இந்த  நாட்களில் மிகவும் பரபரப்பான  செய்திகளில் ஒன்றாக  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் விவகாரம் ஊடகங்களின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

தேசியத்தில் அரசியல் சார் விமர்சகர்களாலும், கட்சி ஆதரவாளர்களின்  அவதானத்திற்குட்பட்ட   செய்தியாகவும்  இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது. ஆனால் பத்திரிகைகள் ஊதிப்பெரிதாக்கும் வகையில் அதில் எந்தவிதமான சுவாரசியமும் கிடையாது. அத்தோடு இந்த தேசியப்பட்டியல் விவகாரத்தில் கட்சியின் உண்மையான போராளிகளை விடவும் கூலிக்கு மாரடிக்கும் சிலரே  தூக்கிப் பிடித்துக்கொண்டு சிந்தனைச் சிக்கலில் மாட்டியுள்ளனர். தலைவர் அப்படி முடிவெடுப்பார் ,தலைவர் இப்படி முடிவெடுப்பார், தேசியப்பட்டியல் அங்கு கொடுக்கப்பட  வேண்டும் இங்கு கொடுக்கப்பட  வேண்டும் என்று தான்தோன்றித்தனமான தமது சுயமான  முடிவுகளை சொல்லியும் எழுதியும் ஒரு மயக்கநிலையை  உருவாக்கிக் கொண்டு இருக்கின்றனர். இவர்களுக்கு எல்லாம் எந்த பதிலும் சொல்லாமலும், அலட்டிக்கொள்ளாமலும்  தனது அன்றாடப்பணிகளை மிகவும் நேர்த்தியாகவும்,திட்டமிட்டபடியும் சிறப்பாக செய்து கொண்டு போகிறார் அமைச்சரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீம் . அவரது இந்த விமர்சனங்களை கண்டு கொள்ளாத போக்கானது, தம்மை அரசியல் விமர்சகர்கள் என்று எண்ணிக்கொண்டு பக்கம் பக்கமாய் கதை விடுகின்றவர்களை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியானது நீண்ட வரலாற்றையும், பூர்வீகத்தையும் கொண்ட கட்சியாகும் . இலங்கையின் அரசியல் வரலாற்றில்  அதற்கென்று தனியான இடமுண்டு. சிறுபான்மை கட்சிகளுக்கான  பிரதிநிதித்துவத்தை உறுதிப் படுத்துகின்ற 5% வெட்டுப்புள்ளி மறைந்த பெருந்தலைவர் அஷ்ரப்  அவர்கள்  அன்றைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெற்றுக்கொண்ட வரப்பிரசாதமாகும் . இவ்வாறு அந்தக் கட்சியின் மூலம் தேசிய ரீதியில் நியாயமான உரிமைகளை எமது சமூகம்  பெற்றுக்கொண்டுள்ளது. அவ்வப்போது கட்சியில் ஏற்படுகின்ற தொய்வு நிலையானது கட்சியின் விசுவாசிகள் என்று தலைமைத்துவத்தால் நம்பப்பட்ட சிலர் தமது சுயலாபத்திற்காக கட்சியை உடைத்துக் கொண்டு வெளியாகியமையாகும். அத்துடன்  இந்த வெளியேறுகின்ற நிகழ்வுகளின் மூலம் அவ்வாறு  வெளியேறியவர்கள் கட்சியை பலவீனப்படுத்தும் எல்லா வகையான வேலைத்திட்டங்களையும்  செய்து வந்தமையுமாகும்  ஆனால் முஸ்லீம் சமூகத்தின் உரிமைப்போராட்டத்தின் முதுகெலும்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எல்லாக் காலங்களிலும் மிகவும் நேர்த்தியாகவும் புத்திசாதுரியத்துடனும் தனது காய்நகர்த்தலை மேற்கொண்டது.

யார் என்ன சொன்னாலும் முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளை அரசாங்கத்துடன் பேசித்தீர்ப்பதில் வன்முறையற்ற நளினமான நடைமுறையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தொடர்ச்சியாக  கையாண்டுள்ளது . எனவே தற்போதைய தேசியப்பட்டியல் விடயத்திலும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஒரு வியூகத்தை வகுத்து செயலாற்றுகிறார் என்றே எண்ணத்தோன்றுகிறது. அதனை  வெறும் ஆரூடம் கூறும் விமர்சகர்களின் மனபிரமைக்கு அப்பாற்பட்ட  ஒன்றாகவே கணிக்க முடிகிறது.
 
தேசியப்பட்டியல் விவகாரத்தில் அநேகர்  சுயநலமாகவே செயல்படுகிறார்கள், இதன்மூலம்  தலைவரை தர்மசங்கடமான ஒரு நிலைக்கு தள்ளிவிட நினைக்கின்ற இந்தப்போக்கானது வெற்றி பெறப்போவதில்லை. கட்சிக்குள் ஒரு  சிலர் எனக்குத்தான் தேசியப்பட்டியல் வேண்டும் நான் தான் அதற்க்கு தகுதியானவன் என்று தலைமைத்துவத்தை மிரட்டி பணிய வைக்கும் கோதாவில் இறங்கியுள்ளனர்.  இன்னும் சில முக்கியஸ்தர்கள் கடந்த காலங்களில் இரண்டு , மூன்று தடவைகள் தேசியப்பட்டியலை பெற்று, வரப்பிரசாதங்களை அனுபவித்து விட்டு மீண்டும் தனக்கே தேசியப்பட்டியல் தர வேண்டும் என சின்னக்குழந்தைகள் இனிப்பு முட்டாய்க்காக அடம் பிடிப்பது போல விடாப்பிடியாக இருக்கிறார்கள்.
தலைமைத்துவத்தை பலவீனப்படுத்தி தாம் விரும்புகின்றவற்றை குறுக்குவழியிலேனும் பெற்றுவிடத்துடிக்கின்ற அ மனப்பான்மை இவர்களிடம் மலிந்து போயுள்ளதை வெளிப்படையான இவர்களின் செயற்பாடுகளை அவதானிக்கும் போது ஊகிக்க முடிகிறது .இதன் ஒரு கட்டமாகவே ” தாருஸ்ஸலாம்” பற்றிய அந்த அநாமதய  புத்தகமாகும் . அந்த புத்தகம் நூற்றுக்கு நூறு விகிதம் உண்மையை மையமாக கொண்டு ஆதாரங்களுடன் எழுதப்பட்டிருந்தால் அதனை எழுதியவர்கள் தம்மை மறைத்துக்கொள்ள தேவையில்லை. தகப்பன் அற்ற  பிள்ளைபோல அது அங்கும் இங்கும் சீரழிய தேவையும் இல்லை . அத்தோடு சமூக நலன்கருதி அந்த தகவல்கள்  வெளியிடப்பட்டிருக்குமானால் அதனை வெளியிட்ட நபருக்கு அல்லது குழுவுக்கு சகல ஆதாரங்களையும் முன்வைத்து வழக்கு தொடுத்திருக்க முடியும். எனவே இந்த புத்தக விடயம் பிசுபிசுத்துப்போனது.
யாரும் அதனை கண்டுகொள்ளவும் இல்லை. மாறாக அதனை வெளியிட்ட தரப்பினரே தமக்கு ஒரு புத்தகம் வந்துள்ளதாகவும், முஸ்லிம்களின் சொத்து சூறையாடப்படுவதாகவும் நீலிக்கண்ணீர் வடித்தனர்.இதன் பின்னணி செயற்பாட்டாளர்கள் யார் என்று தலைவர் தெரிந்தும்  அதனை கணக்கில் எடுக்கவில்லை.
 
கடந்த காலங்களில் உள்நோக்கங்களை வைத்துக்கொண்டு  தலைவருடன்  நெருக்கமாக இருப்பதாக நடித்த சிலர்  தமக்கு தேசியப்பட்டியல் கிடைக்கவில்லை என்ற காரணத்தினால், தலைவரை பழிவாங்க பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். ஒருவரை  பலவீனப்படுத்த அல்லது தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மிகக்கேவலமான நடைமுறைதான் அவனது மானத்துடன் விளையாடுவது. தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்பதற்காக இவ்வாறு செயற்படுவதானது அருவருக்கத்தக்க செயலாகும். இந்த வழிமுறைகள் தொடர்ந்தும் தோல்வியடைந்து வருகின்றமையினால் தேசியப்பட்டியலுக்காக ஆலாய்ப்பறப்பவர்கள் வேறும்  மாற்றுவழியை கையாளுவதற்கு எத்தனிப்பார்கள்.அவையும்  வலுவிழந்து போகும்
 
எனவே தேசியப்பட்டியலை முன்னிறுத்திய தப்பி பிழைக்கின்ற கணக்குகள் தினமும் எழுவதும் விழுவதும் வாடிக்கையாகிவிட்டது.
கடந்த தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்  ஐந்து ஆசனங்களைப் பெற்றது இதற்காக இரண்டு தேசியப்பட்டியல் அக்கட்சிக்கு கிடைத்தன  அந்த இரண்டு தேசியப்பட்டியல்களையும் தலைவர் தனது நம்பிக்கைக்குரிய அவரது சகோதரர் டாக்டர் ஹபீஸ், மற்றும் கட்சியின்  மிகநீண்ட கால நம்பிக்கைக்குரியவரான சட்டத்தரணி சல்மான் ஆகியோருக்கு தற்காலிகமாக  வழங்கினார். ஒரு கட்சியின் தலைமைக்கு அந்த கட்சியை பாதுகாப்பதற்கான தார்மீகக் கடமையும் தனது கட்சி பெற்றுக்கொண்ட ஆசனங்களை இழந்து விடாமல் பேணிப்பாதுகாக்கின்ற  பொறுப்பும் இருக்கின்றது.
 
கடந்த பொதுத்தேர்தலில் தேர்தலின் பின்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற ஆசனங்கள் விலைபேசப்பட்டன.
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்கு கட் சி முன்வந்தபோது  அதனை விரும்பாத ஒருவர்
 மஹிந்தவுக்கு “காதல் கடிதம்” எழுதி அவரின்  வெற்றிக்காக  வாழ்த்துத்தெரிவித்தார்.  எனவே தலைவர் ஹக்கீமின் தேசிய பட்டியல் தொடர்பான ஆரம்ப கட்ட முடிவுகள் யார் எப்படி விமர்சித்தாலும், தனது ஆசனங்களை பறிகொடுக்காமல் காத்துக்கொள்ளுகின்ற வியூகமாகவே கொள்ளமுடியும். அந்த தேசியப்பட்டில் தொடர்பில் கவலைப்பட வேண்டியவர்கள் கட்சியின் உண்மைக்கு உண்மையான போராளிகளே தவிர இந்தக்கட்சியை  எப்படியேனும் சீரழித்து சின்னாபின்னமாக்கி சிதைக்க முனைகின்ற எதிரிகளல்லர்.
 
தேசிய பட்டியல் தொடர்பில் எல்லாவிதமான யூகங்களுக்கும் தலைவர் முற்றுப்புள்ளிவைப்பார் என்றே கருதப்படுகிறது அது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் எதிபார்த்துக்கொண்டிருக்கும் சகலரையும்
திருப்திப்படுத்துமா? என்பது கேள்விக்குறியாகவே இருக்கும் . ஆனால், முஸ்லிம் சமூகத்தின் பெரும்பான்மை ஆதரவை பெற்ற முஸ்லிம் கட்சி என்ற வகையில் முஸ்லிம்களின் எதிர்கால அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் தேவையான பிரதேசங்களுக்கு சுழற்சி முறையில்  அமையும் என நம்பலாம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீவிர எதிர்ப்பாளர்களுக்கு தொடர் தோல்விகளாகவே இது அமையும் அத்தோடு அந்த எதிரிகளோடு கைகோர்த்து தலைவரை வீழ்த்த நினைக்கின்ற தேசியப்பட்டியல் ஆர்வலர்களுக்கு பேரிடியாகவே அமையும்.
 
 
இரண்டில் ஒரு தேசியப்பட்டியல் டாக்டர் ஹபீஸிடமிருந்து மீளப்பெறப்பட்டு  திருகோணமலை  மாவட்டத்திற்கு குறிப்பிட்ட ஒருகாலத்திற்கு நிபந்தனையின் பேரில் வழங்கப்பட்டுள்ளது.
 அங்கு எம்.எஸ்.தௌபீக் துரிதமான அபிவிருத்தி நடவடிக்கைகள் மூலமாக தேசிய ரீதியில் அவதானத்தை பெற்றுள்ளதோடு, தலைவரின் நன்மதிப்பையும் திருகோணமலை மாவட்ட மக்களின் நம்பிக்கையையும் பெற்றுவருகிறார். ஆற அமர்ந்து நின்று நிதானித்து செயலாற்றிய தலைவரின் செயற்பாடு அங்கு பெரும் வெற்றி பெற்றுள்ளது. அவ்வாறே மீதமிருக்கின்ற தேசியப்பட்டியல் தொடர்பிலான தலைவரின் முடிவும் அமையும்  என்பதனை திருகோணமலைக்கு வழங்கப்பட்டுள்ள தேசியப்பட்டியலானது கட்டியம் கூறியுள்ளது. எப்படியோ தேசியத்திலும் சர்வதேசத்திலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைவன் விமர்சிக்கப்படுவது யதார்த்தமாகும் இந்த விமர்சங்களை கடந்து தலைவர் நிதானமாக எடுத்துவைக்கின்ற ஒவ்வொரு எட்டும் முஸ்லிம் சமூகத்தினால் எதிர்காலத்தில் நினைவுகூரப்படும் என்பது வெள்ளிடைமலை.
 
தேசியப்பட்டியல் ஆசனங்களை பகிர்ந்தளிக்கும் போது வடகிழக்கையும், அதிலும் குறிப்பாக கிழக்கில் உள்ள அம்பாறை, மட்டக்களப்பு   மாவட்டங்களை மட்டுமல்லாது, வடகிழக்குக்கு வெளியே கட்சியின் ஆதரவுத்தளங்களான குருநாகல்,புத்தளம்,அனுராதபுரம்,கொழும்பு போன்ற மாவட்டங்களையும் தலைமைத்துவம் கவனத்தில் எடுக்கும் என்ற நம்பிக்கை ஆதரவாளர்கள் மத்தியில் இருக்கிறது. இதனை நன்கு சீர்தூக்கிப்பார்த்து தலைவர் ஹக்கீம் உரிய தீர்மானத்தை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்வார் என எதிர்பார்க்கலாம்.
 
-நாச்சியாதீவு பர்வீன்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

The Latest

More