Web
Analytics
ஓய்வின்றி சமூகப்பாதுகாப்பில் எமது தலைமை - Sri Lanka Muslim Congress

எம்.என்.எம்.யஸீர் அறபாத்- ஓட்டமாவடி(கல்குடா)

இலங்கையில் முப்பது வருட யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு சமாதானத்தை நோக்கி நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் சந்தர்ப்பத்தில் ஒரு சில இனவாதிகள் சிறுபான்மையினருக்கெதிரான வன்முறையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குறிப்பாக, இன்று முஸ்லிம் சமூகம் இலக்கு வைக்கப்பட்டு தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களின் பொருளாதாரம், உடமைகள், உயிர்கள் இனவாதத்தீயினால் எரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

முஸ்லிம்கள் இந்த நாட்டில் இன்னுமொரு யுத்த அழிவு ஏற்படுவதை விரும்பவில்லை. சமாதானமாகவே வாழ விரும்புகிறார்கள். இதனால் தங்களுக்கெதிரான அனைத்து வன்முறைகளையும் உச்ச கட்ட பொறுமையைக் கொண்டு சகித்துக் கொள்கிறார்கள்.

இதனை சில இனவாதிகள் அச்சமடைந்து விட்டார்கள்,அவர்களை இத்துடன் நசுக்கி விடலாமென்ற தோரணையில் அராஜகங்களை கட்டவிழ்த்து விடுகிறார்கள்.

அவ்வாறான செயற்பாடுகளில் ஒன்றாக கடந்த ஆட்சியில் அலுத்கம, பேருவளை கலவரங்களையும், அதனைத்தொடர்ந்து அரசியலில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பின்னரான முஸ்லிம்களுக்கெதிரான திட்டமிட்ட வன்முறைச் செயற்பாடுகளையும் குறிப்பிடலாம்.

அண்மையில் அம்பாறை தொடங்கி கண்டி வரை தற்போது நடைபெற்று முடிந்திருக்கும் முஸ்லிம்களுக்கெதிரான பேரினவாதிகளின் தாக்குதல்களைப் பார்க்கலாம்.

இவ்வாறான சம்பவங்களின் போது முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மிகக்காத்திரமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும், அதன் தலைமையும் செயற்பட்டுக் கொண்டிருப்பதை நாம் மறுக்க முடியாது.

பொறுப்புள்ள கட்சி என்ற வகையிலும் சமூகத்தலைமை என்ற வகையிலும் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தன்னாலான அனைத்து வழிகளினூடாகவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை நோக்காகக் கொண்டு செயற்படுவதை நாம் பார்க்கலாம்.

அம்பாறையில் இனவாதச்செயற்பாடு ஆரம்பித்த போது, அவை தொடர்பில் உடனடியாக அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு வந்ததோடு, அன்றைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக இருந்த பிரதமரின் கவனத்திற்கும் கொண்டு வந்தார்.

பின்னர் பிரதமரை ஒலுவில் பிரதேசத்திற்கு அழைத்து வந்து இவைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வைப்பெறும் நோக்கில் செயற்பட்டதையும், காடையர்களுக்கெதிராக சட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தியதையும் அதற்கான உறுதிமொழிகளை பிரதமர் வழங்கியதையும் நாம் மறப்பதற்கில்லை.

அதன் பின்னர் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் அம்பாறையில் பிரச்சனை நடந்ந இடங்களுக்குச் சென்று பார்வையிட்டதோடு, சேதமடைந்த பள்ளிவாயலை புனர்நிர்மானம் செய்வதற்கான நிதியத்தை ஆரம்பித்ததோடு, அதற்காக பத்து இலட்சம் பணத்தை கட்சி சார்பாக வழங்க முன்வந்தார்.

அத்துடன், ஏனையவர்களையும் இதற்காக உதவுமாறு அழைப்பும் விடுத்திருந்தார். இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் கண்டிப்பிரதேசத்திலும் இனவாதச்சம்வம் இடம்பெறவிருப்பதாக தகவல் கிடைக்கவே உடனடியாக கண்டி உதவிப்பொலிஸ் மா அதிபர் மஹிந்த ஏக்கநாயக்கவைத் தொடர்பு கொண்டு விசாரித்த போது பிரச்சனை ஏதுமில்லை என அவர் கூறினார்.

இருந்த போதும் முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். ஆனால், திட்டமிட்டவாறு மறுநாள் பிரச்சனைகள் ஆரம்பித்தன. பொலிசாரால் கட்டுப்படுத்த முடியவில்லை. இனவாதிகள் திட்டமிட்டவாறு தங்களின் வெறியாட்டத்தை முஸ்லிம்களின் பள்ளிவாயல்கள், பொருளாதாரங்கள், உடமைகள் மீது நடத்தினார்கள்.

இதனால் ஒரு முஸ்லிம் இளைஞனும் மரணித்தார். ஆனாலும், அவர்கள் அடங்கவில்லை. தொடர்ந்தும் கண்டியில் பல பாகங்களில் இந்த பிரச்சனையை ஆரம்பித்து முஸ்லிம்களை நிலைகுலையச் செய்தார்கள்.

அரசாங்கமும் உரிய பாதுகாப்பை வழங்கி இக்கலவரத்தைக் கட்டுப்படுத்தவில்லை. முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகவே இருந்தது.

கண்டியில் பிரச்சனை ஆரம்பித்த போதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அவர்கள் இஸ்தலத்திற்கு விரைந்தார்கள். அங்கு செல்வதற்கு அவருக்கு பாதுகாப்புத்தரப்பு அனுமதி மறுத்த போதும் அதை கருத்திற்கொள்ளாது சமூகத்தின் இருப்பை உறுதிப்படுத்தி அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில் அந்த இடங்களை அடைந்து பாதுகாப்புகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தியதை யாரும் மறப்பதற்கில்லை.

கண்டியில் வெவ்வேறு பிரதேசங்களிலிருந்து அழைப்பு வந்த போது, அந்த இடங்களை நோக்கி நல்லிரவிலும் பயணம் செய்து அவர்களுக்கு உதவி செய்தது மட்டுமல்ல, அவர்களின் பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற்கொண்டு உயர்மட்ட அதிகாரிகளுடன் பேசி அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்தார்.

இலங்கையின் நாலா பாகத்திலும் இருக்கும் முஸ்லிம் சகோதரர்கள் கண்டி முஸ்லிம்களுக்கு என்ன நடக்கிறது? அவர்களின் பாதுகாப்பு நிலை என்ன? யார் அங்கு இவைகளை ஒழுங்குபடுத்துகிறார்கள் என்ற யோசனை ஒரு பக்கம் இருக்க, சமூக வலைத்தளங்களூடாக பரப்பப்பட்ட செய்திகளின் உண்மைத்தன்மை அறியாமல் கலங்கிப் போயிருந்த எம்மவர்களுக்கு தெளிவை ஏற்படுத்தவும், சம்பவங்கள் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் நமது சமூகத்திற்கு மாத்திரமின்றி. அரசிற்கும் சர்வதேச நாடுகளிலுள்ளவர்கள் நிலைமைகளை அறிந்து கொள்ளும் வண்ணம் களத்திலிருந்து கொண்டு எல்லா விடயங்களையும் தனது ஊடகத்தினூடாக உடனுக்குடன் வெளிக் கொண்டு வந்தார். முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள்.

இவைகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களாக தேசியமும், சர்வதேசமும் பார்த்தது. அது மாத்திரமல்ல, ஆங்கில மொழியினூடாக சர்வதேச மக்களும் முஸ்லிம்களுக்கெதிராக நடக்கும் சம்பவங்களை அறியும் வண்ணம் விளக்களித்தார்.

மறுநாள் அமைச்சரவையிலும், அன்றைய நாள் பாராளுமன்றத்திலும் இவைகள் தொடர்பாக கடும் தொனியில் உரையாற்றியிருந்ததோடு, இனவாதிகளைத் தண்டிக்கவும், இனவாதச் செயற்பாடுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவும் கண்டியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொலிஸாரின் அசமந்த போக்கை கண்டித்தும் பேசியிருந்தார்.

இதன் பின்னர் கண்டி நிர்வாக மாவட்டத்திற்குள் ஊரடங்குச்சட்டமும் நாட்டில் அவசரகாலச் சட்டமும் போடப்பட்டு கண்டி நகருக்குள் முப்படையின் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

இவ்வாறான பாதுகாப்புகள் இருந்த போதும், முஸ்லிம்கள் நிம்மதியாக இருக்கவில்லை. காரணம் ஊரடங்குச்சட்டம் பிறப்பித்த காலப்பகுதியில் இனவாதிகளின் அட்டகாசமும் அதிகரித்துக் காணப்பட்டது.

இதனால் மக்கள் பாதுகாப்புத்தரப்பில் நம்பிக்கையிழந்தவர்களாகவே காணப்பட்டார்கள். இந்த பிரச்சனை ஆரம்பிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் இரவு, பகலாக அந்த மக்களோடு மக்களாக நின்று அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும், இழப்புகள் அதிகரித்துச் செல்வதைத் தடுப்பதிலும், அதற்காக ஜனாதிபதியோடும், பிரதமரோடும் பேசி அழுத்தங்களைக் கொடுத்து செயற்பட்டதையும் மறக்க முடியாது.

இக்காலப்பகுதிற்குள் சிலரின் தவரான புரிதல்களால் அல்லது அரசியல் அஜந்தாக்களால் தலைவர் அவர்கள் தூசிக்கப்பட்டாலும், அதனைப் பொறுட்படுத்தாது தனது கடமையை முடியுமானவரை சிறப்பாக முன்னெடுத்தார்.

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் களத்தில் ஓய்வின்றி செயற்பட்டதால் அண்மையில் சுகயீனமுற்றிருந்தார். இந்நிலைமையிலும் தனது ஆரோக்கியத்தைக் கவனத்திற்கொள்ளாது, சமூகக்கடமையை நிறைவேற்றுவதற்காக தூக்கமின்றி செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பொறுப்புணர்வுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஒருவரை தவறாகப் பேச வேண்டாம் என்பதுடன், ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளும் தங்களால் முடிந்தளவு செயற்பட்டார்கள்.

அதே போல் முஸ்லிம் சிவில் அமைப்புகளும் இவ்விடயங்களில் தங்களாலான நடவடிக்கைகளை முன்னெடுத்தார்கள் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM