நவாஸ் சௌபி
 
 
அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் காணி மற்றும் மீள் குடியேற்றப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் செயற்பாடுகளை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் அதன் தலைமையும் தொடராக மேற்கொண்டுவருவதன் மூலம் பல முன்னேற்றகரமான முடிவுகளும் எட்டப்பட்டுவருகின்றன.

 
இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் காண்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் பல்வேறுமட்ட வேலைத் திட்டங்களையும் நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட தொடர் செயற்பாடுகளையும் மேற்கொண்டு, சாதகமான முடிவுகளை எட்டுவதற்கு தன்னாலான எல்லா முயற்சிகளையும் தீவிர முனைப்புடன் எடுத்துவருகின்றார். 
 
இதன் முக்கிய ஒரு அம்சமாக, கடந்த திங்கட்கிழமை 24 ஆம் திகதி  அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதுடன் தொடர்புடைய உயர் அதிகாரிகளை தனது தலைமையில் அழைத்துவந்து உரிய இடங்களின் உண்மை நிலைமைகளை அவர்களுக்கு நேரடியாக காண்பித்து தலைவர் ரவூப் ஹக்கீம் விளக்கமளித்துள்ளார். 
 
இவ்விஜயத்தில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி. வணிகசிங்க, வன பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் ஏ.ஆர்.என். முனசிங்க உள்ளிட்ட அதிகாரிகள், வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள், நில அளவைத் திணைக்கள அதிகாரிகள், தொல்பொருளியல் திணைக்கள அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம். சல்மான், எம்.ஐ.எம். மன்சூர், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், ஆரிப் சம்சுதீன், ஆகியோருடன் கட்சியின் முக்கியஸ்தர்களும் பாதிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
 
இதன்படி, வேகாமம், பள்ளியடி வட்டை, கிரான்கோமாரி, வட்டமடு, கிராங்கோ ஆகிய இடங்களுக்கு, ஒரேநாளில் நேரடி விஜயங்களை மேற்கொண்டு உரிய அதிகாரிகள் முழு விபரங்களும் பெறக்கூடியவகையில்  தெளிவுபடுத்தப்பட்டுள்ளதோடு, தீர்வுகளை எட்டுவதற்கான ஆரம்பகட்ட முடிவுகளும் எடுக்கப்பட்டுள்ளன. இதன்;மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வுகளை துரிதமாகப் பெற்றுக்கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
 
இப்பிரச்சினைகள் தொடர்பாக உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் முதலாம் கட்ட நடவடிக்கையாக கடந்த பெப்ரவரி 23 ஆம் திகதி, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை எமது நாட்டின் அரசியல் உயர்பீடமான பாராளுமன்றத்திற்கு அழைத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றினையும் ஏற்பாடு செய்து நடத்தியிருந்தார். 
 
மேற்படி சந்திப்பில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் உள்ள தடங்கல்கள் மற்றும் இடையூறுகளை நிவர்த்தி செய்வதனை நோக்காகக்கொண்டும், அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முடிவுகளை எடுக்கவும் ஜனாதிபதியின் செயலாளரும் மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளரும் வழங்கிய பணிப்புரையின் கீழ் உரிய இடங்களுக்கான நேரடி விஜயமான இப்பயணம் அமைந்திருந்தது. 
 
குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மக்கள் பாரம்பரியமாக பயிர் செய்து வந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் வன ஜீவராசிகள், வன விலங்கு பாதுகாப்பு திணைக்களம், தொல்பொருட் திணைக்களம் மற்றும் புனித பூமித் திட்டம் போன்றவற்றினால் சுவீகரிக்கப்பட்டவைகளாக இருப்பது இதற்கான தீர்வுகளைப் பெறுவதில் பெரும் தடையாக இருக்கின்றது.
 
அதாவது, யுத்த முடிவுக்குப் பின்னர் 2009 ஆம் ஆண்டிலிருந்து குறிப்பாக, வனபரிபாலனைத் திணைக்களம், வனவிலக்குத் தினைக்களம், தொல்பொருள் திணைக்களம் ஆகிய மூன்று திணைக்களங்களும் தாங்களுக்குள்ள சட்டரீதியான நடிவடிக்கைகள் என்ற அடிப்படையில் மேற்கொள்கின்ற செயற்பாடுகளின் பின்னணியைப் பார்த்தால் அவை யாவும் ஏனைய மாவட்டங்களோடு ஒப்பிடும் போது அம்பாறை மாவட்டத்தில் அதிகமாகவும் தீவிரமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கலாம்.
 
மேற்படியான மூன்று திணைக்களங்களின் ஊடாகவும் மிகஅவசர அவசரமாக வெளியிடப்பட்டிருக்கின்ற வர்த்தமாணி அறிவித்தல்களின் ஒரு தொகுப்பை எடுத்து, ஏனைய மாவட்டங்களில் இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள வர்த்தமாணி அறிவித்தல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இதன் உண்மை நிலவரம் தெரியும்.  
 
இவற்றையெல்லாம் ஆதாரமாக கொண்டு, மேற்படி, இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டதன் மூலம்  இக்காணிகள் தொடர்பான பிரச்சினைகள் யாவும் மிகத் தெளிவாகவும் முழுமையாகவும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுக்கு முன்வைக்கப்பட்டிருப்பதோடு, குறிப்பிட்ட பிரச்சினைகளால் உரிய மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுமிருக்கிறது.  
 
தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் மேற்கொள்ளப்பட்ட இவ் நேரடி விஜயமானது, அம்பாறை மாவாட்ட முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முடிவுகளை எட்டுகின்ற இறுதிக் கட்டத்தை அடைய வைத்திருப்பதோடு, இப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான மகத்தான ஒரு தருணமாகவும் அமைந்திருந்தது. 
 
மேற்படி உரிய இடங்களுக்கு நேரடியாகச் சென்று அவதானித்த விடயங்களையும் பெற்றுக்கொண்ட தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு, மறுநாள்  செவ்வாய்க்கிழமை 25ஆம் திகதி, அம்பாறை மாவட்ட செயலகத்தில் விசேட கூட்டமொன்று திணைக்கள அதிகாரிகளினால் நடாத்தப்பட்டது. இதன்போது வட்டமடு காணிப்பிரச்சினை தொடர்பில் முரண்பட்டுள்ள விவசாயிகளையும் பாற்பண்ணையாளர்களையும் அழைத்து சமரசம் ஏற்படுததப்பட்டதோடு, பள்ளியடிவட்டை காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடலும் நடைபெற்றது. இதன்போது பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வுகளை பெறுவதற்கான உபாயங்கள் தொகுக்கப்பட்டு உரிய முடிவுகள் விரைவில் மாவட்ட செயலாளரினால் அமுல்படுத்தப்படும் வகையில் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
இவற்றுக்கு மேலாக, ஏற்கனவே வட்டமடு மற்றும் கிரான்கோமாரி பிரதேங்களில் நிலவிய காணிப் பிரச்சினைகளுக்கு தற்காலிகத் தீர்வாக, பாதிக்கப்பட்ட விவசாய்கள் தங்கள் காணிகளில் விவசாயம் செய்வதற்கான அனுமதிக் கடிதமும் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களினால் பெற்றுக் கொடுக்கப்பட்டுமிருக்கிறது. 
 
இவ்வாறு தற்காலிகத் தீர்வுகள் பெறப்பட்ட காணிகளுக்கு நிரந்தரத் தீர்வுகளைப் பெறுவதோடு தீர்வுகளற்று காலம் இழுத்தடிக்கப்படும் ஏனைய காணிகளுக்கும் உரிய தீர்வுகளை எட்டுவதற்கும் இந்த நேரடி விஜயம் வழி செய்திருக்கிறது. 
 
மேற்படி விஜயம் செய்த இடங்கள் தவிர்ந்த, அம்பாரை மாவட்ட முஸ்லிம்களுக்குப் பிரச்சினையாக இருக்கின்ற ஏனைய காணிகளான அம்பலத்தாறு, கீத்துப் பத்து, பொன்னன் வெளி போன்ற இடங்களுக்கான நேரடி விஜயத்தினையும் உரிய அதிகாரிகளுடன் மேற்கொண்டு, மிகவிரைவில் அவற்றுக்கான தீர்வுகளையும் பெற்றுக் கொடுக்கும் முனைப்புடன் தலைவர் ரவூப் ஹக்கீம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.
 
எமது மக்களை இந்த மண்ணைக் காப்பாற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பைச் சுமந்த ஒரு கட்சியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எப்போதும் இருப்பதோடு, இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளை விவேகமான வேகத்துடன் பெறவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அதன் தலைவர் ரவூப் ஹக்கீம் எதிலும் நிதானமாக செயற்பட்டுக் கொண்டிருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM