Web
Analytics
திருமலையில் டெங்கை கட்டுப்படுத்த அரசாங்கம் முழு நடவடிக்கை ; பிரதி அமைச்சர் பைசல் காசிம் - Sri Lanka Muslim Congress

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு இவ்வருடத்தில் கிடைக்கப்பெற்ற 2192 சளி மாதிரிகளைப் பரிசோதித்துப் பார்த்ததில் 693 பேருக்கு இன்புளுவென்ச ஏ வைரஸ் தொற்றும், 119 பேருக்கு இன்புளுவென்ச பீ வைரஸ் தொற்றும் காணப்படுவது உறுதியாகி இருப்பதாக பிரதி சுகாதார அமைச்சர் பைசல் காசிம் நேற்று முன்தினம் செவ்வாய்க் கிழமை சபையில் பாராளுமன்றில் தெரிவித்தார்.

இன்புளுவென்சா தொற்றானது சாதாரண நோய் நிலைமையில் புதிய வைரஸ் ஒன்றின் மூலம் ஏற்படும் ஒன்றல்ல என்றும், இது தொடர்பில் மக்களை வீணாக அச்ச மூட்ட வேண்டாம் என்றும் சுகாதார பிரதி அமைச்சர் இதன்போது கேட்டுக்கொன்டார்.

கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில், அதிகரித்துள்ள டெங்கு நோய்த் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்க்கான சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் 23/2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் ஈ.பி.டி.பி. பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதி அமைச்சர் பைசல் காசிம் இந்த விடயங்களை தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்தும் பதிலளிக்கையில்;

டெங்கு தொற்றுகுள்ளானவர்கள் என்று சந்தேகிக்கப்படும் 22562 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், திருகோனமலை மாவட்டத்தில் 1619 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயினால் 16 பேர் மரணமடைந்துள்ளார்கள் என்பது உறுதி செய்யபட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் டெங்கு நோயினால் 46 பேர் மரணித்துள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை, கிண்ணியா, மூதூர், உப்புவெளி ஆகிய சுகாதார மருத்துவ அதிகார பிரிவுகள் அவதானத்துக்குரிய பிரிவுகளாக இனங்காணப்பட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அறிக்கை இடப்பட்ட டெங்கு நோயாளர்கள் என சந்தேகிக்கப்படும் நோயாளர்கள் எண்ணிக்கை 1385 ஆகும். கடந்த காலங்களில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தின் காரணத்தினால் இந்நோய் பரவியது பொதுவான ஒரு காரணமாக உள்ளது.

குறித்த மாவட்டத்தில் நோய் அவதானிப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தல், பதிவு செய்யப்பட்ட நோயாளர்களிடம் உடனடியாக விசாரித்து குறித்த பிரதேசத்தில் நுளம்பு பெருகும் இடங்களை ஒழித்தல், தேசிய நுளம்பு ஒழிப்பு வாரம் 150 குழுக்களை இட்டு இம்மாதம் 22ஆம் திகதியில் இருந்து 28 ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மற்றும் முப்படையினரின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப் பட்டுள்ளது.

கிண்ணியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சிப்பிரிவை அமைப்பதோடு, தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள், அவற்றுக்குத் தேவையான உபகரணங்களும் திருகோணமலை மற்றும் கிண்ணியா வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்படவுள்ளன. பிற வைத்தியசாலைகளில் இருந்து பொது விசேட மருத்துவர் குழுக்கள் மற்றும் தாதியர் குழுக்களும் அனுப்பி வைக்கப்டவுள்ளன.

இதேநேரம், கடந்த இரு மாதங்களுக்குள் நாட்டின் பல பிரதேசங்களில் இன்புளுவென்சா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நோயாளர்கள் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளமை பதிவாகியுள்ளது.

பொதுவாக வருடத்தின் நவம்பர் மற்றும் பெப்ரவரி மாதங்களில் அதிகமான இன்புளுவென்ச வைரஸ் தொற்றுக்குள்ளனவர்கள் பதிவாவதுடன், இவ்வருடத்தில் அது ஏனைய வருடங்களை விடவும் அதிகரித்துள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இன்புளுவென்ச வைரஸ் தொற்றுகுள்ளானதன் காரணத்தால் நாடாளாவிய ரீதியல் பல்வேறு பிரதேசங்களில் 8 பேர் மரணித்துள்ளனர். இம் மரணங்களில் அதிகமானோர் வேறு நீண்டகால நோய் நிலைமைகள் கொண்டோர் என்பதுடன் அதில் இருவர் கற்பிணித் தாய்மார்கள் ஆவர். வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடும்போது மார்ச் மாதத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளமை வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட நாடளாவிய ரீதியில் சகல பிரதேசங்களிலும் பதிவாகியுள்ளது.

இந்த இன்புளுவென்சா வைரஸ் மூலம் ஏற்படக்கூடிய பொதுவான தடிமன், காய்ச்சல் அல்லாத புளு 1 நோய் நிலைமையில் காய்ச்சல், இருமல் சளி போன்ற அறிகுறிகளை காட்டுவதுடன் பொதுவாக சிகிச்சைகள் வழங்கப்படாமலே குணமடைகின்றது. ஆனாலும் சிலருக்கு விசேடமாக 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோய் எதிர்ப்புத் தன்மை குறைந்தவர்கள் மற்றும் நீண்டகால இருதய, நுரையீரல், சிறுநீரக, நீரிழிவு நோய்களினால் பாதிப்புற்றோருக்கு இன்புளுவென்சா வைரஸ் தாக்கம் அதிகரிக்கும்.

இவ்வாறான நோயாளர்கள் மீது கூடிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதுடன், நோய் அறிகுறிகளில் ஏதாவது வித்தியாசம் கண்டால் அல்லது மூச்சு விடுவதற்கு கஷ்டப்படின் அவர்கள் உடனடியாக வைத்திய சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

தங்கியிருந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு உரிய நோய் எதிர்ப்பு ஔடதங்கள் மற்றும் தேவையான உபகரணங்கள் மற்றும் அவசியமான அறிவூட்டல்களை வைத்தியசாலைகளுக்கு வழங்குவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது’ என்று கூறினார்.

பா.கிருபாகரன், உதயகார்த்திக் – (நன்றி தினக்குரல்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM