புத்தளம், கல்பிட்டி பிரதேசத்தில் ஜப்பான் நாட்டு நிதியுதவியுடன் பாரிய குடிநீர் வழங்கல் திட்டமொன்றை ஆரம்பிக்கும் நோக்கில் அமைச்சர் ரவூப் ஹக்கீமின் அழைப்பை ஏற்று இலங்கைக்கான ஜப்பான் நாட்டுத் தூதுவர் ஹேனிச் சுஹனுமா திங்கள்கிழமை (05) அமைச்சருடனும், அதிகாரிகளுடனும், அரசியல் பிரமுகர்கள் குழுவினருடன் அப்பிரதேசத்திற்கு நேரடி விஜயமொன்றை மேற்கொண்டனர்.

கல்பிட்டி பிரதேசத்திலுள்ள நிலத்தடி நீரில் பலவகையான இராசாயனப் பொருட்கள் கலந்துள்ளதால் அங்குள்ள மக்கள் பல நோய்களுக்கு ஆளாகிவரும் நிலையிலேயே ஜப்பான் அரசாங்கம் இக்குடிநீர்த்திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது.

இக்குழுவினர் கல்பிட்டி – குடாவெவ, பெரியகுடியிருப்பு ஆகிய பிரதேசங்களுக்கு சென்று குடிநீர் திட்டதை அமுல்படுத்துவதற்கான சாத்தியப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்ததுடன், இத்திட்டம் தொடர்பாக விளக்கமளிக்கும் செயலமர்வொன்றும் அமாய லஹ{ன் ஹோட்டலில் இடபெற்றது.

இத்திட்டத்தினூடாக சுமார் 70,000 மக்கள்  சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ளவர்.

அங்கு ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பியகேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போது அமைச்சர் ஹக்கீம் கூறியதாவது,

கலாஓய திட்டதின் அடுத்த கட்ட முயற்சியாக நாங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் இந்த பிரதேசத்திற்கான சுத்தமான குடிநீரை வழங்குவதற்காக பிரேத்தியமாக பாரிய நீர்த்தேக்கமொன்றை உருவாக்குவதற்கு திட்டமிட்டு அதன் மூலமாக நீர் வழங்கல் திட்டங்களை விஸ்தரிப்பதற்கு ஆலோசித்திருந்தோம்.

அதற்கு இதுவரை நீர்ப்பாசன திணைக்களத்தின் அனுமதி முழுமையாக கிடைக்கப்பெறாத சூழ்நிலையில் மாற்றீடாக கடல்நீரை சுத்திகரித்து அதன் உவர்ப்பு தன்மையைப் போக்கி அதனை சுத்தமான குடிநீராக இப்பிரதேச மக்களுக்கு வழங்குவதற்கு ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் உதவியோடு, ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஒத்துழைப்பையும் பெற்று வழங்க இருக்கின்றோம்.

முழு கல்பிட்டி தீபகற்பகத்திற்குமான ஏறத்தாழ 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழ்கின்ற இந்தப் பிரதேசத்தில், நீண்டகாலமாக குடிநீர்ப்பிரச்சினை மிக முக்கியமான அடிப்படை வாழ்வாதாரப் பிரச்சினையாக இருந்து வருகின்றது.

அண்மையிலே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜப்பான் நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது அவரிடம் நான் முன்வைத்திருந்த யோசனையின் அடிப்படையில் அவர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு இந்த பிரதேசத்திற்கான நீர் வழங்கல் திட்டத்திற்கு நிதி ஒதுக்குவதற்கு ஜப்பான் இணங்கியுள்ளது. இக்கருத்திட்டத்தை ஆரம்பிக்க முன்னர் இது குறித்து இப்பிரதேச நிலைமைகளை பார்வையிடவும் நேரடியாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அதிகாரிகளோடு இங்கு ஆலோசனை நடாத்துவதற்காகவும் இன்று (திங்கள்கிழமை) ஜப்பான் நாட்டுத் தூதுவர் என்னுடன் இங்கு வருகை தந்துள்ளார். இந்த வருகையின் பின்னர் கல்பிட்டி பிரதேசத்திற்கான நீர் வழங்கல் திட்டத்தை மிக விரைவில் அமுல்படுத்துவதற்கு வாய்ப்புக்கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருக்கின்றோம் என்றார்.

இவ்விஜயத்தின் போது வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், முன்னாள் பிரதியமைச்சர் கே.ஏ.பாயிஸ், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் பொறியியலாளர் கே.ஏ.அன்சார் மற்றும் உயரதிகாரிகள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.

இக்பால் ஜெம்சாத்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM