Web
Analytics
கட்சிக்கு சவால் வருகின்ற போதெல்லாம் கோடாரிக் காம்புகளுக்கு பதில் சொல்கின்ற முதல் மண்ணாக கல்முனை இருக்கின்றது. - Sri Lanka Muslim Congress

(றியாத் ஏ. மஜீத் )

கட்சிக்கு சவால்கள் வருகின்ற போதெல்லாம் கோடாரிக் காம்புகளுக்கு பதில் சொல்கின்ற முதல் மண்ணாக எப்பொழுதும் கல்முனைத் தொகுதி மண் இருந்திருக்கின்றது.

சகேதரர் றிசாத், அதாவுள்ளா அல்லது பசீர் சேகுதாவுத் யார் வந்தாலும் அம்பாறை மாவட்டத்தில் கட்சியை பலவீனப்படுத்த முடியாது. இவர்களை நம்பி இம்மாவட்ட மக்கள் பின்னால் செல்லமாட்டார்கள் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எச்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீசின் ஏற்பாட்டில் மண்ணெல்லாம் மரத்தின் வேர்களால் அபிவிருத்தி பணிகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வும் மாபெரும் பொதுக்கூட்டமும் வெள்ளிக்கிழமை (31) கல்முனைத் தொகுதி சாய்ந்தமருது, மருதமுனை, கல்முனை, சேனைக்குடியிருப்பு பிரதேசங்களில் கோலாகலமாக இடம்பெற்றது.

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சேனைக்குடியிருப்பு, இஸ்லாமாபாத், பெரியநீலாவணை ஆகிய பிரதேசங்களில் நிர்மாணிக்கபட்ட சனசமூக சுகாதார நிலையம், மருதமுனை அல்-ஹம்றா, அல்-மனார் ஆகிய பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்கள், சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையில் விஸ்தரிப்பு செய்யப்பட்ட வெளிநோயாளர் பிரிவு, புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிற்றூண்டிச்சாலை, மருத்துவ உபகரணங்கள், விஸ்தரிப்பு செய்யப்பட்ட கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலை, கல்முனை கிறீன்பீல்ட் றோயல் பாடசாலை புதிய வகுப்பறைக் கட்டட நிர்மாணம் போன்ற அபிவிருத்தி பணிகளை மக்கள் பாவனைக்கு கையளித்து வைத்ததுடன் புதிய அபிவிருத்தி பணிகளையும் ஆரம்பித்து வைத்தார். இதன்போது இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு பிரதி அமைச்சர் ஹரீஸ் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசீம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், அலிசாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.றஸ்ஸாக், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம்.மாஹிர், ஏ.எல்.தவம், உள்ளிட்ட கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

பிரதி அமைச்சர் ஹரீஸ் தொடர்ந்து உரையாற்றுகையில்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை மறைந்த தலைவர் அஷ்ரஃப் பிரகடனப்படுத்திய காலம் முதல் கல்முனைத் தொகுதி அதன் கோட்டையாக காணப்படுகிறது. இக்கட்சியின் முதலாவது பிரச்சாரக் கூட்டத்தில் மறைந்த தலைவர் கூறியதாவது அபிவிருத்தி மற்றும் வேலைவாய்ப்பு என்பவற்றை தரமாட்டேன் ஆனால் முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க போராடுவோம். இதற்காக தமது உயிர்களை தியாகம் செய்வதற்கும் தயாராகி இக்கட்சியில் இணைய வேண்டும் என்று கூறினார். அன்று முஸ்லிம் பிரதேசம் பாதுகாப்பற்று, உரிமைமைகளை இழந்து, வாடி வதங்கிய சூழலில் அவருடைய பேச்சின் உத்வேகம் இரவோடு இரவாக, ஒரே நாளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக கல்முனை மாறியது. அன்று முதல் இன்றுவரை இக்கோட்டையை யாராலும் தகர்க்க முடியாமல் உள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிக்கு மாற்று அரசியல் செய்தவர்கள் பலபேர் இக்கட்சியை உடைத்து இம்மண்ணில் பலவீனப்படுத்த வேண்டுமென்று முற்பட்டபோதெல்லாம் அவற்றை கல்முனைத் தொகுதி மக்கள் முறியடித்தனர். குறிப்பாக றவூப் ஹக்கீம் தலைமையேற்ற தினத்திலிருந்து இக்கட்சியினை முன்னெடுத்துச் செல்வதற்கு ஏற்பட்ட அத்தனை சவால்களையும் கல்முனைத் தொகுதியில் உள்ள கல்முனை, சாய்ந்தமருது, நற்பிட்டிமுனை, இஸ்லாமபாத், மருதமுனை போன்ற பிரதேசங்கள் முறியடித்து மிகப் பெரிய தைரியத்தை கொடுத்து பக்க பலமாக இருந்ததை நாங்கள் மறக்க முடியாது.

அண்மைக் காலத்தில் கட்சியின் சிலரை குறிப்பாக செயலாளர் நாயகம் ஹசன் அலியை வெளியேற்றியபோது கட்சியில் என்ன நடக்குகின்றது என்று முகநூல் ஊடாக பல்வேறு கருத்துக்களும் கட்சிக்கு எதிரான பிரச்சாரங்களும் உலாவிக் கொண்டிருந்தது. கட்சியை விட்டும் வெளியேற்றப்பட்டவர்களின் உண்மை முகம் அறிந்த மக்கள் மத்தியில் இம்முகநூல் புனைகதைப் பிரச்சாரம் ஒருபோதும் வெற்றி அளிக்காது எனத் தெரிவித்தோம். அதனை நாம் கண்கூடாகவும் கண்ணுற்றோம்.

நிந்தவூரில் கூட்டமொன்றை வைத்து சில மோசமான பிரச்சாரங்கள் மேற்கொண்டதன் ஊடாக இந்தக் கட்சியினை பலவீனப்படுத்த நினைத்தது வெறும் பகற்கனவாகும். அக்கூட்டத்தின் பின்னர் பாலமுனை, பொத்துவில் ஆகிய பிரதேசங்களில் கூட்டம் வைத்து தோல்வி கண்டனர். தற்போது சாய்ந்தமருது, மருதமுனை ஆகிய பிரதேசங்களில் கூட்டம் வைப்பதற்கு இரண்டு மாதங்களாக முயற்சித்து முடியாமல்போனது. இது மக்கள் இவர்களை நம்பி போவதற்கு தயார் இல்லை என்ற செய்தியை சொல்லியிருப்பதாக அமைகிறது.

இன்று நடைபெறும் இந்த கூட்டத்தில் திரண்டிருக்கும் மக்கள் வெள்ளம் இவர்களை நம்பி போவதற்கு தயார் இல்லை என்ற செய்தியை உறுதிப்படுத்தி விட்டார்கள். கட்சிக்கான சவால்கள் இந்த மாவட்டத்தில் இல்லை என்பதை மிக ஆணித்தரமாக கூறுகின்றேன். சகேதரர் றிசாத், அதாவுள்ளா அல்லது பசீர் சேகுதாவுத் யார் வந்தாலும் இந்த மாவட்டத்தில் இந்தக் கட்சியை பலவீனப்படுத்த முடியாது. அதற்கு இந்த மாவட்ட மக்கள் பின்னால் செல்லமாட்டார்கள் என்ற விடயம் மீண்டுமொருமுறை இன்று நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. கட்சிக்கு இவ்வாறான சவால்கள் வருகின்ற போதெல்லாம் கோடாரிக் காம்புக்கு பதில் சொல்கின்ற முதல் மண்ணாக எப்பொழுதும் இந்த கல்முனைத் தொகுதி மண் இருந்திருக்கின்றது.

மறைந்த தலைவர் விட்டுச்சென்ற பணிகளை சிறப்பாக தற்போதைய தலைமை முன்னெடுத்து இந்தக் கட்சியை பாதுகாத்து வருகின்றார். இத்தலைமைப் பதவியில் வேறு ஒருவர் இருந்திருந்தால் மர்ஹும் அஸ்ரப் இம்மண்ணில் உருவாக்கிய இக்கட்சி இன்று இருப்பதுபோன்று ஒரு தேசிய முஸ்லிம் கட்சியாக இருந்திருக்க மாட்டாது. ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு கட்சி, ஒவ்வொரு இயக்கம் என்று இந்த நாட்டு முஸ்லிம்கள் பிளவு பட்டிருப்பார்கள். வெளிநாட்டு உளவாளிகளினால் இக்கட்சி துண்டு துண்டாகி இருக்கும். நாட்டின் ஆட்சியாளர்கள் தலைவர்கள் இக்கட்சியினை விலைபேசி அவர்களுடைய காலில் விழுந்து கிடக்கின்ற அடிமைக் கட்சியாக மாற்றியிருப்பார்கள். இவ்வாறான இந்த சதி முயச்சிகளையெல்லாம் தாண்டி கடந்த 17 வருடங்களாக எமது தலைமை பல வழக்குகள், போராட்டங்கள், சதிமானங்கள் எல்லாவற்றையும் தாண்டி இம்மண்ணில் உருவாக்கப்பட்ட இக்கட்சியை இம்மக்களுக்காக பாதுகாத்துவருகின்றார். அதற்காகவது நாங்கள் நன்றிக் கடன் பட்டிருக்க வேண்டும். அதற்கு மேலாக முஸ்லிம் சமூகம் ஆபத்துக்களை எதிர்கொண்டபோதும் அவற்றுக்கு எதிராக இத்தலைமை செயற்பட்டது.

வீராப்பு பேசுகின்ற சகோதரர் றிசாத் பதியுதீன் இன்று வில்பத்து சம்பந்தமாக அன்று தொலைக்காட்சியில் வந்து ஜனாதிபதிக்கு நெஞ்ஞை நிமிர்த்தி சவால் விட்டவர் இன்று எங்கே?. சகோதரர் ஹுனைஸ் பாறுக் கூறியதுபோன்று வில்பத்து பிரச்சினை தொடர்பாக ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் கலந்து கொள்ள வேண்டும் என்று உலமா சபையிடம் மண்டியிட்டு கெஞ்சுகின்ற ஒரு கோழையாக இருக்கின்றார். இந்த நாட்டின் 20 இலட்சம் முஸ்லிம்களை தலைமை தாங்கி அவர்களின் தலை எழுத்தை தீர்மானிக்கும் தகுதி இல்லாத ஒருவர்தான் றிசாத் பதியுதீன் என்பதை இதிலிருந்து நாங்கள் புரிந்து கொள்ளலாம்.

நாங்கள் மலையாக நம்பிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து 3 மாத்திற்குள்ளாகவே இந்த பாராளுமன்ற தேர்தல் முறையை மாற்றி தொகுதிவாதி தேர்தல் முறையைக் கொண்டுவந்து சிறுபான்மைக் கட்சிகள் அத்தனையையும் இந்நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும் என்று முற்பட்டபோது றிசாத் பதியுதீன், மனோகணேசன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியோருக்கும் சேர்த்து தன்னந்தனியாக போராடி அந்தவிடயத்தை தடுத்து நிறுத்தி பாராளுமன்ற தேர்தல் நடைபெற வைத்தவர் எமது தலைவர் மட்டும்தான் என்பதை இந்த மக்களும் இந்த போராளிகளும் புரிந்து கொள்ள வேண்டும்.

அதேபோன்று தற்போது கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு பின்பு புதிய அரசியல் அமைப்பை உருவாக்க அரசு முற்படுகின்றது. ஒரு நாட்டின் சமூகத்தினுடைய தலை எழுத்தை தலைவிதியாக மாற்றக் கூடிய ஒரு விடயம்தான் அரசியல் அமைப்பு என்னும் விடயம். இதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருடைய அனுசரணை இல்லாமல் முஸ்லிம் சமூகம் சம்பந்தமாக தீர்மானம் எடுக்க முடியாது என்பதை அரசும் ஏனைய கட்சிகளும் உணர்ந்துள்ளது.

முஸ்லிம் சமூகத்தின் அனுசரணை இல்லாமல் வடகிழக்கை இணைக்க முடியாது என சுமந்திரன் எம்பி சொல்லுகிறார். அன்று வடக்கு, கிழக்கு மாகாண முஸ்லிம்களை ஒரு பொருட்டாக நினைக்காமல் இந்திய அரசாங்கம் 1987 ஆம் ஆண்டு வடகிழக்கு இணைப்பை செய்துவிட்டது. கேவலம் அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றையேனும் செய்ய முடியாத பீதியான சூழ்நிலை அன்று காணப்பட்டது. ஆனால் இன்று முஸ்லிம்களுடைய ஏகபிரதிநிதி முஸ்லிம் காங்கிரசின் அனுமதி இல்லாமல்; வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை, இதனால் இணைப்பில்லாத ஒரு தீர்வைத்தான் இந்திய அரசு இலங்கை அரசிடம் பேசமுடியும் என்பதை இந்திய அரசு தமிழ் தலைமைகளிடம் தெளிவாக சொல்லி சொல்லி இருக்கிறார்கள்.

இந்திய அரசு இவ்வாறான நிலைப்பாட்டில் இருப்பதற்கு காரணம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் அதன் தலைமையும் ஆகும். இவர்கள் முன்னிலையில் முஸ்லிம்களுக்கு அநீதி செய்ய முற்பட்டால் இலங்கை அரசை மட்டுமல்ல இந்திய அரசையும் சர்வதேச அரங்கு குற்றவாளி கூண்டில் நிறுத்தி வாதிட்டு தீர்ப்பை பெறுகின்ற ஒரு தகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு இருக்கின்றது என்பதை இந்திய அரசு உணர்ந்திருக்கின்றது.

கல்முனைத் தொகுதியில் 8 அபிவிருத்திகளை மக்கள் பாவனைக்கு கையளித்துள்ளோம். இதனைவிட மேற்கு வட்டையில் மறைந்த தலைவருடைய கனவான ஒரு பெரும் நகரம் என்ற அபிவிருத்தி எம்மனைவரதும் உயிர் மூச்சாக இங்கிருக்கின்றது. அதனை பிரதமர் அறிவித்தபடி அரசாங்கம் வந்தவுடன் தலைவர் கல்முனை நகரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக மிகுந்த கருசனையுடன் செயற்பட்டு வருகின்றார். இதனை நீண்டகால நிரந்தரமான திட்டமாக உருவாக்க வேண்டும் என்று மொரட்டுவை பல்கலைக்கழக பேராசிரியர்கள், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியல் நிபுணர்கள் என்று ஒரு பெரும் குழுவை நியமித்து இதற்கான பெருந்திட்ட வரைபை மேற்கொள்வதற்கு கிட்டத்தட்ட 200 மில்லியன் ரூபாய்க்கள் ஒதுக்கீடு செய்து அதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM