(நாச்சியாதீவு பர்வீன், ஜெம்சித் இக்பால்) 
 
 
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தில் பன்னெடுங்காலமாக வறிய மக்கள் விவசாயம் செய்து வந்த பாலையடி வெட்டை கிரான்கோவை காணிகளை தொடர்ந்தும் செய்கை பண்ணவிடாமல்

பல்வேறு காரணங்களைக் கூறி தடுக்கப்பட்டு வருவது தொடர்பில் அரச மேல் மட்டத்தில் கலந்துரையாடி உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தம்மைச் சந்தித்து முறையிட்ட ஊர் பிரமுகர்களிடம் உறுதியளித்தார்.
 
பாலையடிவெட்டை கிரான்கோவை (மேற்கு) விவசாயிகள் அமைப்பின் சார்பில் பொத்துவில் ஜம்இய்யத்துல் உலமா தலைவர் ஆ. ஆதம் லெப்வை மௌலவி, பிரஸ்தாப விவசாயிகள் அமைப்பில் செயலாளர் எம்.ஏ.எம்.இஸ்மாலெப்வை ஆகியோர் அடங்கிய குழுவினரும் வேகாமம் கமக்காரர் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் ஏ.கே.எம்.இப்றாகீம், செயலாளர் எம்.ஐ.இஸ்ஸதீன் ஆகியோரைக் கொண்ட குழுவினரும் அமைச்சர் ஹக்கீமை கொழும்பில் திங்கள்கிழமை (17) முற்பகல் அவரது இல்லத்தில் சந்தித்து, யுத்தம் முடிவடைந்து அமைதி நிலவும் சூழலிலும் கூட தமது பயிர் நிலங்களில் விவசாயத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டு வருவது குறித்து முறையிட்டபோதே அமைச்சர் இவ்வாறு உறுதிமொழி வழங்கினார்.
 
அமைச்சர் ஹக்கீமை சந்தித்து இந்த காணிப்பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடியதன் பின்னர் இரு அமைப்பினரும் ஊடகங்களுக்கு வௌ;வேறாகக் கருத்தத் தெரிவித்தனர்.
 
முதலில் பாலையடிவெட்டை கிரான்கோவை (மேற்கு) விவசாயிகள் அமைப்பின் சார்பில் தமது நிலைப்பாட்டை தெரிவித்த பொத்துவில் ஜம்இய்யத்துல் உலமா தலைவர் ஆ. ஆதம் லெப்வை மௌலவி பின்வருமாறு கூறினார்.
 
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் 2004ஆம் ஆண்டு வந்து எமது பொத்துவில் பிரதேச மக்கள் வேளாண்மை செய்து வந்த இந்த பாலையடி வெட்டை கிரான்கோவை காணிகளை சுற்றிவளைத்துப் பார்வையிட்டு, அவற்றை அடையாளப்படுத்தி, அரச நில அளவையாளர்களைக் கொண்டு அளவீடு செய்து, 502 ஏக்கர்களில் என விவசாயத்தில் ஈடுபட அனுமதித்தனர். அத்துடன் காட்டுப்பிரதேசத்திற்குள் யாரும் போகக்கூடாதென்றும் கூறிவிட்டனர். அதன்பிரகாரம் நாங்கள் அங்கு விவசாயம் செய்து வருகின்றோம்.  
 
2011ஆம் ஆண்டு திடீரென அங்கு யாரும் விவசாயம் செய்யக்கூடாதென லஹுகல பிரதேச செயலாளர் மற்றும் வனபரிபாலன திணைக்களத்தினர் தடுத்துவிட்டனர். நீண்டகாலமாக பொத்துவில் முஸ்லிம்கள் செய்கை பண்ணிவந்த இந்தக்காணிகளில் விவசாயத்தில் ஈடுபட விடாமல் தடுத்ததற்கு என்ன காரணமென்று கேட்டாலும் சரியாக பதில் தருவதாக இல்லை. சில வேளைகளில் இந்த நிலங்களினூடாக யானைகள் செல்ல வேண்டியுள்ளது என்கின்றார்கள். யானைகள் செல்வதற்கு வேறு காட்டுப் பாதைகள் இருக்கத்தக்கதாக இவ்வாறு கூறுகின்றார்கள். 
ஆகையால் எமது வறிய மக்கள் தமது வாழ்வாதாரத்திற்காக செய்கை பண்ணி வந்த இந்த காணிகளில் விவசாயம் செய்யவிடாது தடுத்ததிலிருந்து அதில் ஈடுபட்ட 250 குடும்பத்தினர் வரையில் மிகவும் கஷ;டப்படுகின்றார்கள். அவர்களது பாடசாலை செல்லும் பிள்ளைகள்கூட பொருளாதாரப் பிரச்சினை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, அந்தக் காணிகளை மீட்டுத்தருவதற்கு உதவுவார் என்ற நம்பிக்கைகயில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீமைச் சந்தித்து உருக்கமான வேண்டுகோளை முன்வைத்தோம்.
 
உண்மையில் இந்தக் காணிகளில் செய்கை பண்ணவிடாது தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ, வனபரிபாலன திணைக்களத்தினருக்கோ அதிகாரம் கிடையாது.
 
இவ்வாறிருக்க, கிழக்கு மாகாண சபையினால் இந்த நிலங்கள் சம்பந்தமாக காணிக் கச்சேரியொன்று நடாத்தப்பட்டது. அதன் பயனாக 96 பெர்மிட்டுகளை வழங்கிய பின்னர் மத்திய அரசாங்கத்திலிருந்து உத்தரவு வந்ததாகக் கூறி அனுமதிப்பத்திரம் வழங்குவதை இடைநிறுத்தி விட்டனர். அதன் பின்னர் மாகாண காணி ஆணையாளரும் பொத்துவில் பிரதேச செயலாளரும் வந்து விசாரணை நடாத்தி வழங்கப்பட்ட 96 பெர்மிட்டுகளையும் லஹுகல பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறும் ஏனையவர்களுக்கும் அந்த பிரதேச செயலாளரூடாக வழங்குமாறும் மாகாண ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். 
மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் எவற்றையும் அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் இல்லை. எந்த நோக்கத்திற்காக அவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதும் எங்களுக்குப் புரியவில்லை. சிறுபான்மையினர் என்ற காரணத்தினால் தான் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கின்றது. 
 
முன்னாள் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த இடத்திற்கு வருகைதந்து இதற்கான தீர்வு வழங்கப்பட்டிருந்தது. இதற்கான ஆதாரங்கள் எங்களிடம் இருக்கின்றன. ஆனால் தீர்மானங்களை நிறைவேற்றாமல் பிரதேச மட்ட அதிகாரிகள் குழப்பங்களை ஏற்படுத்துகின்றார்கள். இதற்கான தீர்வையினைப் பெற்றுத்தாருங்கள் என்றால் அங்குள்ள கீழ்மட்ட அதிகாரிகள் யானைகள் செல்வதற்கு தடையாக இருக்கின்றது அதனால் இதற்கான அனுமதி தரமுடியாது என்று சொல்கிறார்கள்.
 
அப்போதைய அரசாங்க அதிபர் ஹேரத் அபேவீரவின் பணிப்புரைக்கமைய 2004ஆம் ஆண்டு விவசாயம் செய்கின்ற பிரதேசத்திற்குச் சென்று பூர்வீகமாக வேளாண்மை செய்த காணிகளை அளவீடு செய்து உரியவர்;களிடம் வழங்கிவிட்டு யானைகள் செல்வதற்குரிய மாற்றுப் பாதையை ஏற்படுத்திக் கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
 
சகல பிரச்சினைகளுக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது. மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த பிரச்சினைகள் ஒன்றும் எழுந்திராது. மாகாண காணி ஆணையாளரூடாக தனக்கு அனுமதி கிடைத்தால் அதைத் தாம் நடைமுறைப்படுத்தலாம் என லஹுகல பிரதேச செயலாளர் கூறினார்.
 
மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் குறிப்பிட்ட காணிகளுக்கு அனுமதிப்பத்திரத்தை வழங்க வேண்டும் என்று 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதி தீர்மானம் எடுக்கப்பட்டது. 
 
2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதி அந்தக் காணிகளுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் என மீண்டும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் இதன் பிரகாரம் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன. இது தொடர்பாக லஹுகல பிரதேச செயலாளருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
2002ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்க காலத்தில் இந்த விவசாய நிலங்களில் விவசாயம் செய்து வந்துள்ளோம். அதன் பின்னர் தான் வனபரிபாளன திணைக்கள அதிகாரிகள் வந்து பிரச்சினையை ஏற்படுத்தினார்கள். இருந்தும் 2011ஆம் ஆண்டிலிருந்து இக்காணிகளில் விவசாயம் செய்வதற்கு தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
 
அடுத்து, வேகாமம் கமக்காரர் அமைப்பின் சார்பில் தமது நிலைப்பாட்டை தெரிவித்த அதன் தலைவர் ஏ.கே.எம்.இப்றாகீம் பின்வருமாறு கூறினார்.
 
1956ஆம் ஆண்டு நடுத்தர வகுப்பினருக்கு என்று சொல்லி எங்களுடைய மூதாதையர்களுக்கு ஐ.தே.கட்சி அரசாங்கத்தால் விவசாயத்தை ஊக்குவிக்கும் முகமாக இந்தக் காணிகள் வழங்கப்பட்டன. அதன் பின்னர் இக்காணிகளில் 1990ஆம் ஆண்டு வரை விவசாயம் செய்து வந்தோம். 1990ஆம் ஆண்டில் ஏற்பட்ட கோர யுத்தத்தின் காரணமாக தொடர்ந்தும் எங்களுக்கு விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட முடியவில்லை. 2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்து அமைதி நிலவிய பின்னர் காணிகளை துப்புரவு செய்து மீண்டும் 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் விவசாயத்தில் ஈடுபட்டோம். 
 
2011ஆம் ஆண்டு 40 நாள் வேளாண்மை செய்கையின் பின்னர் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் வந்து, 2006ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தலின்படி இக்காணிகள் வனபரிபாலன திணைக்களத்திற்கு சொந்தமானது எனக்கூறி விவசாயத்தில் ஈடுபட்டிருந்த எங்களுக்கெதிராக வழக்குத் தாக்கல் செய்து தடைவிதித்தார்கள். அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தின் முன்னுள்ளது.  
 
இவற்றை செவிமடுத்த அமைச்சர் ரவூப் ஹக்கீம் உரிய ஆலோசனைகளை வழங்கியதோடு விரைவில் அரச மேல்மட்டத்தில் இவை தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்தி தீர்வுகாணப்படும் சாத்தியமுள்ளதாக அவர்களிடம் நம்பிக்கை தெரிவித்தார்.
 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM