Web
Analytics
சம்மாந்துறையில் அபிவிருத்தி புரட்சி ஆரம்பம்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim Congress
கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்துக்காக இந்த வருடத்துக்கு மாத்திரம் 1000 மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலமாக சம்மாந்துறையில் மாபெரும் அபிவிருத்திப் புரட்சியை இந்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தலைமையில் நேற்றிரவு (12) சம்மாந்துறையில் நடைபெற்‌ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
 
கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்துக்காக இந்த வருடத்துக்கு மாத்திரம் 1000 மில்லியன் ரூபா வரவு, செலவுத்திட்டத்தில் எனது அமைச்சுக்கு மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொரட்டுவ பல்கலைக்கழகம் மூலம் இதற்கான செயற்றிட்ட வரைபை தயாரித்து, அதற்கான அமைச்சரவை அங்கீகாரத்தையும் நாங்கள் பெற்றுவிட்டோம். 
 
சம்மாந்துறைக்கு நவீன பஸ்தரிப்பு நிலையயும், சந்தைக் கட்டிடத் தொகுதியும் அமைத்துக் கொடுப்போம். சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரிக்கு பின்னாலுள்ள மைதானத்தை, 400 மீற்றர் ஓட்டப்போட்டி வைக்கக்கூடிய உள்ளக விளையாட்டு மைதானமாக புனரமைப்பதற்கான சகல ஏற்பாடுகளையும் நாங்கள் செய்துவிட்டோம்.
 
சம்மாந்துறையில் புதிய கைத்தொழில் பேட்டைகளை அமைப்பதற்கு நாங்கள் முயற்சித்த வருகிறோம். இவ்விடயம் தொடர்பில் பிரதமரும் என்னிடம் சில வாக்குறுதிகளை தந்திருக்கிறார். தற்போது ஆடைத் தொழிற்சாலையொன்றை நாங்கள் அமைத்துவருகிறோம். அதனை சிறந்ததொரு தொழிற்பேட்டையாக மாற்றவதற்கான திட்டங்களையும் நாங்கள் வகுத்துவருகிறோம்.
 
பிரதான வீதியை இருமருங்கிலும் விஸ்தரித்து, நடுவில் தெருவிளக்குளை அமைப்பதற்கான பாரிய திட்டத்தையும் மன்சூர் எம்.பி. வைத்திருக்கிறார். அத்துடன் சம்மாந்துறை மக்களின் பொழுதுபோக்குக்காக வந்துசெல்லக்கூடிய வாவியுடன் கூடிய திடல் ஒன்றையும் அமைப்பதற்கும் அவர் முயற்சித்துக்கொண்டிருக்கிறார். இவற்றுடன் உடற்பயிற்சி நடைபாதையும் அமைக்கப்படவுள்ளது.
 
இதுதவிர, அல்லைக் காணிகள் வெள்ளத்தில் மூழ்கி, சிறுபோகத்தில் மாத்திரம்தான் விவசாயம் செய்யலாம் என்ற ஒரு நிலைமை காணப்படுகிறது. இவை எல்லாவற்றையும் ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமாக செய்துமுடிப்பதற்கான வரைபுகளை நாங்கள் செய்திருக்கிறோம்.
 
விவசாயிகள் தங்களது பயிர்ச்செய்கைக்காக தங்குதடையின்றி நீர்ப்பாசனத்தை பெற்றுக்கொள்வதற்காக வீரகொட வாவி மற்றும் வளத்தாப்பிட்டி குளம் என்பவற்றை தோண்டி புனரமைக்கவேண்டிய தேவை இருக்கிறது. இதிலிருந்து நீரை கொண்டுவரும் எஸ் கால்வாயை திருத்தவேண்டும். இதில் இரு மருங்கிலும் வரம்புகளை அமைத்து அந்த வீதியை செய்யவேண்டிய திட்டத்தையும் நாங்கள் உள்ளடக்கியிருக்கிறோம்.
 
அத்துடன் ஊரின் நடுவே செல்லும் எஸ்-24 கால்வாயில் வளர்த்துள்ள செடிகளையும் அகற்றி சம்மாந்துறையை அழகுபடுத்தும் இந்த செயற்திட்டங்களை இந்த வருடத்தில் நாங்கள் ஆரம்பிக்கவுள்ளோம். இதனுடன் சேர்த்து பாடசாலை மாணவர்கள் செல்லக்கூடியவாறு பாதைகளையும், பாலங்களையும் அமைப்பதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 
 
நகர அபிவிருத்தி திட்டத்தின் ஊடாக இவை எல்லாவற்றையும் செய்வதற்கான வேலைகளை நாங்கள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளோம். இதற்கு முழுமையான உந்துதலை வழங்கும்முகமாக, சம்மாந்துறை பிரதேச சபையின் அதிகாரத்தை எங்களிடம் ஒப்படைப்பதற்கு நீங்கள் ஒவ்வொருவரும் பங்களிக்கவேண்டும் என்றார்.
 
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், கட்சியின் அமைப்பாளர் அப்துல் மஜீத், கட்சியின் பிரதிச் செயலாளர் மன்சூர் ஏ. காதிர், மாகாண அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன், ஐ.எல்.எம். மாஹிர், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM