நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கல்முனை மற்றும் சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தி பிரதான வீதியான காரைதீவு-அம்பாறை நெடுஞ்சாலை, சம்மாந்துறை மல்கம்பிட்டி – தீகவாபி நெடுஞ்சாலைகளை முழுமையாக விஸ்தரித்து அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூரின் முயற்சியினால் இத்திட்டத்திற்கென நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சு 1600 மில்லியன் ரூபாய் நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது. 

இவ்வபிவிருத்தி சம்பந்தமான உயர்மட்டக் கலந்துரையாடலொன்று இன்று(19) சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பிரதான பொறியியலாளர் எம்.பி. அலியார், தேசிய நீர்வழங்கல் வடிகாமைப்புச் சபையின் உதவி பொதுமுகாமையாளர் பொறியியலாளர் எம்.எம்.நஸீல், பிரதான பொறியியலாளர் எம்.ரி.எம். பாவா, வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனைப் பிராந்திய நிறைவேற்றுப் பொறியியலாளர் பீ.பரதன், சம்மாந்துறை பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.ஹனீபா, சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் எம்.எஸ்.எம்.சலீம், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவர் கே.எம்.முஸ்தபா, இலங்கை மின்சார சபை, நிலஅளவை திணைக்களம், டெலிகொம், நகர அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் மன்சூர் தெரிவிக்கையில் – “பேண்தகு அபிவிருத்தி” எனும் தொனிப் பொருளினான இவ்வேலைத்திட்டத்திற்கான திட்டமிடல் மற்றும் மதிப்பீட்டு அறிக்கைகள் முடிவுறும் நிலையில் அமைந்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் காரைதீவு- அம்பாறை நெடுஞ்சாலையின், சம்மாந்துறை ஆண்டிடசந்திலிருந்து ஹிஜ்ரா சந்தி ஊடாக நெல்லுப்பிட்டி சந்தி வரையிலான 2.5 கிலோமீற்றர் தூரம் வரையும், ஹிஜ்ரா சந்தியிலிருந்து சம்மாந்துறைப் பற்றுபலநோக்குக் கூட்டுறவுச்சங்கம் வரையும்,சம்மாந்துறை மல்கம்பிட்டி தீகவாபி நெடுஞ்சாலையின், சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியிலிருந்து தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயம் வரையுமான 500மீற்றர் தூரம்வரையிலான வீதிகள் அகலப்படுத்தப்படவுள்ளன. 

இந்நெடுஞ்சாலையின் மத்தியிலிருந்து வலதுகரை 12.5 மீற்றர் அகலத்திலும், இடதுகரை 12.5 மீற்றர் அகலத்திலும்; 4 வழித்தடங்களுடன், இருபக்க நடைபாதைகள் மற்றும் இருபக்க வடிகான்களைக் கொண்டதாகவும் மத்தியில் மின் விநியோகக் கம்பங்களைக் கொண்டதாவும் புதிய கார்ப்பட் வீதியாகப் புனரமைக்கப்படவுள்ளது.
வீதிஅபிவிருத்தி அதிகாரசபையின் எல்லைக்குள் அமைந்துள்ள கட்டங்களை அகற்றுவதற்காக அமையாளமிடும் பணிகள்முடிவடைந்தனையடுத்து கட்டடங்களை விரைவில் அகற்றுவதற்கான கடை உரிமையாளர்களுக்கு அறிவித்தலை விடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினரால் பணிப்புரை விடுக்கப்பட்டதுடன், இத்திட்டம் சம்பந்தமாக கலந்து கொண்ட பொறியியலாளர்கள், அதிகாரிகளினால் பல்வேறு ஆலோசனைகளும் முன்வைக்கப்பட்டன. 

இவ்வீதிகள் கடந்த 45வருடகாலமாக விஸ்தரிக்கப்படாதன் காரணமாக வீதி விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுவதுடன், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றது. இவ்வீதிகளை அபிவிருத்தி செய்ய நமக்கு நல்லதொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை எவ்விதமான சவால்கள் வந்தாலும் அதனை எதிர்கொண்டு முன்னெடுக்கவுள்ளேன். இதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் அதிகாரிகள், கடை உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட அனைத்தரப்பினரும் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு தரவேண்டும். என பாராளுமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM