(எம்.எம்.ஜபீர்)
சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையை தரமுயர்த்தி அபிவிருத்தி செய்வது தொடர்பான விசேட கலந்துரையாடல்

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இன்று அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
இதன்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் உரையாற்றுகையில், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையை ஏ தரத்திற்கு தரம் உயர்த்துமாறு 2016ஆம் ஆண்டு ஓக்டோபார் மாதம் அங்கீகாரம் வழங்கப்பட்ட போதிலும் இதுவரை தரமுயர்த்தப்படவில்லை. இதன் காரணமாக வைத்தியசாலைக்கான வளங்கள், அபிவிருத்தி பணிகள் மற்றும்   உழியர்களை பெற்றுக்கொள்வதில்  பாரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. சம்மாந்துறை வைத்தியசாலையின் அபிவிருத்தி விடயத்தில் தடைகளை ஏற்படுத்தி அநியாயம் செய்ய வேண்டாம். ஏனெனில் சுனாமி அனர்த்தம் ஏற்பட்ட போது கரையோரத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளின் சேவைகள் பாதிக்கப்பட்ட போது அனைத்து மக்களுக்குமான வைத்திய சேவையை வழங்கியதை யாரும் மறந்திருக்க முடியாது.
 
 இந்த வைத்தியசாலை சம்மாந்துறை பிரதேச மக்களுக்கு சிறந்த சேவைகளை சரியான முறையில் வழங்க முடியாத நிலையில் காணப்பட்டாலும் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத்து அம் மக்களுக்கான சேவையை வழங்கியது.
 
 இந்த வைத்தியசாலையின் சேவையை சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சுமார் 90 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் நம்பியுள்ளனர். பிரசவ விடுதியானது நீண்டகாலமாக புணர் நிர்மாணம் செய்யப்படாமல் காணப்படுகின்றது.
 
அவ்வைத்தியசாலையின் அவலநிலையை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகள் குழு விஜயம் மேற்கொண்டு பார்வையிடுவதன் ஊடாக அறிந்து கொள்ள முடியும். திட்டமிட்ட அடிப்படையில் சம்மாந்துறை வைத்தியசாலை புறக்கணிக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எனக்குள் எழுகின்றது.
 
இதனால் நேர்மையான அதிகாரிகளுக்கு கூட சம்மாந்துறை வைத்தியசாலையின் அவல நிலையினால இழுக்கு ஏற்படுவது போன்று தான் காணப்படுகின்றது. அரசியல் வாதிகள் என்ற ரீதியில் பொது மக்கள் எங்களுக்கு பல்வேறு அழுத்தங்களை மேற்கொள்கின்றனர். இதனை சகித்துக் கொள்ள முடியாத நிலையிலேயே காணப்படுகின்றேன். சம்மாந்துறை மக்களும், அனைத்து பள்ளிவாசல் சம்மேளனம், மரைக்கார்சபை, மஜ்லிசுல் சூறா,  உலமாக்களும் சேர்ந்து என்னிடம்  வைத்தியசாலையை அபிவிருத்தி செய்யும் விடயத்தில் பல்வேறு அழுத்தங்களை தருகின்றார்கள். மாகாண சபை உறுப்பினராக நீங்கள் வைத்தியசாலைக்குரிய குறைபாடுகளை நிவர்த்தி செய்து தரமுடியாவிட்டால் வீதியில் இறங்கி போரடுவோம் என கூறுகின்றார்கள். நான் அவர்களை சமாதானப்படுத்தி விட்டுத்தான் இன்று இக்கூட்டத்திற்கு வந்துள்ளேன்.
 
இதற்கான பதில் இன்று கிடைக்காவிட்டால் வீதிக்கு மக்கள் வருவதை என்னால் தடுத்து நிறுத்த முடியாது. நானும் ஒரு மகன் என்ற அடிப்படையில் போரட்டத்தில் இறங்க வேண்டி ஏற்படும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் உயர் அதிகாரிகளுக்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என தெரிவித்தார்.
 
இதனையடுத்து இக்கூட்டத்தில் சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகர்த்த ஆதார வைத்தியசாலையை ஏ தரத்திற்கு தரமுயர்த்துமாறு கிழக்கு மாகாண சபையினால் 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி எடுக்கப்பட்ட தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும், 2017ஆம் ஆண்டு பதிலீடுகள் இல்லாது வழங்கப்பட்ட இடமாற்றங்களை இரத்து செய்து மீண்டும் உழியர்களை வழங்குவதெனவும், வைத்தியசாலையின் அபிவிருத்திக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட 11.4 மில்லியன் நிதியில் இவ் ஆண்டு வைத்தியாசலை  அபிவிருத்தி மேற்கொள்வதெனவும், வைத்தியசாலையில் கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதெனவும், சுகாதார துறை பிரதி அமைச்சர் எம்.சீ.பைசல் காசீமின் 3.6 மில்லின் நிதி ஒதுக்கீட்டில் முதல் கட்டமாக 1மில்லியன் நிதியை மருத்துவ விடுதி அமைப்பதெனவும், நெய்னாகாடு பிரதேசத்தில் ஆரம்ப வைத்திய பரமரிப்பு நிலையம் அமைப்பதெனவும் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன் இத்தீர்மானங்களின் அடிப்படையில் சம்மாந்துறை வைத்தியசாலையின் அபிவிருத்தி பணிகளைமுன்னெடுக்குமாறும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
 
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கே.எஸ்.கருணாகரன், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கே.முருகானந்தன், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள், சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM