Web
Analytics
சாய்ந்தமருது பிரச்சினையை ஒரேநாளில் தீர்க்கமுடியாது என்பதை உணரவேண்டும்: மருதமுனையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim Congress
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற கோரிக்கையை, நாங்கள் இதயசுத்தியுடன் செய்துகொடுக்க முற்படுகின்றபோது, மாற்றுக் கட்சியுடன் சேர்ந்துகொண்டு எமக்கு வேலி கட்டுகின்றனர்.

எல்லோரையும் திருப்திப்படுத்தும் நோக்கில் ஒரேநாளில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை மாநகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக யானைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்றிரவு (14) மருதமுனையில் நடைபெற்ற கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
 
சாய்ந்தமருதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு மத்தியில், கரைவாகு வடக்கு பிரதேச சபை அதே எல்லைகளுடன் வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை கரைவாகு மேற்கு பிரதேச சபை அமையவேண்டிய தேவைப்பாடு தமிழர்களிடம் இருந்துகொண்டிருக்கிறது. இதனால் நற்பிட்டிமுனை மக்கள் அனாதரவாக விடப்பட்டு இன்னுமொரு பிரதேச சபைக்குள் உள்வாங்கப்படக்கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.
 
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண எங்கிருந்து எல்லைகள் போடலாம், கல்முனை மாநகரரை எப்படி காப்பற்றாலாம் என்றெல்லாம் நாங்கள் சிந்திக்கவேண்டியுள்ளது. இதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை நாங்கள் அழைத்துப் பேசுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டோம். நீண்டகாலமாக இருக்கின்ற இந்தப் பிரச்சினைக்கு ஒரேநாளில் தீர்வுகாணவேண்டுமென சிலர் எதிர்பார்க்கின்றனர்.
 
கடந்த காலங்களில் கட்சி பலவந்தமாக நிர்ப்பந்திக்கப்பட்டு, பல உத்தரவாதங்களை கொடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்படி கொடுத்த உத்தரவாதங்களை, இதய சுத்தியுடன் நிறைவேற்ற முற்படுகின்றபோது எதிர்பாராதவிதமாக எதிர்ப்புகள் கிளம்புகின்றன. சில மாற்றுக் கட்சிக்காரர்கள் இதன் பின்னாலிருந்து குளிர்காய முற்படுகின்றனர். கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கில், பள்ளிவாசலுடன் இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்படுத்தி, எங்களால் இதனை தீர்த்துதர முடியும் என்ற பாங்கில் அவர்கள் செயற்படுகின்றனர்.
 
இன மற்றும் பிரதேச நல்லுறவுக்கு குந்தகமில்லாத வகையில், நாங்கள் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும். இதனை தீர்ப்பத்தில் இருக்கின்ற சிக்கல்கள் காரணமாக தாமதங்கள் ஏற்படுகின்றன. இதுவிடயத்தில் கல்முனை மக்கள் ஏற்படுத்திய பிரச்சினையால் ஏற்பட்டுள்ள சிக்கல் எப்படியாவது தீர்க்கப்பட வேண்டும். இதற்கான முயற்சியை நாங்கள் இதயசுத்தியுடன் மேற்கொண்டு வருகிறோம். பொறுமையில்லாமல் இந்த விடயங்களை நாங்கள் கையாளமுடியாது.
 
சாய்ந்தமருது உள்ளூராட்சி மன்ற விடயத்தில், முஸ்லிம் காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்த இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்காகவே இதனை பெரிய பூதாகரமாக்கி, முஸ்லிம் காங்கிரஸுக்கு வேலி கட்டிக்கொண்டு அரசியல் செய்வதற்கு சில சக்திகள் முயற்சித்துக்கொண்டிருக்கின்றன. இந்த வேலிகளை உடைத்துக்கொண்டு சாய்ந்தமருது மண்ணில் எமது வெற்றியை உறுதிப்படுத்துவோம்.
 
60 மில்லியன் ரூபா செலவில் மருதமுனை பொதுநூலகத்தை புனரமைப்பதுடன், அதனுடன் கேட்போர் கூடத்தையும் நிர்மாணித்து வருகிறோம். பிரான்ஸ் சிட்டியில் கோடிக்கணக்கான ரூபா செலவில் வடிகான்களை அமைத்துள்ளோம். கடற்கரையில் பூங்கா ஒன்றையும் பாரிய செலவில் அமைத்துக்கொண்டிருக்கிறோம்.
 
கல்முனை – சம்மாந்துறை ஒருங்கிணைந்த நகர அபிவிருத்தி திட்டத்துக்காக இந்த வருடத்தில் மாத்திரம் 1 பில்லியன் ரூபாவை செலவிடவுள்ளோம். வரலாற்றில் ஒரு மாநகர அபிவிருத்திக்காக இவ்வளவு பெரியதொகை வரவு, செலவுத்திட்டத்தில் ஒதுக்கப்படவில்லை. இதில் கனிசமான தொகையை மருதமுனை அபிவிருத்திகாக செலவிடுவதற்க நாங்கள் தீர்மானித்துள்ளோம். 
 
மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்ட சுனாமி வீடுகளை கையளிப்பதில் அசட்டைப் போக்குடன் இருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. இதற்கான பயனாளிகளை தெரிவுசெய்துள்ள நிலையில், தொடர்ந்தும் முறைப்பாடுகள் வந்துகொண்டிருக்கின்றன. தவறான புரிதல்கள் மூலம் அரசாங்க அதிபரை வழிநடத்துகின்ற காணத்தினால் அவை இன்னும் இழுபறி நிலையிலேயே இருக்கின்றன. யார் கோபித்தாலும் பரவாயில்லை, இன்னும் ஓரிரு மாதங்களில் இந்தப் பிரச்சினையை நாங்கள் தீர்த்து தருவோம்.
 
மருதமுனை மேட்டுவட்டையில் இருந்து கல்முனை ஊடாக மாவடிப்பள்ளி வரை மாற்று வீதியொன்றை அமைக்கவுள்ளோம். மேட்டுவட்டையிலுள்ள சதுப்புநிலங்களை நிரப்பி, அங்கு பொதுக் கட்டிடங்களையும் மக்கள் குடியிருப்புகளையும், கல்முனை நகர அபிவிருத்தி திட்டத்தின் ஒரு அங்கமாக அமைப்பதற்கு நாங்கள் தீர்மானித்துள்ளோம். இதற்கான திட்டவரைபுகள் தயாரிக்கப்பட்டு, அமைச்சரவை அங்கீகாரமும் பெறப்பட்டுள்ளது.
 
மத்திய அமைச்சின் அதிகாரமும், மாகாண அமைச்சின் அதிகாரமும் எங்களிடம் இருந்தாலும் உள்ளூராட்சி சபையின் ஆட்சி எங்களிடம் இல்லாவிட்டால், இந்த அபிவிருத்தி திட்டங்களில் பல சிக்கல்களை எதிர்நோக்க நேரிடும். எனவேதான், இந்த அபிவிருத்தியை திறம்படச் செய்வதற்கு கல்முனை மாநகர சபையின் அபிவிருத்தியை நாங்கள் உங்களிடம் வேண்டி நிற்கிறோம் என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM