எம்.வை.அமீர் !
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றவூப் ஹக்கீமால் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் ஊடாக

சாய்ந்தமருது அஷ்ரப் ஞாபகார்த்த சிறுவர் பூங்கா மற்றும் பௌசி விளையாட்டு மைதானம் போன்றவற்றை அபிவிருத்தி செய்வதற்கு தலா ஒருகோடி ரூபாய்களை ஒதுக்கி அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக்குழுவின் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

 
சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடும் கூட்டம் பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபாவின் வழிநடத்தலில் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் 2017-08-15 ஆம் திகதி இடம்பெற்றது. குறித்த நிகழ்வுக்கு தலைமை வகித்து உரையாற்றும்போதே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இந்த பிரதேச, விசேடமாக சாய்ந்தமருது மக்களின் அதிகபட்ச ஆதரவைப்பெற்ற தாங்கள் இம்மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றுவதில் மிகுந்த கருசணையுடன் செயற்படுவதாகவும் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் சமூக நிறுவனங்கள் புத்திஜீவிகள் முன்வைத்த பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தானும் பின்னிற்கவில்லை சாய்ந்தமருது மக்கள் முன்வைத்த உள்ளுராட்சிசபை கோரிக்கையை எப்போதே அரசின் உயர்மட்ட தலைவர்களுடன் பேசி அவர்களிடமிருந்து விசேடமாக பிரதமரிடமிருந்தே அவரின் வாயினால் மக்கள் மத்தியில் உத்தரவாதத்தை பெற்றதாகவும் இப்போது சிலர், சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை நிறைவேறவுள்ள சந்தர்ப்பத்தில் அரசியல் லாபம் தேட முனைவதாகவும் இவர்கள் குறித்த உள்ளுராட்சிசபை விடயமாக நினைப்பதற்கு முன்பே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் களத்தில் இறங்கி அதற்கான சகல முன்னெடுப்புகளையும் செய்துள்ளதாகவும் இவைகளை மக்கள் நன்கு அறிவர் என்றும் தெரிவித்தார்.
 
சாய்ந்தமருதை பொறுத்தமட்டில் பிரதானமாக அடையாளம் கண்டுள்ள பிரச்சினை காணிகள் அற்ற பிரச்சினை. இவற்றை நிவர்த்திக்கும் பொருட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் நாங்கள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பேசியதன் காரணமாக சாய்ந்தமருது உள்ளிட்ட கல்முனைப் பிரதேசத்தை பாரியளவில் அபிவிருத்தி செய்து தருவாதாக எங்களுக்கு உத்தரவாதமளித்திருந்தார்.
 
இதனை மக்கள் மத்தியிலும் பிரகடனப்படுத்தியிருந்தார். இப்போதைக்கு குறித்த அபிவிருத்தித் திட்டத்தை சற்று விரிவாக்கி கல்முனை மற்றும் சம்மாந்துறை பிரதேசங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டமிடல் பணிகள் நிறைவடையும் தறுவாயில் உள்ளதாகவும் கல்முனை மக்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாக்களித்த பாரிய கல்முனை நகர அபிவிருத்தித் திட்டத்துக்கான திட்டமிடல் பணிகள் மொரட்டுவைப் பல்கலைக்கழக பேராசிரியர் மகாநாம தலைமையில் இடம்பெறுவதாகவும் அதில் இடம்பெறும் சில அபிவிருத்தித் திட்டங்கள் வெளிநாடுகளில் விசேடமாக துபாய் பஹ்ரைன் போன்ற நாடுகளில் உள்ளது போன்று நீண்டகாலத்துக்கு பயன்படும் அளவுக்கு உள்ளதாக பேராசிரியர் மகாநாம கூறியதற்கு முகநூல்களில் எழுதும் சிலர் பிழையான வியாக்கியானம் கொடுத்திருந்ததாகவும் தெரிவித்தார்.
 
பேராசிரியர் மகாநாம தலைமையில் வரையப்பட்டுள்ள கல்முனை சம்மாந்துறை நகர அபிவிருத்தித்திட்டமானது 2050 ஆம் வருட எமது பிரதேச சனத்தொகையை அடிப்படையாக வரையப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
சாய்ந்தமருதை எடுத்துக்கொண்டால் அந்த ஊரில் தற்போதுள்ள நிலையில் எவ்வித விரிவாக்கல் பணிகளையும் செய்யமுடியாதுள்ளது. அதற்குப் பதிலாக கரைவாகுவட்டை பிரதேசத்தில்தான் பாரிய திட்டங்களை செய்ய வேண்டியுள்ளது. அதனை எப்படிச்செய்வது? கல்லோயாத்திட்டம் வந்ததன் பின்னர் வெள்ளம் வந்து தங்கும் இடமாக கரைவாகுவட்டை மாறியது. எனவே பெரிய அளவில் காணிகளை நிரப்புகின்றபோது வெள்ள அனர்த்தம் தொடர்பாகவும் கவனத்திலெடுத்து அதற்கான திட்டங்களையும் தயார்படுத்த வேண்டிய இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
அதேநேரம் அடிப்படையான மூன்று விடயங்களை அந்த குழு அடையாளம் கண்டுள்ளது என்றும் குறிப்பாக புதிய நகரத்திட்டத்தை உருவாக்குகின்றபோது வெள்ளப் பெருக்கில் இருந்து அமைக்கின்ற நகரத்தை பாதுகாப்பது. அதேபோன்று இருக்கிற நகரத்தை பாதுகாப்பது. மற்றும் தற்போது சனத்தொகை பெருக்கத்தின் காரணமாக நிலத்தடிநீர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றமையால் அதற்காக (Sewerage System) முறையான கழிவுநீர் அகற்றும் தொகுதியை அமைப்பது தொடர்பாகவும் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
முறையான கழிவுநீர் அகற்றும் தொகுதியை (Sewerage System) கல்முனையில் அமைப்பதற்காக 200 மில்லியன் தேவைப்படுகின்றது என்றும் அதற்காக நெதர்லாந்து அரசு உதவவுள்ளதாகவும் தெரிவித்தார். குறித்த திட்டம் நமது பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றபோது கொழும்புபோன்ற வசதியுடைய பிரதேசம் போன்று கல்முனை மாறும் என்றும் இதனூடாக பெரிய சுகாதாரப்பிரச்சினையில் இருந்து மீள முடியும் என்றும் தெரிவித்தார்.
 
புதிய நகர அபிவிருத்தித் திட்டத்தின்கீழ் இரண்டு வீதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன என்றும் அதில் ஒன்று சம்மாந்துறையில் இருந்து பெரியநீலாவணை ஊடாக ஒரு வீதியும் தற்போதுள்ள வொலிவோரியன் வாய்க்கால் வீதியை 70 அடிக்கு விஸ்தரித்து கல்முனை பஸ் நிலையம் வரை நீட்டிச் செல்வது போன்ற அடுத்த வீதியும் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் இவைகளும் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்றும் தெரிவித்தார். 
 
சாய்ந்தமருது தோணா அபிவிருத்தித் திட்டம் இலங்கை காணி மீட்டல் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கான நிதியும் நகரத்திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சாஹிரா கல்லுரி மைதானத்துக்கும் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் பிரதான வீதிக்கு நவீன மின் விளக்குகள் பொருத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். மக்களின் ஆணையைப் பெற்றே தான் அரசியல் செய்வதாகவும் எனக்கு வாக்களித்த அவர்களது அபிலாசைகளை நிறைவேற்ற பின்னிற்கப் போவதில்லை என்றும் ஒரு சந்தர்ப்பத்தில் தேர்தலில் தோல்வியைத் தழுவியபோதும் தேசியப்பட்டியலையோ நிறுவனத் தலைவர் பதவியையோ தேடிச்செல்ல வில்லை என்றும் தெரிவித்தார்.
 
இந்நிகழ்வுக்கு திணைக்களங்களின் தலைவர்கள் பள்ளிவாசலின் பிரதிநிதிகள் பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் சமூக சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள் கிராமசேவை உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் வர்த்தக சங்க பிரதிநிதிகள் பிரதி அமைச்சரின் பிரத்யோக செயலாளர் நௌபர் ஏ.பாவா மற்றும் அமைச்சரின் இணைப்பாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இங்கு மாநகரசபை, பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகள் கல்வி அதிகாரிகள் நீர்ப்பாசன துறை சார்ந்த பொறியியலாளர்கள் என அதிகாரிகள் தங்களது பிரிவின் அபிவிருத்தி தொடர்பாக தற்போது இடம்பெறும் திட்டங்களையும் எதிர்கால திட்டங்களையும் விளக்கினர். நிகழ்வின்போது கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கு பயணப்பைகளும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM