பிரதேசத்தில் நிலவும் காணி மற்றும் கல்வி தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலான கலந்துரையாடல் கூட்டம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நேற்று  (9) ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம். ஹனீபா, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ. அப்துல் ஜலீல், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தவிசாளருமான ஏ.எல். அப்துல் மஜீட், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜஃபர், காணி அலுவலகர், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ. அப்துல் பசீர், எம்.ஐ.எம். பிர்தௌஸ், ஏ. நிசார்தீன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்முனை மாநகர சபையினால் மேற்கொள்ளப்படும் திண்மக் கழிவகற்றல் செயற்பாட்டை செயற்திறன் மிக்கதாக மாற்றும்வகையில் மீள் சுழற்சி நிலையம் ஒன்றை சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைப்பதற்கான காணியை ஒதுக்கீடு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. மீள் சுழற்சி நிலயத்தினால் சூழல் மாசுபடும் நிலை இன்மையினால் அதற்கான காணியை கரைவாகு பிரதேசத்தில் நிறப்பப்பட்ட காணியில் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. மருதமுனை, நீலாவணை ஆகிய பிரதேசங்களில் ஏற்கனவே மீள் சுழற்சி நிலையங்கள் தொழிற்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

அத்தோடு, கல்முனை மஃமூத் மகளீர் கல்லூரியில் தொழில்நுட்ப பிரிவில் 35 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கின்றபோதிலும் அதற்குரிய ஆசிரியர் இன்மையினால் மாணவிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸிடம் தெரிவித்தனைத் தொடர்ந்து குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணும்வகையில் வலயக் கல்விப் பணிப்பாளருடன் இதன்போது கலந்துரையாடப்பட்டு தீர்வு காணப்பட்டது.

இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் உரையாற்றுகையில், அரச நிறுவனங்கள், பொது அமைப்புக்கள் என்பவற்றிற்கு கரைவாகு பிரதேசத்தில் நிரப்பப்பட்ட காணிகளை வழங்கும்போது வெளிப்படைத் தன்மை பேணப்பட வேண்டுமெனவும் இது தொடர்பில் சுயட்சையான முடிவுகள் எடுக்கப்ப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.

அந்தவகையில் காணி ஒதுக்கீட்டுக்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படும்போது அபிவிருத்திக் குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அது தொடர்பான சாதக பாதகங்கள் குறித்து ஆராயப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அபிவிருத்திக் குழுவானது பிரதேசத்தின் முக்கிய பிரதி நிதிகளையும் திணைக்களத் தலைவர்களையும் கொண்டமைந்த ஒரு சபையாக காணப்படுகின்றது.

எனவே இவ்வாறான விடயங்கள் அக்கூட்டத்தில் கலந்துரையாடப்படும் போது வெளிப்படைத்தன்மையாக அமைவதோடு பலரது அபிப்பிராயங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். காணிகளை பெற்றுக் கொள்கின்ற அரச மற்றும் தனியார் அமைப்புகள் அவற்றை பயன்படுத்தாது வெறுமெனே தமக்கான இடமாக அடையாளப்படுத்தி வைத்திருப்பதனால் எவ்வித பயனும் இல்லை. இதனால் கால வரைறயறையுடன் கூடிய திட்ட வரைபுகளை முன்வைக்கின்ற நிறுவனங்களுக்கே காணி ஒதுக்கீடுகள் செய்யப்பட வேண்டுமென பிரதி அமைச்சர் குறிப்பிட்;டார்.

– ஊடகப் பிரிவு –

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM