Web
Analytics
முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளின் பிடிவாதத்தினால் கல்முனை பாதுகாக்கப்பட்டது. - Sri Lanka Muslim Congress
(அகமட் எஸ். முகைடீன்)
கல்முனை நலனுக்கு ஏற்படவிருந்த பாதிப்பு என்பது கல்முனை உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தி அதனை முழுமையான தனியொரு பிரதேச செயலகமாக செயற்படுத்துவதற்கு

கடந்த இரண்டு வாரங்களாக மீண்டும் முயற்சிகள் நடைபெற்றுவந்தமையாகும். அதனை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கை சம்பந்தமாக பிரதி அமைச்சர் ஹரீஸ் தனது முக நூலில் நேற்று (23) மறைமுகமாக தெளிவுபடுத்தி இருந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் பிரதி அமைச்சருமான ஹரீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஆகியோர் மேற்கொண்ட பகீரத முயற்சியினால் குறித்த பிரதேச செயலக தரமுயர்வு தடுக்கப்பட்டதன் காரணமாக துறைக்கு பொறுப்பான அமைச்சரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது அதிர்ப்தியை தெரிவித்தனை அடுத்து இருதரப்பினரையும் அழைத்து சமரசம் பேசும்வகையில் உள்நாட்டலுவல்கள் அமைச்சரின் தலைமையில் குறித்த விடயம் தொடர்பான சந்திப்பு இன்று (24) வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
 
இச்சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜ தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் அரச தொழில் முயற்சி மற்றும் கண்டி நகர அபிவிருத்தி பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் பிரதி அமைச்சர்களான பைசால் காசிம், அலிசாஹில் மௌலான மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், எம்.எஸ். தௌபீக், மற்றும் கல்முனைத் தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அமைப்பாளர் சட்டத்தரணி அப்துல் றசாக் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது உள்நாட்டலுவல்கள் அமைச்சர் இவ்விடயம் சம்பந்தமாக இரு தரப்பினரதும் விளக்கத்தை கோரியிருந்தார். அந்தவகையில் உடன் அமுலுக்கு வரும்வகையில் கல்முனை வட பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தருமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் ஒட்டுமொத்தமாக அழுத்தமாக பேசினார்கள். அதேநேரம் பிரதி அமைச்சர் ஹரீஸ் தமது பக்க நிதர்சனமான நியாயங்களை எடுத்துரைத்தார். ஆயுத தாரிகளின் அச்சுறுத்தலான சூழ்நிலையுடைய 89 காலப்பகுதியில் பயமுறுத்தலுக்கு மத்தியில் ஒரு அசாதாரன சூழலில் கல்முனைத் தொகுதியில் வாழ்ந்த மக்களிடம் எந்த ஒரு அபிப்பிராயமும் கோரப்படாமல் வலுகட்டாயமான முறையில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் உருவாக்கப்பட்ட வரலாற்றினையும்,  குறிப்பாக கல்முனை பிரதேச காணிகள், குடியிருப்பு தொகுதிகள், வியாபார நிலையங்கள் அமைந்துள்ள பிரதேசங்கள், கேந்திர முக்கியத்துவம் பெற்ற அரச அலுவலகங்கள் அடாத்தாக அத்து மீறிய வகையில் வட உப பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கிராம சேவகர் பிரிவில் உள்ளடக்கப்பட்டு முஸ்லிம் சமூகத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் அநீதியினையும் சுட்டிக்காட்டி பிரதி அமைச்சர் ஹரீஸ் காரசாரமாக கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும் இது கல்முனை மக்களுடைய தனிப்பட்ட ஒரு பிரச்சினை அல்ல இலங்கையில் வாழ்கின்ற முஸ்லிம்களுடைய குறிப்பாக அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பாரியதொரு பிரச்சினையாக காணப்படுகிறது. அதே நேரம் அரச கொள்கைகளுக்கு மாறாக இவ்விடயத்தில் தீர்மானங்களை எடுக்க முடியாது எனத் தெரிவித்த பிரதி அமைச்சர் ஹரீஸ், இந்த நாட்டில் இன ரீதியாகவோ அல்லது நிலத் தொடர்பற்ற ரீதியிலோ பிரதேச செயலகங்கள் உருவாக்கப்படக் கூடாது என்று  2011.11.08 அரசு தீர்மானம் எடுத்த விடயத்தினை இதன்போது சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து குறித்த சுற்று நிரூபத்தை பார்வையிட்ட அமைச்சர் ஒரு புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவை நியமிக்க இருப்பதாகவும், தமிழ் தரப்பினரின் நியாயங்களை அவ்வாணைக்குழுவிடம் சொல்லுமாறும் தமிழ் பிரதிநிதிகளை வலியுறுத்தினார்.  அதனைத் தொடர்ந்து தமது மக்கள் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவித்த தமிழ் பிரதிநிதிகள், 30 வருடங்களுக்கு மேலாக இருக்கின்ற கல்முனை உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவதை உடனே செய்ய வேண்டுமென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து கலந்துகொண்ட முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநிதிகள் அனைவரும் அவ்வாறு செய்ய முடியாது என்றும் இது பாரிய இனக் குழப்பத்தை ஏற்படுத்துமென்றும் ஒருமித்த குரலில் கூறினர். இவ்வாறு இருதரப்பினருக்குமிடையில் காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றபோது அமைசர் இரு தரப்பினரையும் அமைதிப்படுத்தினார்.
இதன்போது பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களும் குறுக்கிட்டு இது முஸ்லிம் மக்களின் பாரியதொரு பிரச்சினை, இதில் அமைச்சர் மிகக் கவனமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் இந்த இடத்தில் எங்களுடைய தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கூட்டமைப்புடைய தலைவர் சம்பந்தன் ஆகியோர் இல்லை எனவே இங்கு நடைபெற்ற விடயங்கள் சம்பந்தமாக எங்கள் தலைமைகளுக்கு சொல்ல வேண்டி இருக்கிறது என்று கூறியதை அடுத்து, இவ்விடயம் தொடர்பாக தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் சம்பந்தன் ஆகியோர்களையும் அழைத்து மீண்டும் பேசுவோம் எனத் தெரிவித்த அமைச்சர், இப்போது தரமுயர்த்துவதற்கு என்னால் ஒரு முடிவுக்கு வர முடியாது என்றும் குறிப்பிட்டார். 
இன ரீதியான நிலத் தொடர்பற்ற பிரதேச செயலக உருவாக்கத்தினால் கல்முனையில் பாரியதொரு இனக் குழப்பத்தை தோற்றுவிக்கும், எனவே இதற்கான பொறுப்பை அமைச்சர் சுமக்க வேண்டிவரும் என பிரதி அமைச்சர் ஹரீஸ் எடுத்துக் கூறினார். அண்மையில் அரச அங்கீகாரம்பெற்ற இக்டாட் நிறுவனத்தின் கிழக்கு மாகாண காரியாலத்தை கல்முனையில் கட்ட முனைந்தபோது இது எங்களுடைய நிலம் எனக் கூறி கல்முனை மாநகர சபை தமிழ் உறுப்பினர்கள் தடுத்தார்கள். எனவே இது உண்மையில் கல்முனையின் அபிவிருத்திக்கும் இன ஐக்கியத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்த வழியமைக்கும் என்று குறிப்பிட்ட பிரதி அமைச்சர் ஹரீஸ் கல்முனையில் தமிழ் மக்களுக்கு எந்த அநியாயமும் மேற்கொள்ளப்படவில்லை, அவர்களுடைய அலுவல்கள் மற்றும் தேவைகள் சீராக சென்று கொண்டிருக்கின்றது எனவும் தெரிவித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளின் அக்கோரிக்கையினை நிராகரிக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
அமைச்சருக்கு இவ்விடயத்தில் உள்ள பாரதூரம் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளால் இன்று உணர்த்தப்பட்டுள்ளது. அம்பாறை மக்களுடைய முகவெற்றிலையாக இருக்கின்ற கல்முனையின் இவ்விடயத்தில் நாங்களோ, அம்பாறை மாவட்ட மக்களோ எந்த விட்டுக்கொடுப்புக்கும் போவதற்கில்லை எனவே இது பாரிய ஒரு பிரச்சினையாக உருமாறும் என்றும் பிரதி அமைச்சர் ஹரீஸ் இதன்போது சுட்டிக்காட்டியமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM