Web
Analytics
முஸ்லிம் காங்கிரஸ் ஏன் யானைச் சின்னத்தில்? - Sri Lanka Muslim Congress
குட்டித் தேர்தலுக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
 
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்பட்ட மக்கள் விரோத சக்திகள், கடந்த பொதுத் தேர்தலில் உருவான தேசிய அரசாங்கத்தை கவிழ்த்து, மீண்டும் பதவிக்கு வருவதற்கு பகீரத பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கும் சுழலில்

நடைபெறும் இந்த தேர்தலானது, உள்ளூராட்சி சபைகளை கைப்பற்றுவதற்கு அப்பால் தேசியக் கட்சிகளின் செல்வாக்கை நாடிபிடித்துப் பார்க்கின்ற ஒரு தேர்தலாகும்.

மக்கள் செல்வாக்குள்ள அணி ‘யானை’, ‘கை’, ‘தாமரை மொட்டு’ இவற்றில் எதுவென்பதை எடைபோடும் தேர்தல் இது என்பதாலேயே, உள்நாட்டிலும் வெளி நாடுகளிலும் இத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
 
சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பான அணி எது?
 
‘தாமரை மொட்டு’ உரிமையாளர்களான மஹிந்த அணியில் இருப்பவர்கள் அனைவருமே பேரினவாத பின்னணி கொண்டவர்கள் என்பதில் எவருக்கும் சந்தேகம் இருக்கமுடியாது.
 
‘கை’ சின்னத்தில் இறங்கியிருக்கும் பிரதான தேசியக் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சிலர், அக்கட்சியின் தலைவரான ஜனாதிபதியை சிறுபான்மை சார்பு நிலையிலிருந்து திசைதிருப்பி, சிறுபான்மை எதிர்ப்பு சிந்தனை கொண்ட மஹிந்த அணியின் பக்கம் பலவந்தமாக இழுத்துச் செல் வதற்கு அழுத்தங்களை பிரயோகித்துக் கொண்டிருக்கின்றனர்.
 
யானைச் சின்னத்திலான ஐக்கிய தேசியக் கட்சியே இருக்கின்ற தேசியக் கட்சிகளில் ஓரளவுக்காவது சிறுபான்மை நலன்சார்ந்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட  கட்சி என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.
 
புதிய தேர்தல் முறையிலுள்ள சாதகமான விதிமுறைகளின் அனுகூலங்களை பெற்றுக்கொள்வதற்காக, முன் அனுபவமுள்ள அனைத்து முஸ்லிம் கட்சிகளும் தேசியக் கட்சியொன்றுடன் கூட்டணி அமைத்தே தேர்தலில் போட்டியிடுகின்றன.
 
எனவேதான், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யானை அணியுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது. தென்கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியில் அமர்வதற்கு சார்பான வகையில் தேர்தல் வியூகம் வகுப்பட்டே, யானைச் சின்னத்தில் களமிறங்கியுள்ளோம்.
 
தனித்துக் கேட்டு பலத்தை நிரூபித்திருக்கலாமே? 
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கடந்த மாகாண சபை தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் என எல்லாவற்றிலும் தனது பலம் என்ன, வாக்காளர்கள் யார் பக்கம் என்பதை மிகத்தெளிவாகவே நிரூபித்திருக்கின்றது.
 
இந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட உள்ளூராட்சி சபைகள் அனைத்துக்குமான  ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர்களை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அடையாளம் காணப்பட்டிருப்பது, எமது கட்சியின் மக்கள் பலம் என்னவென்பதை தெரிந்திருப்பதினாலேயாகும்.
 
ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் அக்கட்சியைச் சேர்ந்த ஒருசில வேட்பாளர்களே உள்ளனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலமே அவர்கள் தெரிவு செய்யப்பட்டனர். நாம் தனித்துக் கேட்டிருந்தால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை அழிக்க கங்கணம்கட்டி களத்தில் இறங்கியிருக்கும் தீய கூட்டணி யானையில் இணைந்து எமக்கு எதிராக செயற்பட்டிருக்கும்.
 
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தென்கிழக்கில் உள்ளூராட்சி தேர்தல் கேட்பது இது முதற் தடவையல்ல. 2006இல் சம்மாந்துறையில்  சின்னத்தில் கேட்டு ஆட்சியை கைப்பற்றிய நாங்கள், 2011இல் தனித்துக் கேட்டு சொற்ப வித்தியாசத்தில் அந்த ஆட்சியை இழந்தோம்.
 
முஸ்லிம் காங்கிரஸ் தான் ஆளுமென்றால் ஏன் யானை?
 
கடைசியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் ஆகியவற்றில் சில இலட்சம் வாக்குகளே தேசியக் கட்சிகளின் வெற்றியைத் தீர்மானித்தன. இந்த தேர்தலில் ‘யானை’ , ‘கை’, ‘தாமரை மொட்டு’ என மும்முனைப் போட்டி நிலவினாலும் முடிவுகள் இம்முறையும் சொற்ப வாக்கு வித்தியாசங்களிலேயே அமையும்.
 
திகதி அறிவிக்கப்பட முன்னரும் தேர்தலின் பின்னரும் கையும், மொட்டும் சேர்ந்து பல சபைகளில் ஆட்சியமைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெளிப் படையாக நடைபெற்று வருகின்றன. அப்படி நிகழ்ந்தால், வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையாக மாறிவிடும்.
 
எனவே, யானை சின்னத்தினர் நாடாளாவிய ரீதியில் அதிக உள்ளூராட்சி சபைகளை குறிப்பிடத்தக்களவு உறுப்பினர் வித்தியாசத்தில் கைப்பற்றினால் மட்டுமே ‘கை’ கட்சியும், ‘தாமரை மொட்டு’ குழுவினரும் இணைவதை தடுக்க லாம். இனவாதிகளின் ஆட்சி அமைவதை தவிர்க்கலாம்.
 
அப்படியானால் நாடளாவிய ரீதியில் ஏன் யானைச் சின்னத்தில் போட்டியிடவில்லை?
 
சிறுபான்மை மக்கள் பிரதிநிதித்துவங்களை பாதிக்கும் என்கிற இந்த புதிய கலப்பு தேர்தல் முறையின் விசித்திர நுட்பங்களை பிரயோகித்து நமது உறுப்பினர்களை அதிகரிக்கும் வியூகமே அது.
 
முஸ்லிம் பெரும்பான்மை இல்லாத மாற்று இன மக்கள் செறிந்துவாழும் பிரதேசங்களில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை உறுதிசெய்துகொள்ள வேண் டிய கடப்பாடு எமக்குள்ளது. இவ்வாறு முழு உள்ளூராட்சி பிரதேசத்திலும் சிதறிவாழும் மக்களின் வாக்குகளை ஒன்றுதிரட்டி சில உறுப்பினர்களை பெற்றுக் கொள்கின்ற வியூகத்தை நமது மரச் சின்னத்திலும் மற்றும் வேறு முறைகளிலும் அமைத்துள்ளோம்.
 
நமது வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்குகளையும் சேர்த்து  தென்கிழக்கின் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்கிற அதேவேளையில் அதற்கு வெளியே அதிக உறுப்பினர்களை பெறுகின்ற, பலமிக்க கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் அமைவதற்கான அடித்தளத்தை இட்டிருக்கிறோம்.
 
தென்கிழக்கில் யானையில் கேட்பதினால் என்ன பயன்? 
 
• இரு கட்சிகளினதும் வாக்குகள் சேர்வதால் அதிக ஆசனங்கள் கிடைக்கும்
• அனேக சபைகளின் ஆட்சி மரத்தின் நிழலின் கீழே அமையும்
• மத்திய ஆட்சியின் சுக்கானை தனது கையில் வைத்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் சபைகள் என்பதால் அபிவிருத்திக்கான அதிக நிதியொதுக்கீடுகளை இலகுவாகப் பெறலாம்.
• ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களில் கணிசமானோர் பெரும்பான்மை இனத்தவர்களே. இதனால் முஸ்லிம் மக்களின் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
 
வெல்வது யானை
என்றாலும்
ஆள்வது மரமே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM