அன்றைய முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் ஏந்துவதிலிருந்து பாதுகாப்பதற்காகவும், முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்காகவும் பெருந்தலைவர் அஷ்ரஃபினால் உருவாக்கப்பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தின் கீழ் அனைத்து இன்றைய இளைஞர்களும் அணிதிரள்வதன் மூலமே நமது சமூகத்தின் உரிமைகளையும், அபிலாஷைகளையும் வென்றெடுக்க முடியும். என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சம்மாந்துறைத் தொகுதி அமைப்பாளருமான எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.
சம்மாந்துறையில் இயங்கி வரும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பின் ஒன்றுகூடல் நிகழ்வு நேற்று(29) பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் சம்மாந்துறை அலுவலகத்தில் இளைஞர் அமைப்பின் தலைவர் எம்.எஸ். றிஸ்வி தலைமையில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே –

வடக்கு, கிழக்கில் அப்போது தமிழ் அரசியல் தலைமைகள் ஓரங்கட்டப்பட்டு ஆயுதங்களைச் சுமர்ந்தவர்கள் அச்சமூகத்தின் தலைவிதியை மாற்றுவதற்காகச் செயற்பட்ட வேளை அவர்களின் அந்த மாற்றத்திற்கான கவர்ச்சியில் அள்ளுண்ட முஸ்லிம் இளைஞர்கள் அவர்களுடன் இணைய முற்பட்ட போது முஸ்லிம் இளைஞர்களுக்கு வழிகாட்டுவதற்கு ஒரு தனித்துவ அரசியல் கட்சியோ அல்லது தனித்துவ தலைமைத்துவமோ இருக்கவில்லை. இதனை உணர்ந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் முஸ்லிம்களுக்கு தனித்துவமாக அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால சிப்பிகளாக இளைஞர்கள் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்ற தூரநோக்கு சிந்தித்து அதற்காக முஸ்லிம் காங்கிரஸ் எனும் இயக்கத்தை உருவாக்கி முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதக் கலாசாரத்திற்குள் காலடி வைப்பதனை தடுத்தார். இதன் காரணமாக அன்றைய இளைஞர்கள் வழி தவறுவதிலிருந்து காப்பாற்றப்படனர்.
முஸ்லிம் காங்கிரஸை வளர்த்தெடுப்பதில் அன்றைய இளைஞர்கள் பெருந்தலைவர் அஷ்ரபோடு இணைந்து கட்சியின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பினை செய்தனர்கள். தலைவர் அஷ்ரப் அவர்களால் சிறப்பாக வழி நடாத்தப்பட்ட இளைஞர்களுள் நானும் ஒருவன். சம்மாந்துறையில் 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போது தமிழ் ஆயுதக்குழுக்களின் உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் நானும் என்னோடு சேர்ந்து எட்டு இளைஞர்களும் முஸ்லிம் காங்கிரஸை இந்த சம்மாந்துறை மண்ணிலே ஆரம்பித்தோம். முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பினை செய்த மண் சம்மாந்துறையாகும். பெருந்தலைவர் அஷ்ரபினை பெற்றெடுத்த மண் சம்மாந்துறையாகும்.
முஸ்லிம்களையும், முஸ்லிம் இளைஞர்களையும் கூறு போடுவதற்கும், முஸ்லிம் காங்கிரஸை துண்டு துண்டாக உடைப்பதற்கும் சதிகள் அன்றும் இடம்பெற்றன. இன்று இக்கட்சியின் ஊடாக அரசியல் முகவரியைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்த இயக்கத்தை பலவீனப்படுத்துவதற்கு பல்வேறு சதிமுயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
நாளைய தலைவர்களான உங்கள் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருக்கும் அமானிதமான இந்த சமூகத்தை எத்தகைய சோதனைகள் வரினும் அவற்றை எதிர் கொண்டு, துணிந்து நின்று, சாதிக்கத் தெரிந்த இளைஞர்களாக வளர்த்தெடுப்பதும் களம் கொடுப்பதும் இந்தக் கட்சிக்கான ஒரு இதய சுத்தியுடன் கூடிய விசுவாசமுள்ள ஓர் இளைஞர் படையை உருவாக்குவதுமே எனது இலக்காகும். இதற்காக இந்தக் கட்சியின் கீழ் அணி திரளுமாறு அறைகூவல் விடுக்கின்றேன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை இந்த நிலைக்கு உயர்த்தியவர்கள் இளைஞர்கள் தான் முஸ்லிம்களின் அபிலாஷைகளை அடைவதில் முன்னிலையில் திகழும் இந்த இயக்கத்துக்கு இளைஞர்களின் சக்தி இன்றியமையாதது. முஸ்லிம்கள் எதிர்காலத்தில் எதிர்நோக்கவுள்ள சவால்களை வெற்றிகொள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் அவசியமாகும் வெறும் பசப்பு வார்த்தைகளுக்கு இடம்கொடுக்காது இந்த இயக்கத்தை பாதுகாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும்.
நமது சமூகத்தின் விடிவுக்காக உருவாக்கப்பட்ட இந்த இயக்கமே நமக்கான பெரும் சக்தியாகும். இந்த இயக்கத்தின் கீழ் அணி திரள்வதன் மூலமே நமது ஒற்றுமையின் வெளிப்பாட்டைக் காண முடியும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நமக்கு முதலும் இறுதியுமான தெரிவு நமது தற்போதைய தலைமைத்துவமான ரவூப் ஹக்கீம் அவர்களும் அவரது வழி காட்டலின் கீழ் அமைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுமே. எனவே இந்த இயக்கத்தின் கீழ் சகல இளைஞர்களும் ஒன்றிணைந்து வெற்றிச் சரித்திரம் படைக்க அணிதிரள்வோம்.
முஸ்லிம் சமூகத்தின் உரிமைப் போராட்டத்தில் முதுகெலும்பாக முஸ்லிம் காங்கிரஸ் எல்லாக் காலங்களிலும் மிகவும் நேர்த்தியாகவும், புத்திசாரியத்துடன் தனது காய்நகர்த்தலை மேற்கொண்டு வருகின்ற இத்தருணத்தில் இந்த இயக்கத்தினை பலவீனப்படுத்துவதன் மூலம் முஸ்லிம் சமூகத்தையும் பலவீனப்படுத்தலாம் என்ற சதித்திட்டங்கள் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற இக்காலகட்டத்தில் பெருந்தலைவர் அஷ்ரஃப் உருவாக்கிய இப்பேரியக்கத்தை பலப்படுத்த அனைத்து இளைஞர்களும் ஒன்றிணைய வேண்டும்.
முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் முகவரியையும், அடையாளத்தைப் பெற்றுக்கொண்டவர்கள்தான் இந்தக்கட்சிக்கெதிரான முகாம்களில் இருந்து கொண்டு பலவீனப்படுத்துகின்ற துரோகத்தனமான அரசியலையும், மீண்டும் மாமூல் அரசியல் செய்கின்றவர்களுக்கு எதிராகத்தான் மிக நேர்மையாக முஸ்லிம் காங்கிரஸ் அரசியல் செய்ய வேண்டியுள்ளது.
எனவே, இந்தக் கட்சியைக் கட்டிக்காக்கின்ற பொறுப்பினை இளைஞர் சமூதாயம் பாரமெடுக்க வேண்டும். சகலரும் இக்கட்சியைப் பலப்படுத்த தயாராக வேண்டும். வெறுமனனே ஏமாறுகின்ற சமூதாயமாக இருக்க முடியாது. மிகநேர்மையாக நிதானமாக இயங்குக் கொண்டிருக்கின்ற இக்கட்சித் தலைமையை வலுப்படுத்துகின்ற கிராம மட்டத்திலான கட்சி மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தில் எல்லோரும் இணைந்து கொள்ள வேண்டும். அதற்காக நான் உங்களோடு எந்நேரமும் பயணிக்க தயாராகவுள்ளேன்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோகச் செயலாளர் சட்டத்தரணி ஏ.எல். ஜெளபீர், சம்மாந்துறை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் அமைப்பின் அமைப்பாளர் கே.ஆர்.எம்.றிஷாத், செயலாளர் ஏ.டபிள்யு. ஹிசாம், உபதலைவர் எஸ்.எம். சியாத், ஊடக இணைப்பாளர் அர்ஷாத் இஸ்மாயில் மற்றும் இளைஞர்களும் கலந்து கொண்டனர்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM