Web
Analytics
கலைஞர் மு. கருணாநிதியின் மறைவு குறித்து முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தி. - Sri Lanka Muslim Congress

அரசியல் எதிரிகள் கூட மெச்சுகின்ற அளவிற்கு குறிப்பாக தமிழ் நாட்டிலும் பொதுவாக இந்தியத் துணைக்கண்டத்திலும் புகழ் ஏணியின் உச்சத்தில் நின்ற மறைந்த கலைஞர் கருணாநிதி, அவரது அந்திம காலத்தில் தமக்கெதிராக தெரிவிக்கப்பட்ட விமர்சனங்களைக்கூட மிகவும் இலாவகமாக எதிர் கொண்டு அரசியலில் சாதனை படைத்தவராக வரலாற்றில் இடம்பெறுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அன்னாரின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

திராவிட இயக்கத்தின் பிதாமகர்களில் ஒருவரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் தமிழக முதல்வரும், தலைசிறந்த அறிஞரும் கலைஞருமான முத்துவேல் கருணாநிதியின் மறைவினால் தமிழ் பேசும் நல்லுலகு ஆழ்ந்த கவலையடைந்திருக்கின்ற இந்த வேளையில் நாமும் அதில் பங்குகொள்கின்றோம்.

மறைந்த கலைஞர் கருணாநிதியை சந்தித்து கலந்துரையாடும் வாய்ப்பு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் எனக்கு கிடைத்திருக்கிறது. தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தை வழங்கியதையொட்டி நடைபெற்ற மாநாட்டில் அவரது விஷேட அழைப்பை ஏற்று கலந்து கொள்ளக்கிடைத்தமையையும் பெரும் பேறாகக் கருதுகின்றேன். தமிழில் ஊறித்திளைத்து, அதனோடு ஒன்றிப்போய் பராசக்தி மற்றும் மனோகரா முதலான படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியது தொட்டு, தொல்காப்பிய உரை போன்றவற்றினூடாக அவரது ஈடுபாடு சிறப்பாக வெளிப்பட்டது. அடுக்கு மொழியிலே ஆற்றோட்டம் போல தமிழை கையாள்வதில் அவர் ஒப்பாரும் மிக்காரும் இன்றித் திகழ்ந்தார்.

தமிழ் மொழியும், அரசியலும் அவரது இரு கண்களாக இருந்தன. தமிழ் நாட்டு அரசியலில் மட்டுமல்லாது, இந்திய தேசிய அரசியலிலும் அவர் அதிக செல்வாக்குச் செலுத்தினார்.தமக்கே உரித்தான பேரம் பேசும் ஆற்றலைப் பயன்படுத்தி தமிழகத்திற்கு அவர் வழங்கிய அரசியல் பங்களிப்பு மகத்தானது. மத்திய அரசின் தலைமைகளை மண்டியிடச் செய்வதிலும், அவ்வப்போது இந்திய தேசிய அரசியலில் முண்டுகொடுப்பதிலும் கூட வல்லவராக அவர் அறியப்பட்டிருந்தார்.

பெரியார் ஈ.வே.ராவின் கொள்கையில் அவர் அபிமானம் கொண்டிருந்தார். அறிஞர் அண்ணாதுரையோடு ஒரே பாசறையில் வளர்ந்த கலைஞர் கருணாநிதிக்கு , அவரது மதச்சார்பற்ற கொள்கையின் காரணமாக தமிழக முஸ்லிம்கள் மத்தியிலும், கடல் கடந்த நாடுகளில் வாழும் முஸ்லிம்கள் மத்தியிலும் தனியிடமிருந்தது. எங்களின் நேச சக்தியாக விளங்கும் தமிழ் நாட்டு முஸ்லிம் அரசியல் அமைப்புகள் கூட அவ்வப்போது அவரோடு இணைந்து செயல்பட்டுள்ளன.

அன்னாரின் மறைவினால் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் மகன் ஸ்டாலின்,மகள் கனிமொழி உட்பட அவரது குடும்பத்தினர் தி.மு.கா. தொண்டர்கள், தோழர்கள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையிலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலும் ஆழ்ந்த அனுதாபங்களையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM