வாழைச்சேனை மீறாவோடை சக்தி வித்தியாலத்தினால் அண்மையில் விளையாட்டு மைதானத்தை விஸ்தரிப்புச் செய்வதற்காக

அதன் அண்மையிலுள்ள முஸ்லிம்களின் காணிகளை சட்ட ரீதியற்ற முறையில் சுவீகரிப்பதற்கு குறிப்பிட்ட சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதுடன், இதனை காரணம் காட்டி இன முறுகலை தோற்றுவிப்பதற்காகவும் சிலர் முயற்சித்து வருகின்றனர். இதனால் அப்பிரதேசத்திலுள்ள முஸ்லிம்களின் காணிகள் இல்லாமல் போகும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

இதன்தொடரில் 2017.08.15-செவ்வாய்க்கிழமை காலை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ண தேரர் தலைமையில் மீண்டும் அப்பிரதேசத்திற்கு வருகைதந்த சிலர் குறித்த பிரதேசத்தின் அருகாமையில் வாழுகின்ற முஸ்லிம் மக்களுக்கெதிரான ஆர்ப்பாட்டம் ஒன்றினை பிற்பகல் இரண்டு மணி வரை மேற்கொண்டதுடன், முஸ்லிம்களின் காணிகளில் காணப்பட்ட வேலிகளை உடைத்தெரிந்து அப்பிரதேசத்திலுள்ள மக்களை எச்சரிக்கையும் செய்து இன முறுகலை ஏற்படுத்துவதற்கும் முற்பட்டுள்ளனர்.

 
இதன்போது குறித்த காணி வேலியோரம் மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ண தேரர் தலைமையில் வந்தவர்கள் வேலியை தகர்க்க முற்பட்ட போது பொலிஸார் தடுத்து நிறுத்தி நீதிமன்றத்தின் தடை உத்தரவுப் பத்திரத்தை வேலியில் ஒட்டினர். நீதிமன்ற தடை உத்தரவை மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிடியே சுமந்திரதேரர் கிழித்தெறிந்து வேலி கம்பை பிடுங்கி எறிய அவரோடு வந்தவர்களும் வேலியை பிடுங்க முற்படும் போது பொலிஸார் தடுத்து நிறுத்தினர்.
 
இச்சம்பவம் தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் எச்.எம்.எம். றியாழ் அவர்களின் செயலாளர் ஏ.எல். றபீக் (வைப்ரசன்), மாஞ்சோலை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உபதலைவர் எச்.எம். கபீர் மற்றும் மாஞ்சோலை ஜூம்ஆ பள்ளிவாயலின் முன்னாள் தலைவர் அல்ஹாஜ். சீ.எம். காதர் ஆகியோர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களை உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நிலவரத்தினை தெரியப்படுத்தி இருந்தனர்.
 
இவ்விடயமாக தொடர்பாக உடனடி கவனம் செலுத்திய கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், கல்குடா பிரதேசத்திற்குப் பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோரை உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு நிலவரத்தினை விபரித்ததுடன் அப்பிரதேசத்தில் எதுவிதமான அசம்பாவிதங்களும் நடைபெற்று இனமுறுகள் ஏற்படாதவாறு பாதுகாப்புகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.
 
உடனடியாக செயற்படும் வண்ணம் அப்பிரதேசத்திற்கு சென்ற பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டு கலவரத்தினை ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்த மட்டக்களப்பு மங்களராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ண தேரர் மற்றும் அவருடன் வருகை தந்த குழுவினரையும் அவ்விடத்திலிருந்து அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு நிலவரத்தினை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
 
அதனைத்தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக மாஞ்சோலை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் உபதலைவர் எச்.எம். கபீர் மற்றும் மாஞ்சோலை ஜூம்ஆ பள்ளிவாயலின் முன்னாள் தலைவர் சீ.எம். காதர் ஹாஜியார் ஆகியோரின் அழைப்பின்பேரில் பி.ப. 4.00 மணியளவில் சம்பவ இடத்திற்கு நேரடியாக வருகைதந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் அப்பிரதேசத்திலுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடினார்.
 
இவ்விடயம் தொடர்பாக பொதுமக்களில் ஒருவர் கருத்து தெரிவிக்கையில் இக்காணி சம்மந்தப்பட்ட ஆவணங்கள் சில எங்களிடம் இருப்பதாகவும், யுத்த காலத்தில் எங்கள் காணிகளில் இலங்கை இராணுவத்தினர் காவலரண்கள் அமைத்திருந்த நிலையில் நாங்கள் எங்களது இடத்தை விட்டு எங்களது உறவினர்களின் வீடுகளுக்குச் சென்றிருந்தோம் எனவும் அதன் பிற்பாடு இலங்கை அரசாங்கம் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் மீள்குடியேறுமாறு செய்திகள் வாயிலாக அறிந்ததையடுத்து எமது வழமையான இடத்துக்கு வந்து குடியமர்ந்து வழமை போன்று எங்களது தொழில்களில் ஈடுபட்டு வருகின்றோம் என்றும் தெரிவித்தனர்.
 
பின்னர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்கள் கருத்து தெரிவிக்கையில் அவர் இச்சந்திப்பின்போது இது விடயம் தொடர்பாக பெலிசாரை தொடர்புகொண்டு இனமுறுகள்கள் ஏற்படாத வகையில் அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும், இரவு வேளையியிலும் பொலிஸார் இப்பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
மேலும், இக்காணிப் பிரச்சினை தொடர்பாக இரு இன மக்களும் மற்றும் அவர்களை சார்ந்த அரசியல் பிரமுகர்களும் கலந்துரையாடி ஒரு தீர்வினை பெற்றுக்கொள்ளும் வரை எதுவிதமான செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாமெனவும் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.
 
அத்துடன், 30 வருட கால பயங்கரவாத யுத்தம் நாட்டின் நிலையான சமதானத்தைச் சீர்குலைத்து, யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அது சரியான முறையில் நிலை நாட்டப்படவில்லை. அதற்கான முயற்சிகள் இன்று வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான சூழலில், இனவாதம் சமூக வலைத்தளங்களினூடாகவும், இவ்வாறான செயற்பாடுகளினூடாகவும் மிக மோசமான முறையில் பரப்புரை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இனவாதத்தைப் பரப்பி சமூகங்களுக்கிடையில் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதற்கு சிலர் முயற்சி செய்து வருகின்ற நிலைமை உருவாகியுள்ளமை மிகவும் கவலைக்குரிய விடயமாக இருப்பதுடன், இது விடயமாக பொதுமக்களாகிய நீங்கள் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM