காத்தான்குடியின் மிகப்பெரும் பிரச்சினையாக இருந்த கழிவுநீர் அகற்றல் முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 1185 கோடி ரூபா(78,968,466.36 அமெரிக்க டொலர்) நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மிகப்பாரிய காத்தான்குடி கழிவு நீர் அகற்றல் முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்கு அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

இலங்கையில் மொத்தமாக இரண்டு வீதமே அமுலில் உள்ள கழிவு நீர் முகாமைத்துவ வேலைத்திட்ட வரையறைக்குள் காத்தான்குடி உள்வாங்கப்பட்டமை மிகப்பெரும் சாதனையாகும்.இதனை வெற்றி கொள்வதில் அமைச்சர் றவூப் ஹக்கீமின் அயராத முயற்சியும்,அமைச்சரின் இணைப்புச் செயலாளரும்,முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான யு.எல்.எம்.என்.முபீனின் தொடர்ச்சியான பங்களிப்புமே காரணமாகும்.

முன்னைய மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் வெறும் செய்தியாக காணப்பட்ட இவ்வேலைத்திட்டம் தொடர்பில் 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து மேதகு ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன ஜனாதிபதி ஆகியதன் பின் அமைக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவர் றவூப் ஹக்கீம் அவர்கள் நகர அபிவிருத்தி நீர் வழங்கல் அமைச்சராக நியமிப்பக்கப்பட்டதைத் தொடர்ந்து அமைச்சரின் இணைப்புச் செயலாளராக முபீன் நியமிக்கப்பட்டார்.தலைவர் றவூப் ஹக்கீமின் அமைச்சின் கீழேயே மேற்படி வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை உள்வாங்கப்பட்டது முதல் அமைச்சர் இது தொடர்பில் பல்வேறு விடயங்களை முன்னெடுத்தார்.நல்லாட்சி அரசாங்கத்தின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களுக்கான முக்கிய வேலைத் திட்டங்களை இனங்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் முபீனுக்கு பணிப்புரை விடுத்ததன் பேரில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான முதன்மை திட்டங்களாக காத்தான்குடி கழிவு நீர் முகாமைத்துவ திட்டமும் வாழைச்சேனை ஓட்டமாவடி,பாசிக்குடா,சித்தாண்டி நீர் வழங்கல் திட்டமும் முபீனினால் அடையாளப்படுத்தப்பட்டு இதற்க்கான உயர் மட்ட கூட்டம் மட்டக்களப்பு கச்சேரியில் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டு அமைச்சர் றவூப் ஹக்கீம் அவர்களும் மற்றும் அமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் இலங்கைக்கான பல்வேறு அபிவிருத்திகள் வெளிநாடுகளில் பெறப்பட்ட பாரிய கடன்களிலேயே செய்யப்பட்டது.புதிய நல்லாட்சி அரசாங்கத்துக்கு இக்கடன்களை செலுத்துவதில் பாரிய சுமை ஏற்பட்டதால் புதிய திட்டங்களுக்கு அங்கீகாரம் பெறுவது பல்வேறு சிக்கல்கள் எதிர்நோக்கப்பட்டன.காத்தான்குடி கழிவு நீர் முகாமைத்துவ வேலைத் திட்டத்திற்கும் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் பல்வேறு வேலைத் திட்டங்களுக்கும் வெளிநாட்டு உள்நாட்டு கடன்களைப்பெற்றே அமுல்படுத்துவது வழக்கம்.தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் இலங்கையில் மேற்கொள்ளப்படவுள்ள மிகப்பெரிய எட்டு வேலைத் திட்டங்கள் சீனா அரசாங்கத்தின் கடன் உதவி மூலமே செய்வதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.இவ்வேலைத்திட்டங்களில் காத்தான்குடி கழிவு நீர் அகற்றல் வேலைத் திட்டமும் முதன்மையானதாகும்.கடந்த மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் பாரிய கடன்கள் சீன அரசாங்கத்திடமிருந்து பெறப்பட்டிருந்தன. அவற்றை செலுத்துவதில் புதிய நல்லாட்சி அரசாங்கம் பாரிய சவாலை எதிர்கொண்ட நிலையில் காத்தான்குடி கழிவு நீர் முகாமைத்துவ வேலைத்திட்டத்திற்கு நிதி பெறுவது பெருந்தடையாக மாறியதுடன் இவ்வேலைத்திட்டமும் மந்த நிலைக்கு தள்ளப்பட்டது.

இவ்வேலைத்திட்டமும் ,வாழைச்சேனை நீர் வழங்கல் வேலைத்திட்டமும் அமைக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அமைச்சரிடம் அடிக்கடி முபீன் வலியுறுத்தி வந்ததுடன் “நீங்கள் அமைச்சராக இருக்கும் காலத்தில் இவ்வேலைத்திட்டங்கள் நடைபெறாவிட்டால் எப்போதுமே இவ்வேலைத்திட்டங்களை அமுல்படுத்த முடியாது போய்விடும் வேறொருவரின் கைக்கு இந்த அமைச்சு மாற்றப்படும் போது இவ்வேலைத்திட்டங்கள் முற்றாக கைவிடப்பட்டு விடும்” என அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதுடன் தொடர் பின்னூட்டல் வேலைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு வந்தார்.இவ்வேலைத் திட்டத்திற்கு பொறுப்பான அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி.மங்களிக்கா, நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியியலாளர்.அன்சார், சபையின் முன்னாள் முகாமையாளர் எந்திரி.பாலசூரிய,நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் கழிவு நீர் முகாமைத்துவ பிரிவுக்கு பொறுப்பான மேலதிக பிரதம முகாமையாளர் எந்திரி.கருணாரத்ன,பிரதம பொறியியலாளர் எந்திரி.சுதர்சன் உள்ளிட்ட அதிகாரிகளை அடிக்கடி சந்தித்த இணைப்புச்செயலாளர் முபீன் இவ்வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த தொடர் முயற்சி எடுத்தார்.

மேற்படி வேலைத்திட்டம் தொடர்பிலும் வாழைச்சேனை நீர் வழங்கல் வேலைத்திட்டம் தொடர்பிலும் அமைச்சர் றவூப் ஹக்கீம் ஜனாதிபதியுடனும் பிரதம மந்திரியுடனும் பல சந்திப்புகளை மேற்கொண்டதுடன் இவ்விடயங்கள் தொடர்பில் நான்கு தடவைகள் சீன நாட்டுக்கு விஜயம் செய்து பல நடவடிக்கைகளை மேற்கொண்டார்.மேலும் உள்நாட்டில் திறைசேரி, வெளிநாட்டு வளங்களுக்கான திணைக்களம்(ERD),மத்திய வங்கி மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுடன் பல சந்திப்புகளை மேற்கொண்டு இத்திட்டங்களுக்கான நிதியையும் அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்ள பல முயற்சிகளை மேற்கொண்டதன் பேரில் தற்போது இத்திட்டத்திற்கான அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

2018ம் ஆண்டின் நடுப்பகுதியில் முன்னுரிமை வேலைத் திட்டமாக அமுல்படுத்தப்படவுள்ள இவ்வேலைத்திட்டம் முழுக் காத்தான்குடியையும் தழுவியதாக அமையும்.தற்பொழுது இவ்வேலைத் திட்டத்திற்கான திட்டப் பணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட உயர்மட்ட பேராசிரியர் குழுவினர் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உயரதிகாரிகளுடன் இணைந்தது திட்டத்துக்கான சுற்றாடல் சாத்திய வள அறிக்கைகள் தயாரித்து முடிக்கப்பட்டுள்ளன.திட்டத்தை அமுல்படுத்துவதற்கான காணிகள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றை சுவீகரிப்பதற்க்கான நடவடிக்கைகள் காணி அமைச்சுடன் இணைந்த வகையில் நடைபெற்று வருகின்றன.இக்காணி சுவீகரிப்பை துரிதப்படுத்த அடிக்கடி காணி அமைச்சுக்கும் இணைப்புச் செயலாளர் முபீன் விஜயம் செய்து உயர்மட்ட அதிகாரிகளை சந்தித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM