ அதை நிலைப்பாட்டில்தான் இன்றும் இருக்கிறது. அதேநேரம், அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கின்ற நாங்கள் அபிவிருத்தியை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

சர்வதேச சமூகத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு மத்தியில் தமிழ் மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக சர்வதேச சமூகத்தின் கரிசணையை தங்களுக்கு சாதகமான கரிசணையை எங்களுக்காக பாவிப்பதும், அரசியல் தீர்வில் முஸ்லிம்களின் பங்கை பெற்றுக்கொள்வதிலும் அவதானமாக இருப்பதுதான் முஸ்லிம் காங்கிரஸின் தார்மீகக் கடமையாகும்.

இதனை செய்கின்ற முழுப்பொறுப்பையும் எமது தோள்களில் சுமந்துகொண்டிருக்கிறோம். ஏனைய சில்லறைக் கட்சிகளிடத்தில் யாரும் எதனையும் எதிர்பார்க்க முடியாது. இந்த இடத்தில் முஸ்லிம் காங்கிரஸ் தவறிழைத்துவிடக்கூடாது என்பதில்தான் முஸ்லிம் சமூகம் கவனமாக இருக்கின்றது. இந்த தார்மீகப் பொறுப்பை சரிவரச் செய்வதற்காக எங்களுடைய கட்சியின் அனைத்து அணியினரும் பலமாக தலைமையின் பின்னால் நிற்கவேண்டும்.

இக்கட்சிக்குள் அரிக்கின்ற கறையான்களுக்கு இடம்கொடுக்க முடியாது. இதற்காக பல விட்டுக்கொடுப்புடன் நிறைய அவகாசங்களை கொடுத்தோம். பேராளார் மாநாட்டின்போது கூட சிலரை களையெடுக்க வேண்டிய கடப்பாடு எனக்கு இருந்தது. இதன்போது ஒருவரை விட்டுப்பிடித்தபோது விடயம் பிழைத்துப்போனது. அதனால் அவரையும் களையெடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது.

எங்களுக்குள் சிறுசிறு பிளவுகள் என்று இருந்தாலும் கட்சிக்கு பாதிப்பு என்று வரும்போது எல்லோரும் ஒன்றுபட வேண்டும். அந்த ஒற்றுமையாக முழுமையாகப் பாவித்து கட்சிக்குள் இருக்கின்ற பலவீனங்களை முழுமையாக களையவேண்டும். எமது இயக்கத்தை பலப்படுத்தும் வேலைகளிலும், இளைஞர் மற்றும் மாதர் அணிகளை பலப்படுத்துவதிலும் எமது அடுத்த மாதங்களை செலவிடவேண்டும்.
ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் கட்சியின் தலைமையுடன் அரசியல் பொறுப்பாளர்கள் சென்று, மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை காணவேண்டும். அரச மேல் மட்டங்களில் ஒவ்வொரு இடத்திலும் எமது கட்சியின் அரசியல் வீரியத்தைப் பயன்படுத்தி பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்ப்பதிலும் எங்களை ஈடுபடுத்துவதும்தான் எங்களுக்கு முன்னால் இருக்கின்ற தார்மீக கடமையாகும்.

தற்போது நடக்கின்;ற பித்தலாட்டங்களுக்குப் பின்னால் ஓடித்திரிவது எங்களது வேலையல்ல என்ற நிலைமையத்தான் இந்த மேடை உருவாக்கியிருக்கின்றது. நான் இவர்களைப் பற்றிப் பேசப்போவதில்லை. பேசுவதிலும் எந்த அர்த்தங்களும் கிடையாது. தற்போது நிறையப்பேர் எமது நியாயங்களை தெளிவாக சொல்லியுள்ளார்கள். அவற்றைப் பேசுகின்ற கடைசி மேடையாக இது இருக்கவேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்தாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM