(பிறவ்ஸ்)
 
தேசியக் கட்சிகளிடையே நிலவும் அரசியல் நெருக்கடிகள் காரணமாக மாகாணசபை தேர்தலை பிற்போடுவதற்கு முஸ்லிம் காங்கிரஸுக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது என்று  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

 
நேற்று (19) சனிக்கிழமை நடைபெற்ற ஸ்ரீலங்‌கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார். அங்கு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியதாவது;
 
மாகாணசபை தேர்தலை பிற்போடுவதாக இருந்தால்,  2/3 பெரும்பான்மை ஆதரவுடன் யாப்பு திருத்தப்படவேண்டும். அந்த அறிவித்த தற்போது வர்த்தமானியில் பிரிசுரிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கெதிராக சில சிவில் அமைப்புகள் வழக்குத்தாக்கல் செய்வதற்கு தயாராகிவிட்டன.
 
வடமத்தி, சப்ரகமுவ, கிழக்கு மாகாணசபைகளின் ஆயுட்காலம் விரைவில் நிறைவடையவுள்‌ள நிலையில், தேர்தலை பிற்போடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் பல கட்சிகள் அதிருப்தி நிலையில் இருக்கின்றன. எதிர்வரும் திங்கட்கிழமை இதுதொடர்பில் கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து பேசவுள்ளனர்.
 
இதுதவிர, வட்டாரமுறை ரீதியிலான தேர்தல்முறை பெரும் பிரச்சினையாக இருக்கின்றது. எங்களுடைய நீண்டகால போராட்டத்தின் பின்னர் 70:30 என்றிருந்த வட்டாரம் மற்றும் விகிதாசார தேர்தல் முறையை மாற்றுவதற்கான திருத்தம் அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்‌ளது. 60% வட்டாரம் மற்றும் 40% விகிதாசரம் என்ற ரீதியில் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
 
வட்டார எல்லை நிர்ணயம் தொடர்பிலும் பல பிரச்சினைகள் இருக்கின்றன. வட, கிழக்கில் எல்லை நிர்ணயத்தில் பல குளறுபடிகள் நடைபெற்றுள்ளன. இதுதொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் பலவிதமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. தேர்தலொன்று நடைபெறுமானால், அதற்கு முன் எல்லைநிர்ணய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உத்தரவாதம் ஒன்றை தரவேண்டுமென நான் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். அவரும் அதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
 
 எந்த சூழ்நிலை வந்தாலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தலுக்கு முகம்கொடுக்க என்றும் தயாராகவே இருக்கிறது. வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாணசபை தொடர்பில் தேசியக் கட்சிகள் அச்சம்கொள்கின்றன. ஆனால், கிழக்கு மாகாணசபையைப் பெறுத்தவரை முஸ்லிம் காங்கிரஸும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தேர்தலை எதிர்கொள்ள என்‌றும் தயாராகவே இருக்கிறது.
 
இதுதவிர, தேர்தலில் பெண்களுக்கு 25% ஒதுக்கீடு வழங்குமாறு கூறப்பட்டுள்ளது. இதற்கு முஸ்லிம் காங்கிரஸ் இப்போதே ஆயத்தங்களை செய்துகொண்டு வருகிறது. அதுபோல கட்சியின் மத்திய குழுக்கள் விரைவில் வட்டார ரீதியில் அமைக்கப்படவேண்டும். அதற்கான பணிகளை அந்தந்த அமைப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
 
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி என்பன வாரிசுரிமை அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து செயற்படுகின்‌றன. ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வாரிசுரிமைக்கு குழிபறித்த கட்சி என்று சொல்லாம். இது பாராம மக்களின் கட்சி. அமைச்சர் பதவி இருந்தால் மட்டும்தான் சிலரின் கட்சிகள் உயிரோடு இருக்கும். ஆனால், முஸ்லிம் காங்கிரஸ் அமைச்சு பதவியை தூக்கியெறிந்த காலங்களில்தான் அபாரமாக வளர்ச்சி கண்டிருக்கிறது.
 
மஹிந்த ஆட்சிக்காலத்தில் அவருடன் நன்றாக அனுபவித்துவிட்டு, முஸ்லிம் சமூகத்துக்காக எங்கள் கட்சி வெளியேறுகிறது என்று சொல்லிக்கொண்டு ஓடிவந்தவர்கள், முஸ்லிம் காங்கிரஸ் வெற்றிலை சின்னத்தில் மட்டுமே களமிறக்க வேண்டுமென்று அப்போதையே ஜனாதிபதியுடன் சண்டை பிடித்தனர். ஆனால், நால்கள் தூக்கு கயிற்றில் தொங்கினாலும் வெற்றிலை சின்னத்தில் கேட்கமாட்டோம் என்று அடித்துக்கூறிவிட்டேன் என்றார்.
 
திருகோணமலை மாவட்ட செயற்குழுவின் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் ஏற்பாட்டின் கீழ், ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜே.எம். லாஹிர், ஆர்.எம். அன்வர், முன்னாள் தவிசாளர் எச்.எம்.எம். பாயிஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM