Web
Analytics
சம்மாந்துறைப் பிரதேசத்தில் 12கோடி ரூபாய் நிதியில் நீர்ப்பாசன அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. - Sri Lanka Muslim Congress

உலக அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள விவசாயிகள் உட்பட அனைவரும் தயாராக வேண்டும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பானத் திணைக்களப் பொறியியலாளர் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் நீர்ப்பாசனத்திணைக்களத்தின் 126மில்லியன் நிதிஒதுக்கீட்டில் 20 நீர்ப்பாசன அபிவிருத்தி வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை(20) சம்மாந்துறை புளக் “ஜே” யுனிட் உப காரியாலயத்தில் நீர்ப்பானத் திணைக்களப் பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்
.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – ஒழுங்கற்ற பருவ நிலை, பூமி வெப்பமயமாதல் உள்ளிட்ட இயற்கை சார்ந்த பல்வேறு மாற்றங்கள் உலகிற்கு பெரும் சவாலாக மாறிவருகின்றன. பருவ நிலை மாற்றம், புவி வெப்பமயமாதல் உள்ளிட்டவற்றால் இன்று மனித குலம் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

எந்த வேலையைச் செய்கின்ற போதும் காலைநிலை மாற்றத்தைப் பற்றிக் கரிசனை கொள்வது முக்கிய விடயமாக மாறியுள்ளது. பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, உணவுற்பத்தி, நீர்ப்பாசனம், குடிநீர், சுகாதாரம், சமூகஸ்திரத்தன்மை என்பவற்றில் காலநிலையின் தாக்கம் நேரடியாகவும்,மறைமுகமாகவும் அதிக பாதிப்புக்களைச் செலுத்துவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இன்று உலகம் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றது.

நாட்டில் காலநிலை மாற்றத்தால் விவசாயிகளுக்கு இரண்டு போகங்களிலும் விவசாயம் செய்ய முடியாது போயுள்ளதால் விவசாய உற்பத்திகளும் குறைவடைந்துள்ளதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வரட்சியை எதிர்கொள்ள தங்களது விவசாய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.
சட்டவிரோத மணல் அகழப்படுவதால், வாய்க்காலின் ஆழம் அதிகரித்து மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதுடன், நிலம் மற்றும் அணைக்கட்டுகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலைமையும் ஏற்படுகின்றதோடு அது அழிவடையும் நிலைமையும் ஏற்பட்டுள்ளது. இதனால் வயல்நிலங்களுக்கு சீரான முறையில் நீர்ப்பாசனம் வழங்க முடியாமல் உள்ளது

இந்த சட்டவிரோத மணல் அகழ்வினைத் தடுப்பதற்கு விவசாயிகளின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். தங்களின் வயல்நிலங்களை பாதுகாக்க வேண்டும். அத்தோடு ஆற்றோரங்களிலும், வாய்க்கல் ஓரங்களிலும் மரங்களை நட்டு அதனை பாதுகாக்க வேண்டும்.

எனவே, வரட்சியை எதிர்கொண்டு அதன் பாதிப்புக்களை குறைப்பதற்கு புதிய திட்டமொன்றில் கீழ் விவசாயிகள் உட்பட அனைவரும் செயற்படவேண்டியுள்ளதுடன், வரட்சியை அபிவிருத்தியின் பலமாக மாற்ற வேண்டும். என்றார்.

இதில் 60 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கப்பட்ட சம்மாந்துறை புளக் ஜே யுனிட் உப காரியாலயத்தை திறந்து வைத்ததுடன், 10 மில்லியன் ரூபாய் நிதியில் நிர்மாணிக்கவுள்ள விடுதிக்கான அடிக்கல்லும் அதிதிகளினால் நட்டப்பட்டது.

மேலும் 1.4மில்லியன் ரூபாய் செலவில் புளக் ஜே அலகின் எஸ்-11 கால்வாயினை புனர்நிர்மாணம், 3.8மில்லியன் ரூபாய் செலவில் நெயினாகாடு-அம்பாறை வீதியில் ஹிஜ்ரா கண்டமில் பெட்டி மதகொன்றை நிர்மாணித்தல், எம்.எஸ்-8 சனலுக்கு பெட்டி மதகு நிர்மாணித்தல் உட்பட 20 வேலைத்திட்டங்களை வைபவ ரீதியாக அன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வரட்சியான காலத்தில் சிறப்பாக செயற்பட்ட நீர்ப்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.எம்.நௌஷாத், அம்பாறை பிராந்திய நீர்ப்பானத் திணைக்கத்தின் பணிப்பாளர் பொறியியலாளர் கே.டி.நிஹால் சிறிவர்த்தன, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எம்.எம்.ஹனீபா, சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் கே.எம்.முஸ்தபா, சம்மாந்துறை பிரதேச செயலக உதவிச் செயலாளர் எம்.எம்.ஆசீக்,சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர்கள், நீர்ப்பானத்திணைக்களத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM