கடும் சர்ச்சைக்குள்ளான திருகோணமலை கருமலையூற்று பள்ளிவாசலை மீண்டும் சுவீகரிக்கும் நடவடிக்கைகள் சூட்சுமமாக எடுக்கப்பட்டுள்ளதாக சபையில் குற்றம் சாட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தனது கடுமையான காரணத்தையும் வெளியிட்டார்.

இராணுவத்தினர் இவ்வாறு பாரம்பரிய காணிகளை திட்டமிட்டு சுவீகரிக்கும் செயற்பாடுகளை எதிர்காலத்தில் முற்றாக கைவிட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கைமீட்க முடியாத நன்கொடை உறுதிகளை முழுமையான நன்றியீனம் எனும் ஏதுவின் மீது கைமீட்டல் மற்றும் இலங்கை அரசாங்கம், யுக்ரேன் அரசாங்கத்திற்கு மிடையே குற்றவியல் கருமங்களின் பரஸ்பர சட்ட உதவியளித்தல் பற்றி ஏற்படுத்தப்பட்ட கட்டளைகளை அங்கீகரிப்பது தொடர்பான சட்ட மூலங்களின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில், திருகோணமலை நாச்சிக்குடா, வெள்ளைமணல் கருமலையூற்று பள்ளிவாசல் விடயம் ஏற்கனேவே கடும் சர்ச்சைக்குரிய விடயமாக காணபடுகின்றது. முன்னதாக புராதனப் பள்ளிவாசல்களில் ஒன்றாக கருமலையூற்றுப்  பாள்ளிவாசல் அமைந்துள்ளதும் அதனைச் சூழவுள்ளதுமான காணிகளை கையகப்படுத்துவதற்கு முயற்சிகள் மேட்கொள்ளபட்டன.

இதன்போது 2ஆம் உலக யுத்தத்தில் புகழ்பெற்றிருந்த பாரம்பரிய பள்ளிவாசலான கருமலையூற்றுப் பள்ளிவாசல் சிதைக்கப்பட்டது. இதனால் கடுமையான சர்ச்சைகள் எழுந்தன. அதற்கு எதிராக கிழக்கு மாகாணசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் பின்னர் குறித்த விடயம் சம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் இராணுவத்தினருடன் மேட்கொள்ளப்பட்டது. குறித்த பிரதேசத்திற்கும் நேரடியாகச் சென்றிருந்தோம். இந்த சூழலில் சிதைக்கப்பட்ட அந்த பாரம்பரிய பள்ளிவாசலை மீண்டும் அமைத்துத் தருவதாக இராணுவத்தினர் உறுதியளித்தனர்.

அனால் தற்போது நிலைமை மாறியிருக்கின்றது. காணி எடுத்தற் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் கருமலையூற்று பள்ளிவாசல் அமைந்துள்ள காணி உட்பட அதனைச் சூழவுள்ள 4.65 ஹெக்டயர் பரப்பளவான காணியை இராணுவத்தினரின் தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தல் ஒன்றை திருகோணமலை பட்டினும் சூழலும் பிரதேச செயலாளர் விடுத்துள்ளார்.

முஸ்லிம்கள் பூர்வீகமாகவும் பாரம்பரிய பள்ளிவாசலும் காணப்படும் இக்காணிகளை சுவீகரிப்பதற்கு சூட்சுமமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு நான் இந்த சபையில் கடுமையான கண்டனத்தை தெரிவிப்பதோடு நல்லிணக்கம் தொடர்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கும் இத்தருணத்தில் இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகளை இரகசிகமாக முன்னெடுப்பதை கைவிட வேண்டும் என்றார்.

ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ் – (நன்றி – விடிவெள்ளி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM