Web
Analytics
நீரை பாதுகாக்க தனியான நிறுவனம் உருவாக்கப்படவேண்டும்: அமைச்சர் ரவூப் ஹக்கீம் - Sri Lanka Muslim Congress
நீர் பாதுகாப்பு என்ற விடயம் பல்வேறு அரச நிறுவனங்களில் கீழ் வருவதால் அதை கையாள்வது சவாலுக்குரிய விடயமாகியுள்ளது. 

எனவே, நீரை பாதுகாக்கும் பணியை சரிவரச் செய்வதற்கு பொறுப்பான தனியான அரச நிறுவனமொன்றை உருவாக்கவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
 
“இயற்கையும் நீரும்” என்ற தொனிப்பொருளில் இன்று (22) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக நீர் தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது;
 
இலங்கையிலுள்ள நூற்றுக்கு மேற்பட்ட ஆறுகள், ஆற்றுப் படுக்கைகள், நீர் மூலங்களை பாதுகாப்பதற்கு தனியான செயற்திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஒரு நிறுவனம் இல்லாமை துர்ப்பாக்கியமான விடயமாகும். நீர் பாதுகாப்பு என்பது பல்வேறு அரச நிறுவனங்களில் கீழ் வருவது என்பது மிகவும் சவாலுக்குரிய விடயம்.
 
நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, மகாவலி அதிகாரசபை, வன பரிபாலனத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் போன்ற அரச நிறுவனங்கள் நீர் பாதுகாப்பு விடயத்தில் பொறுப்பாக உள்ளன. ஆனால், அடுத்த பரம்பரைக்கு கொடுப்பதற்காக நீரை பாதுகாக்கின்ற விடயத்தை யாருமே சரிவர செய்யமுடியாத நிலவரம் காணப்படுகிறது.
 
எதிர்கால சந்ததியினருக்கு நீரை பாதுகாத்துக்கொடுக்கும் பணியை சரிவரச் செய்வதற்கு பொறுப்புடைய தனியான அரச நிறுவனமொன்றை உருவாக்கவேண்டும். வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் வருகின்ற நீர் சம்பந்தமான நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கு பாதகமில்லாத வகையில், நீரை பாதுகாக்கும் பணியை இந்நிறுவனம் மூலம் செய்யவேண்டும்.
 
ஒவ்வொரு ஆண்டும் வெள்ளப்பெருக்கு, மண்சரிவு என்பன ஏற்படுகின்ற நிலையில் அத்தகைய சவலாக்கு முகம்கொடுக்க நேரிடுகிறது. அத்துடன் நகர மயமாக்கல் அதிகரித்துவருவதால் குடிநீர் பிரச்சினை மட்டுமல்லாது, மலசல கழிவகற்றலும் பாரிய பிரச்சினையாக உருவாகியிருக்கிறது. குடிநீருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மலசல கழிவகற்றலுக்கு வழங்கப்படாமையிட்டு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கண்டிப்பாக கவனம் செலுத்தியாகவேண்டும்.
 
தொழிற்சங்கங்கள் ஊழியர்களின் சம்பள அதிகரிப்பில் காட்டுகின்ற கரிசணையை பாவனையாளரின் தேவைப்பாடுகளை நிவர்த்தி செய்வதிலும் நீர் வழங்கலின் தரத்தை பேணுவதிலும் காட்டவேண்டும். தரநிர்ணயத்தை உரிய முறையில் கையாள்வதில் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் ஊழியர்கள் அனைவரின் பங்களிப்பும் அவசியமானது.
 
2017ஆம் ஆண்டில் நீர் வழங்கல் செயற்திட்டங்களுக்காக 225 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. இவ்வாண்டில் செயற்திட்டங்களை வெற்றிகரமாக கையாள முடியுமானால் 300 பில்லியன் ரூபா வரை நிதியொதுக்கீட்டை பெறுவது சாத்தியமாகும்.
 
2020ஆம் ஆண்டளவில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய குடிநீர் தட்டுப்பாட்டுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என எதிர்வுகூறப்படுவதால், அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் சிலர் கலந்துரையாடினோம். இதற்கு தீர்வு காண்பதற்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஒன்றிணைந்து தீர்வுகாணவேண்டியிருப்பதால் ஜனாதிபதி தலைமையில் கூடி ஆராய்வதற்கு தீர்மானித்தோம் என்றார்.
 
உலக நீர் தினத்தை முன்னிட்டு பாடசாலை ரீதியில் நடைபெற்ற கட்டுரை மற்றும் சித்திரப் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ, மாணவிகளுக்கு இதன்போது சான்றிதழ்களும் பரிசில் வழங்கப்பட்டன. அத்துடன் நீர் சுத்திகரிப்பு, கழிவு நீரகற்றல், மீள்சுழற்சி போன்றவற்றில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் மற்றும் செய்முறை பற்றிய கண்காட்சியும் இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிகழ்வில் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் டி.ஜி.எம்.வி. ஹப்பு ஆராய்ச்சி, இராஜாங்க அமைச்சின் செயலாளர் விஜயலட்சுமி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் கே.ஏ. அன்சார், பிரதி தலைவர் எம்.எச்.எம். சல்மான், பொது முகாமையாளர் தீப்தி சுமனசேகர, செயலாற்றுப் பணிப்பாளர் மஹிலால் டி சில்வா, வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM