Web
Analytics
மு.கா வெற்றி பெற செய்வதன் மூலம் தனித்துவத்தை நிரூபிக்க முடியும்- திவுறும்பொலயில் அமைச்சர் ரவூப் ஹக்கீம். - Sri Lanka Muslim Congress

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிநிதிகளை வெற்றிபெறச்செய்வதன் மூலம் நமது தனித்துவத்தை நிரூபிக்க முடியும். அது இந்த பிரதேசத்தின் நிரந்தரமான அபிவிருத்திக்காக நீங்கள் வழங்கும்  அங்கீகாரமாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும்,நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

குருநாகல், திவுறும்பொலயில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
தொடர்ந்தும் அங்கு உரைநிகழ்த்திய அவர்
 
 ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேர்தல் நடவடிக்கைகள்  இந்த பிரதேச  எமது சகோர கட்சிகளுக்கு சங்கடமான விடயமாகும் என்பது ஆச்சிரியத்திற்குரிய விடயமல்ல. ஐக்கிய தேசியக்கட்சி எமது சிநேககட்சி என்கின்ற வகையில் நாங்கள் ஒருசில இடங்களில் சேர்ந்து போட்டியிடுகிறோம். சகோதரர் இல்ஹாம் சத்தார் அவர்கள் குளியாப்பிட்டிய பிரதேச சபையில் எமது கட்சி சார்பாக ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் போட்டியிடுகிறார்.அவ்வாறே குளியாப்பிட்டிய நகர சபையிலும் சேர்ந்து போட்டியிடுகிறோம்.
 
 அதை தவிர குளியாப்பிட்டிய பிரதேசத்தை தவிர்த்து இன்னும் ஆறு உள்ளூராட்சி மன்றங்களில் நாங்கள் எமது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் மறச்சின்னத்தின் கீழ் போட்டியிடுகிறோம். இது ஐக்கிய தேசிய கட்சியினருக்கு கசப்பாகத்தான் இருக்கும் இதனை கொஞ்சம் அவர்கள் ஜீரணித்துக்கொள்ள வேண்டும்.ஏனென்றால் இந்த தேர்தல் முறையில் இருக்கின்ற அனுகூலங்களில் ஒரு கட்சி தன்னை முழுமையாக தாரை வார்க்க முடியாது.
 
சேர்ந்து கேட்பதனால் அவர்கள் வழங்கும் எமக்கான பாத்தியத்தை வைத்து எதிர்காலத்தில் குருநாகல் மாவட்டத்தில் எமது கட்சியை கொண்டு செல்ல முடியாது. இந்த மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரசுக்கென்று நிலையான வாக்குவங்கியுள்ளது. அதனை வைத்து எதிர்கால அரசியலுக்கான பலமான அடித்தளத்தை நாங்கள் இடவேண்டியுள்ளது.
 
கடந்த பாராளுமன்ற தேர்தலில் இந்த மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியினால் நடந்த அநியாயம் இங்குள்ள அனைவரும் அறிந்ததே  எங்களுடைய வேட்பாளர் சட்டத்தரணி ரிஸ்வி ஜவகர்ஷாவின் பெயர் திட்டமிட்டு அகற்றப்பட்டு அந்த இடத்திற்கு திடீரென ஒருவர் பெரசூட்டில் கொண்டுவந்து நிறுத்தப்பட்ட அநியாயம் நடந்த பின்னணியில் அதையும் நாங்கள் பொறுத்துக்கொண்டு இந்த அரசாங்கத்தின் பங்காளிகளாக நாங்கள் இருக்கின்றோம். அத்தோடு இப்போது அரசுக்குள் எழுந்திருக்கின்ற உள்ளக முரண்பாடு போன்றவற்றுக்கும் மத்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியோடு நிற்பதானது அந்தக்கட்சிக்கு அவசியமான ஓன்று.
 
 எங்களது பாராளுமன்ற உறுப்பினர்களை அகற்றிவிட்டால் ஐக்கிய தேசிய கட்சியானது பலமிழந்து போகின்ற வாய்ப்புகளே அதிகம் இருக்கின்றது. எனவே ஐக்கிய தேசியக்கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொடுக்கின்ற கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு முழு அதிகாரமும் அதேநேரத்தில் முழு உரிமையும் இருக்கிறது எங்களுடைய கட்சியை நாங்கள் பாதுகாத்துக்கொள்வது.
 
 இதனை அடிமட்டத்தில் அழித்துவிட்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து பயணிக்க முடியாது.அந்த கட்சிக்கு தேவையான சந்தர்ப்பங்களில் உதவுகின்ற விடயத்தை நாங்கள் செய்துவருகிறோம்.
 
இம்முறை அதனை அம்பாறை மாவட்டத்தில் செய்துள்ளோம். அம்பாறையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து கேட்டு வெல்கின்ற பிரதேசங்களெல்லாம் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேர்தலில் களமிறங்கியுள்ளோம். எங்களுக்கும் அவர்களுக்கும் சமரசமாக ஒத்துப்போகக்கூடிய இடங்களில் இணைந்தும் முரண்பாடான இடங்களில் எங்களைது தனித்துவம் மாறாமல் தனித்தும் கேட்கிறோம்.
 
இது எமது கட்சிக்கான ஆசனங்களை அதிகம் பெற்றுக்கொள்கின்ற தேர்தல் வியூகமாகும். ஆனால் அம்பாறையில் நாம் யானை சின்னத்தில் களமிறங்கியிருப்பது எம்மை விமர்சிப்பவர்களுக்கு இப்போது பேசு பொருளாக மாறியுள்ளது. நாம் ஐக்கிய தேசிய கட்சிக்கு சோரம் போய்விட்டதாக விமர்சனம் செய்கிறார்கள்.
 
 
இந்த விமர்சனகளை எல்லாம் நாங்கள் அலட்சியப்படுத்திக்கொண்டு இப்படியான தீர்மானத்தை நாங்கள் எடுத்துள்ளோம் என்பதனை ஐக்கிய தேசிய கட்சி சார்பான சகோதரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.அதற்காக எங்களுக்கு இருக்கின்ற பேரம் பேசுகின்ற சக்தியை துஸ்பிரயோகம் செய்யப்போவதில்லை அது ஐக்கிய தேசிய கட்சி தலைமைக்கும் தெரியும்.
 
பெரும்பான்மை சமூகம் வாழ்கின்ற பிரதேசங்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து தேர்தலில் போட்டியிடுவதை சிலர் இனவாதமாக பார்க்கின்றார்கள். இந்த நல்லாட்சியின் பங்காளிகலாக நாம் செயற்பட்ட போது அது இனவாதமாக பார்க்கப்படவில்லை, பாராளுமன்றத்தில் ஆட்சியமைப்பதற்கும்,பெரும்பான்மையை நிரூபிப்பதற்கும் எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் உதவி தேவைப்படும் போது இனவாதம் பார்க்கப்படவில்லை  ஆனால் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் தனித்து கேட்பது இனவாதமாக கட்டமைக்கப்பட்டு கூறப்படுகின்றது. இது தனிப்பட்ட அரசியல் இலாபம் கருதிய பிரச்சாரமே தவிர வேறில்லை.
 
எங்களுடைய ஆசனங்களை பெற்றுக்கொள்வதற்கும்,காப்பாற்றுவதற்குமான மாற்றுவழியையே நாம் இங்கு பிரயோகிக்கின்றோம் என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். இது அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியல் என்பதை இங்குள்ளவர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM