Web
Analytics
யாப்பு சீர்திருத்தமானது மக்களின் நலன் கருதியே உத்தேசிக்கப்படுகின்றது, பலாங்கொடையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம். - Sri Lanka Muslim Congress
-நாச்சியாதீவு பர்வீன் 
 
யாப்பு சீர்திருத்தமானது மக்களின் நலன் கருதியே உத்தேசிக்கப்படுகின்றது, இந்த நாட்டு மக்களுக்கு நாங்கள் வாக்களித்திருக்கிறோம் பொதுமக்களின் நலன்கருதி யாப்பு சீர்திருத்தமானது அவசியப்படுகிறது

என நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை (2)பலாங்கொடை பம்பாஹின்ன நீர்வழங்கல் மற்றும் சுகாதார நலனோம்பும் திட்டத்தினை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

 
தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் 
 
யாப்பு சீர்திருத்தமானது முன்னர் இருக்கின்ற சரத்துக்களிலுள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை திருத்தம் செய்து மக்களுக்கு அதிகம் சாதகமாக இருக்கின்ற வகையில் அமையவேண்டும் எனும் நோக்கில்தான் இந்த யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் நாங்கள் சிந்திக்கின்றோம்.இந்தக்குறைபாடுகளை நிவர்த்தி செய்து சுபீட்சமான நாட்டொன்றை கட்டியெழுப்ப முனைகின்ற இந்தத்தருணத்தில் வெவ்வேறு வழிகளில் எம்மை விமர்சனம் செய்கின்றனர்.இந்த யாப்பு சீர்திருத்தமானது மறைவில் நடக்கின்ற அல்லது நடக்கப்போகின்ற விடயமாக பொய்யான பிரச்சரங்களை பரப்பி பொதுமக்களை அச்சத்துக்குள்ளாக்குகின்ற  வேலையை திட்டமிட்டு செய்கின்றனர்.
 
எனவே பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்கின்ற வகையில் நாம் தீர்மானித்துள்ளோம் புதிய அரசியலமைப்பு யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் வெவ்வேறு கட்சிகள் தங்களது பிரேரணைகளை முன்வைத்துள்ளன இந்தப்பிரேரணைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் வெளிப்படையான விவாதத்தினை மேற்கொள்ளவதன் மூலம் பொதுமக்களுக்கு தெளிவினை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்.
 
இதுதொடர்பில் சட்டத்தரணிகள் சங்கமும் எமக்கு கடிதம் அனுப்பியுள்ளார்கள். இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் குந்தகமாக அமைந்துவிடுமா?  என்கின்ற வகையில் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள். சட்டத்தரணிகள் சங்கத்தில் நானும் இங்குள்ள சட்டத்தரணிகளும் அங்கம் வகிக்கின்றார்கள் ஆனால் இந்த கடிதம் தொடர்பில் எமக்கு எதுவும் தெரியாது. நாட்டில் மக்கள் மத்தியில் குழப்ப நிலையை உண்டுபண்ண நினைக்கின்ற குழுவினருக்கு இவர்களும் உந்துசக்தியாக இருக்கின்றார்களா எனும் சந்தேகம் எழுகின்றது.
 
புதிய யாப்பு சீர்திருத்தம் தொடர்பில் கட்சிவாரியாக ஆலோசனைகள் பெறப்பட்டுள்ளன. அதிலே ஒவ்வொரு கட்சியும் தமது பிரேரணைகளை முன்வைத்துள்ளனர் அந்தவகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது வடகிழக்கினை இணைக்கவேண்டும் என்று கோரியுள்ளது. அதேநேரம் ஜாதிகஹெல உரிமைய எந்த மாகாணங்களுக்கும் இணைக்கக்கூடாது எனும் பிரேரணை முவைத்துள்ளது. கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த பிரேரணைகள் தொடர்பில் இன்னும் எந்த முடிவும் எடுத்திராத நிலையில் வடக்கையும் கிழக்கையும் இணைத்து தமிழர்களுக்கான தனியான ஆட்சியை வழங்குவதற்கு இந்த அரசு முயற்சி செய்வதாக சிலர் பிரச்சாரம் செய்வது அவர்களது பலவீனத்தையே சுட்டுகின்றது.
 
வடகிழக்கு இணைப்பானது நினைத்த மாத்திரத்தில் முடிகின்ற இலகுவான விடயமல்ல. அரசியல் ரீதியாக எந்த அடிப்படையான அறிவுமில்லாமல் பிரச்சாரம் செய்ப்பவர்கள் இந்தவிடயம் தொடர்பில் தமது அறிவினை வளர்த்துக்கொள்ள கொள்ளவேண்டும். பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் இந்த பிரேரணை நிறைவேற்றப்படுவதோடு அந்தப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் விருப்பமும் இதற்க்கு பெறவேண்டும். எனவே வடகிழக்கு இணைப்பானது வார்த்தைகளினால் மட்டுமே அது இலகுவில் முடியும். இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மிகத்தெளிவாக இருக்கிறார். இந்த நாட்டினை பிரித்து தனியான ஆட்சியை அவர்கள் கோரவில்லை. ஒரே நாடு ஐக்கிய இலங்கை எனும் நிலைப்பட்டிலதான் அவரும் இருக்கின்றார்.
 
நாங்கள் சிலவிடயங்கள் தொடர்பில் மாற்றங்களை எதிர்பார்க்கின்றோம். அவற்றில் மாகாண சபைகளுக்கான அதிகாரம் வழங்கப்படவேண்டும். ஒருமாகாணத்தின் அபிவிருத்தியில் அந்த மாகாண அதிகமானது மிகமுக்கிய பங்களிப்பை செய்கின்றது எனவே மாகாண சபைகளுக்கான அதிகாரம் தொடர்பிலான விடயங்களை நாம் மாற்றங்களை எதிர்பார்க்கின்றோம்.
 
நமது நாடு சோல்பரி யாப்பினை மையமாக வைத்தே ஆரம்பத்தில் நடைபயின்றது. சோல்பரி யாப்பானது ஐக்கிய இலங்கைக்குள் ஒருமைப்பாட்டுடன் செயலாற்றும் வகையிலேயே அமைந்திருந்தது. அந்த யாப்பானது எப்போதும் எங்கேயும் ஒருமித்த நாடென்றொ அல்லது ஒருமைப்பாட்டுடனான நாடென்றொ அல்லது சமஸ்டி என்றோ குறிப்பிடவில்லை மாறாக எங்களுக்கு தெளிவாக தெரியும் அது ஒருமித்த நாடு என்று. எனவே வெறுமனே பிரேரணைகள் மட்டுமே பெறப்பட்டுள்ள இந்த நேரத்தில் அதனை திரிபுபடுத்தி மக்களை பிழையாக வழிநடத்த முயற்சி செய்கின்றவர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாகவும்,தெளிவுடனும் நடந்து கொள்ள வேண்டும். 
 
இந்த நீர்வழங்கல் திட்டமானது சப்ரகமுவ பல்கலைக்கழத்தில் கல்விகற்கின்ற மாணவர்கள்,ஊழியர்கள் அதையும் தாண்டி இம்முல்பே பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட  ஐந்து கிராமசேவகர் பிரிவில் வசிக்கின்ற பயனாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். உலகவங்கியின் 1020 மில்லியன் ரூபா கடனுதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த நீர்வழங்கல் திட்டமானது நீண்ட காலமாக தூயகுடிநீருக்காக காத்திருந்தவர்களுக்கு வரப்பிரசாதமாகும்.
இன்னும் பல நீர்வழங்கல் திட்டங்கள் இந்த இரத்தினபுரி மாவட்டத்தில் நாம் ஆரம்பித்து வைத்துள்ளோம் அவைகளின் மூலமும் இந்த மாவட்ட மக்கள் பிரயோசனம் அடைவார்கள். இதில் பாரிய இரத்தினபுரி நீர்வழங்கல் திட்டம் பிரதானமானதாகும் எனக்கூறினார்.
 
இந்நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு பாதுகாப்பான  சுகாதார நலனோம்பும் திட்டத்திற்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.
 
அமைச்சர் தலதா அத்துகோரல்ல. பிரதியமைச்சர்களான கருணாரத்ன பரவித்தாரன, துனேஸ் கன்கந்த  தேசியநீர்வழங்கள் வடிகாலமைப்பு திணைக்களத்தின் தலைவர் ஏ.அன்சார்,உபதலைவர் ஷபீக் ரஜாப்தீன், பதுளை,இரத்தினபுரி மாவட்ட அமைச்சரின் இணைப்பாளர் தாஜூதீன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM