Web
Analytics
எதிராளிகளுக்கும் மு.கா அபயமளிக்கும் பொத்துவிலில் தலைவர் ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim Congress

பிறவ்ஸ்)
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமை பொத்துவிலுக்கு வருகின்றபோது சலசலப்புகள் ஏற்படுவது இன்று, நேற்று ஏற்பட்டதல்ல. மறைந்த தலைவர் அஷ்ரபை கூட பேசவிடாமல் தடுத்த அதே காக்கிச் சட்டடைக்காரர்களாகவும் இவர்கள் இருக்கலாம். ஈற்றில் அவர்கள்கூட இந்த இயக்கத்துடன் சங்கமித்துத்தான் அரசியல் பதவி பெறவேண்டும் என்ற நிலவரம் இருந்ததது. இனியும் அவ்வாறான அரசியல் அந்தஸ்து கிடைப்பதற்கு இந்தக் கட்சிதான் அபயமளிக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அப்துல் வாஸித் தலைமையில் சனிக்கிழமை இரவு பொத்துவிலில் நடைபெற்ற ~மண்ணெல்லாம் மரத்தின் வேர்கள்| பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,
கட்சியையும் மக்களையும் தூரப்படுத்துவது என்பது இலகுவில் செய்து சாதிக்கக்கூடிய விடயமல்ல. அண்மைக்காலமாக ஒருசிலர் இல்லாத, பொல்லாத கதையெல்லாம் சொல்லித் திரிகின்றனர். நேற்று ஒரு அனாமதோய துண்டுப்பிரசுரத்தைப் பார்த்தேன். அதிலுள்ள ஒரு விடயத்தைப் பார்த்தபோதே அதனை அச்சிட்டவர் யாரென்பது எனக்கு தெரிந்துவிட்டது. இந்தக் கேவலப் பேச்சை என்னிடம் வந்து சொன்னவர்தான் இந்த துண்டுப் பிரசுரத்துக்கு காரணம் என்பது எனக்குத் தெரியும்.

இந்த பிறழ்வுக்காரர்கள் இங்குள்ள முஸ்லிம் காங்கிரஸ்காரர்களுக்கு உசுப்பேற்ற வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. உங்களது ஊரில் எமது கட்சியின் மத்தியகுழுவை அமைத்திருக்கிறோம். அதன் அமைப்பளார் பதவியை கட்சித் தலைமை பொறுப்பேற்றிருக்கிறது. இந்த நிலவரம் வேறு ஊர்களுக்கு வரவேண்டும் என்ற உங்களது முயற்சிகள் பயனளிக்கப்போவதில்லை.

பொத்துவில் உலமா சபையின் தலைவர் ஆதம்பாவா மௌலவி இன்றுடன் என்னுடன் கதைத்துக்கொண்டிருக்கும்போது, ஒரு துண்டுப் பிரசுரம் வெளியாகியிருந்ததாக கூறப்பட்டது. அப்போது அவரே அதைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். இவ்வாறு துண்டுப் பிரசுரம் வெளியிடுவதற்கு நாங்கள் ஒன்றும் கேவலமானவர்கள் இல்லை. நாங்கள் இந்தக் கட்சியை நம்பியிருக்கிறோம். முஸ்லிம் காங்கிரஸ் எங்களது தேவைகளை நிறைவேற்றித்தரும் என்று உச்ச நம்பிக்கையுடன் இருப்பதாக சொன்னார்.

இதன்போது பொத்துவில் பிரதேசத்துக்கு செய்யவேண்டிய பல விடயங்கள் குறித்து அவர் என்னுடன் கலந்துரையாடினார். அதில் அவர் முன்வைத்த பிரதான கோரிக்கை, எங்களுக்கு ஒரு அரசியல் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதாகும். பாராளுமன்ற பிரதிநிதித்துவத்துக்கு வாக்குகள் போதாது என்றாலும், ஆகக்குறைந்தது மாகாண சபையிலாவது எங்களுக்கு ஒரு அதிகாரம் வேண்டும் என்று சொன்னார். அதற்கான உபாயங்களை முஸ்லிம் காங்கிரஸ் செய்யும் என்று நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

பொத்துவில் மண்ணைப் பொறுத்தவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கு பாரிய பொறுப்புகள் இருக்கின்றன. அதன் மிகப்பெரிய பொறுப்புதாரியாக நான் இருந்துகொண்டிருக்கிறேன். உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும், அரணாக இருக்கும் என்று நம்பி எங்களுக்கு வாக்களித்தவர்கள் நீங்கள். பொத்துவில் கல்வி வலயம் அமைப்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் முழுமூச்சுடன் செயற்பட்டு வருகின்றது. எமது கட்சியைத் தவிர எதனாலும், அதனைப் பெற்றுத்தர முடியாது என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

பொத்துவில் கல்வி வலயத்துக்கான அனைத்து வேலைகளும் செய்யப்பட்டு மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு கல்வி வலயம் அமைவதற்கு 50க்கு மேற்பட்ட பாடசாலைகள் இருக்கவேண்டும் என்ற நிபந்தனையை மறுபரிசீலனை செய்யுமாறு கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருக்கிறோம். அதனை மறுபரிசீலனை செய்வதற்கு அவர்களும் தயாராகிக்கொண்டிருக்கின்றனர். இது ஒரு புறமிருக்க கல்முனைக்கும் கல்வி வலயம் என்று முழங்காலுக்கும் மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

மேலதிகமாக கிழக்கு மாகாணத்துக்கு நான்கைந்து கல்வி வலயங்கள் கொடுக்கப்பட்டபோது பொத்துவில் தொகுதி புறக்கணிக்கப்பட்டது ஏனென்ற கேள்வி நியாயமானது. அதனை யாரும் மறுதலிக்க முடியாது. இந்த கல்வி வலயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கான அனைத்து வேலைகளையும் முஸ்லிம் காங்கிரஸ் செய்துகொண்டிருக்கிறது. அதனை நிச்சயம் நாங்கள் பெற்றுக்கொடுப்போம் என்பதையும் சொல்லிக்கொள்கிறேன்.

நீர் வழங்கல் அமைச்சராக இருக்கின்;ற எனது காலத்தில் பொத்துவிலுக்கு குடிநீர் வசதி செய்துகொடுக்கப்படவில்லை என்றால், நான் எந்த வகையில் பொத்துவில் மக்களை எதிர்கொள்வேன். ஹெட ஓயாவை மறித்து குடிநீர் வழங்குவது மாத்திரமின்றி ஒரு நீர்ப்பாசனத் திட்டமும் அமைக்கப்பட வேண்டும் என்று பொத்துவிலுள்ள அனைத்து அமைப்புகளும் என்னிடம் அழுத்தமாக தெரிவித்துள்ளன.

நீர்ப்பாசனத் திட்டத்தை ஆரம்பித்தால், வனவிலங்குளின் மேய்ச்சல் தரைகள் நீரில் மூழ்கிவிடும், மக்கள் குடியிருப்புகள் நீரில் மூழ்கிவிடும் என்றெல்லாம் புதுப்புது புரளிகளை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். அவை எல்லாவற்றிலும் பின்னணியிலும் இனவாதம் இருப்பது என்பது தெரியாத ஒரு விடயமல்ல. ஆனாலும், அந்த தடைகளையும் தாண்டி நீர்;ப்பாசன அமைச்சராக இருக்கின்ற விஜிதமுனி செய்சா ஹெட ஓயா நீப்பாசனத் திட்டத்தை அமைப்பதற்கும், குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கும் எமக்கு அனுமதியளித்துள்ளார்.

ஹெட ஓயா திட்டத்தை அமுல்படுத்துவதற்கு அதிக பணம் தேவை என்று பிழையான அறிக்கையை உலக வங்கிக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வழங்கியுள்ளது. அவர்கள் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் 300 மில்லியன் டொலர் தேவைப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அதனால் உலகி வங்கி பின்வாங்கிய நிலையில், நான் அதற்கு 200 மில்லியன் டொலர்கள் தாராளமாக போதும் என்று கூறியுள்ளேன். இதனால், அதனை மறுபரீசிலனை செய்து நிதியை பெற்றுக்கொடுப்பதற்கு உலக வங்கியிடம் சிபார்சு செய்யப்பட்டுள்ளது.

பொத்துவில் குடிநீர் திட்டத்துக்கு சீன அரசாங்கத்தின் நிதியுதவி தயாராக இருக்கின்றது. ஆனால், இதனுடன் சேர்த்து குடிநீர் திட்டமும் அமுல்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக மேலதிகமாக பணம் தேவைப்படுகிறது. அதனாலேயே நாங்கள் உலக வங்கிய நாடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. என்னுடைய பதவிக்காலத்துக்குள் குடிநீர் திட்டம் வழங்கப்படும். ஹெட ஓயா மூலம் நீர் வழங்கப்படவில்லை என்றால் கடல்நீரையாவது சுத்திகரித்து குடிநீரை வழங்குவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைமை தவறமாட்டாது.

காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாங்கள் பாராளுமன்றத்தில் உயர்மட்ட சந்திப்பொன்றை நடத்தியிருந்தோம். கிழக்கு மாகாணத்திலுள்ள காணிப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரடியாக அழைத்து அதுகுறித்த தெளிவான கலந்துரையாடல்களை நடாத்தினோம். அதில் றத்தல் காணிகள் உள்வாங்கப்படாமையினால், இங்குள்ளவர்களின் வேண்டுகோளுக்கிணங்க அடுத்த வாரம் நாங்கள் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்துள்ளோம்.

யானைகள் செல்வதற்கு வழி தேவை என்று புதிய கதைகளை சொல்கின்றார்கள். இதன் பின்னால் பல சூழ்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. மறிச்சுக்கட்டியிலும் இவ்வாறான பிரச்சினைகள்தான் காணப்படுகின்றன. காணிப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைத்திருக்கிறார். அதன்மூலம் நாங்கள் காணிப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுத்துக்கொண்டு வருகிறோம்.

மறிச்சுக்கட்டி, கரடிக்குழி, வில்பத்து பிரச்சினைகள் சம்பந்தமாகவும் பேசுவதற்கு நாங்கள் திங்கட்கிழமை ஜனாதிபதியின் சுற்றாடல் அமைச்சின் செயலாளரை சந்திக்கவுள்ளோம். அதில் நாங்கள் எல்லா நியாயங்களையும் பேசுவதற்கு தயாராக இருக்கின்றோம். இந்த மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கட்சி சகல வகையான முயற்சிகளை மேற்கொண்டுதான் இருக்கின்றது.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் குறைபாடுகளை பிரதியமைச்சர் பைசால் காசீம் நிறைவேற்றிக்கொடுப்பார். அதன் முதற்கட்டமாக இன்று 490 மில்லியன் ரூபா பெறுமதியான மூன்று மாடிக் கட்டிடத்துக்காக அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. இது 4 மாடிக் கட்டிடம் என்று வைத்தியசாலை தரப்பில் தவறாக கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து பைசால் காசிம் விளக்கமளித்தபோது, அவர் பொத்துவில் மக்களை தரக்குறைவாகப் பேசியதாக ஒரு கூட்டத்தார் குழப்பங்களை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தனர். அதுபோல, மாகாணசபை உறுப்பினர் தவத்துக்கு எதிராக சில புரளிகள் கிளப்பட்டுள்ளன.
உங்களது வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்டவர்கள் உங்களுடன் முரண்பட்ட வகையில் நடந்துகொள்ள மாட்டார்கள். அதுபோல ஆசிரியர் இடமாற்றம் செய்வதிலும் பலர் முரண்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். கல்முனை கல்வி வலயத்தில் அதிகளவான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள். இருந்தாலும் அதற்குள்தான் எல்லோரும் இடமாற்றம் பெற்றுச்செல்ல வருகின்றார்கள். அதனால் ஆசிரியர் இடமாற்றத்துக்கு சிபார்சு செய்வதிலிருந்து நான் ஒதுங்கியிருக்கிறேன்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM