Web
Analytics
கல்முனை சந்தை புனர்நிர்மாண பணிகளை ஒரு வருடத்தினுள் பூர்த்தி செய்ய நடவடிக்கை..! - Sri Lanka Muslim Congress

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை பொதுச் சந்தைக் கட்டிடத் தொகுதி புனர்நிர்மாண திட்டத்தை விரைவில் ஆரம்பித்து, ஒரு வருட காலத்தினுள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

இத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு சந்தை வர்த்தகர்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பை வழங்க முன்வர வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கல்முனை பொதுச் சந்தைக்கு நேற்று புதன்கிழமை விஜயம் செய்து, அங்கு நிலவும் குறைபாடுகளை நேரடியாக கண்டறிந்து, வியாபாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;

“முன்னாள் அமைச்சர் ஏ.ஆர்.மன்சூர் அவர்களினால் 1980 ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட கல்முனை பொதுச் சந்தை, ஒரு காலத்தில் கிழக்கு மாகாணத்தின் பொருளாதார மத்திய நிலையமாக காணப்பட்டது. மிகவும் பழைமை வாய்ந்த இச்சந்தை கட்டிட தொகுதியை புனரமைப்பு செய்வதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.

இதன் புனரமைப்பு விடயத்தில் பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் மிகவும் கரிசனையுடன் முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். தற்போது அதற்கான காலம் கனிந்துள்ளது. கல்முனை மாநகர சபையின் முதல்வராக பதவியேற்றுள்ள நானும் அவரும் இவ்விடயத்தை ஒன்றிணைந்து முன்னெடுக்க தயாராகி விட்டோம்.

ஏற்கனவே இப்புனரமைப்பு திட்டத்திற்காக நகர திட்டமிடல், நீர் வழங்கல் அமைச்சின் மூலம் எமது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் 26 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். தற்போது இப்புனரமைப்புக்கான உத்தேச வரைபை தயாரித்துள்ள கட்டிடங்கள் நிர்மாண திணைக்களம், இதற்கு 56 மில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பீடு செய்துள்ளது. எவ்வாறாயினும் தேவைப்படும் பணத்தை அமைச்சர் ரவூப் ஹக்கீம், பிரதி அமைச்சர் ஹரீஸ் ஆகியோரின் ஒத்துழைப்புடன் எங்கிருந்தாவது கொண்டு வருவோம்.

முன்னாள் அமைச்சர் மன்சூர் அவர்கள், கடன் எடுத்தே இச்சந்தைக் கட்டிடத்தை நிர்மாணித்தார். தேவைப்பட்டால் நாமும் கடன் பட்டாவது இப்புனரமைப்பு திட்டத்தை முன்னெடுக்க திடசங்கற்பம் பூண்டுள்ளேன். இது விடயத்தில் நான் எத்தகைய அர்ப்பணிப்புகளையும் செய்வதற்கு தாயாராக இருக்கிறேன். இதனை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு வர்த்தகர்களின் ஒத்துழைப்பே முக்கியமானதாகும்.

சந்தை கடைகளுக்கான வாடகை நிலுவையை செலுத்துதல், ஒப்பந்தத்தை மீளமைப்பு செய்தல், தேவையற்ற கட்டுமானங்களை அகற்றுதல், புனரமைப்பு முடியும் வரை வியாபாரத் தளங்களை இடமாற்றுதல் போன்ற விடயங்களில் வியாபாரிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கின்றோம்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் அடுத்த வருடம் நடுப்பகுதிக்குள் புனரமைப்பு பணிகளை பூர்த்தி செய்து, தம்புள்ளை, பண்டாரவளை போன்று இங்கும் ஓர் அழகிய சந்தையை எம்மால் காண முடியும்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பொதுச் சந்தை மேற்பார்வையாளர் ஏ.எல்.எம்.இன்சாட் உட்பட தொழில்நுட்ப உத்தியோகத்தர்களும் வர்த்தகர் சங்க செயலாளர் ஏ.எல்.கபீர், உப தலைவர் ஏ.எச்.ரஸ்ஸாக் உள்ளிட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM