கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது சர்வதேச தரத்திலான அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்ட நவீனமயமான முன்னணி பெருநகரப் பிரதேசமாக மிளிருமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கல்முனை சம்மாந்துறை ஒருங்கிணைந்த பாரிய நகர அபிவிருத்தி திட்டம் தொடர்பான இன்னொரு கட்ட மீளாய்வுக்கூட்டம் வியாழக்கிழமை (03) நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் கேட்போர் கூடத்தில் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றபோதே அவர் இதனைக் கூறினார்.

இந்த மீளாய்வுக் கூட்டத்தின் ஆரம்பத்தில் மொரட்டுவை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பீ.கே.எஸ். மஹாநாம மற்றும் கலாநிதி ரீ.எம்.என். விஜயரத்தின ஆகியோர் வரை படங்களை காட்சிப்படுத்தி உத்தேச கல்முனை சம்மாந்துறை பாரிய நகர அபிவிருத்தியின் போது மேற்கொள்ளப்படவுள்ள நவீனமயமாக்கல் செயல்பாடுகளைப் பற்றி விபரித்துக் கூறினர். துபாய், பஹ்ரைன் போன்ற நாடுகளில் காணப்படும் நகரங்களை ஒத்ததான ஓரு பெருநகரமாக இது திகழக்கூடிய வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

2030ஆம் ஆண்டுக்கும் 2050ஆம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் 5 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட பிரதேசமாக இந்தப் பகுதி மாற்றமடையுமென்ற மதிப்பீட்டில் பல்மாடிக்கட்டிடத் தொகுதிகள் பலவற்றையும், விஸ்தரிக்கப்பட்ட பாதைகளையும், ஏனைய நகரங்களை இணைக்கக்கூடிய புகையிரத மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கொண்டதாகவும் இப்பிரதேசம் திகழுமென அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த பாரிய நகர அபிவிருத்தி மேற்கொள்ளப்படும் போது உலக சந்தை வாய்ப்புகளுக்களுக்கான ஒரு வர்த்தக மையமாகவும், வெளிநாட்டு, உள்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கக்கூடிய பிரதான வர்த்தக மையமாகவும் கிழக்கு மாகாணத்தை இந்தப் பிரதேசம் வளர்ச்சியடையுமெனவும் அவர் மேலும் கூறினார். திருகோணமலை மற்றும் அம்பாந்தோட்டை வர்த்த மையங்களோடு இணைப்பை ஏற்படுத்துவதற்கும் முயற்சி மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர் ஹக்கீம் கருத்துத் தெரிவித்தார்.

வெள்ளப்பெருக்கு ஏற்படாமல் தடுக்கும் விதத்தில் நீர் தேங்காமல் வழிந்தோடுவதற்கான நிரந்தரத் தீர்வுகளைக் காண்பதில் துறைசார் நிபுணர்கள் தற்பொழுது ஆய்வுகளை மேற்கொண்டிருப்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது. தோணாக்கள் ஏனைய நீர் நிலைகளும் அபிவிருத்தி செய்யப்படுமென்றும் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

இந்த மீளாய்வுக் கூட்டத்தில் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர், மாகாண சபை உறுப்பினர் அப்துல் ரஸ்ஸாக், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள், அமைச்சின் செயலாளர் சரத் சந்திரசிறி விதான, மேலதிகச் செயலாளர் ஏ.சீ.எம். நபீல், அமைச்சின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், யூ.எல்.எம்.என். முபீன் உயர்பீட உறுப்பினர் ஏ.சீ. யஹியாகான் மற்றும் சம்மந்தப்பட்ட முக்கிய அரச திணைக்களங்களினதும், நிறுவனங்களினதும் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM