(எம்.சி. அன்சார்)

மியன்மாரில் வாழும் ரோஹிங்கியா இன முஸ்லிம்களை இலக்கு வைத்து அந்நாட்டு இராணுவத்தினரும் மற்றும் கடும்போக்குவாத அமைப்புக்களும் முன்னெடுத்துள்ள கொடூரத் தாக்குதலை நிறுத்துமாறு,  இலங்கை அரசாங்கம் மியான்மாரை வலியுறுத்த வேண்டும்.அவர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து முஸ்லிம்களும் பிரார்த்தனை செய்ய வேண்டும். என்றும் திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் தெரிவித்தார்.

 

2017ஆம் ஆண்டுக்கான பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு-செலவு திட்ட நிதி ஒதுக்கீட்டு நிதியிலிருந்து சம்மாந்துறை பிரதேசத்திலுள்ள சமூக சேவை அமைப்புக்கள், கிராமிய மாதர் அபிவிருத்திச் சங்கங்கள், பொதுநிறுவனங்கள், விவசாய அமைப்புக்களுக்கு தேவையான 60 இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் மற்றும் உபகரணங்கள் என்பன வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர்கூடத்தில்  பிரதேச செயாளர் எஸ்.எல். முகம்மட் ஹனீபா தலைமையில் இடம்பெற்றது.  இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

 

 அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையிலே – கடந்த இருவார காலமாக ரோஹிங்யா இன முஸ்லிம்களை இலக்கு வைத்து மியன்மார் இராணுவத்தினர் பொடூரமான தாக்குதலை முன்னெடுத்து வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டஅப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதுடன்,   தமது இடங்களிலிருந்து விரட்டப்பட்டு காடுகளில் தஞ்சமடைந்துள்ளதுடன், அயல்நாடுகளுக்கு தரைமார்க்கமாகவும் தப்பியோடியுள்ளனர்.

அந்நாட்டின் அரசாங்க படையினால்,  ‘ரோஹிங்யா’ முஸ்லிம்கள் மீது, கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகளால், உயிர்ப்பலிகள் எடுக்கப்பட்டதற்கு மேலதிகமாக, கூட்டு வன்புணர்வு, சிசுக்கொலை, எரியூட்டுதல், சித்திரவதை போன்ற மனிதாபிமானத்துக்கும் மனிதகுல நாகரிகத்துக்கும் எதிரான சம்பவங்களும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் சொல்கின்றனர். அதை நிரூபிக்கும் புகைப்படங்களும் வெளியாகிய வண்ணமிருக்கின்றன.   

இந்த மிலேச்சத்தனமான வெறியாட்டத்திற்கு எதிராக பர்மிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்குமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தும் ஒத்தி வைப்பு வேளை பிரேரணைய பாராளுமன்றத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி முன்வைத்துள்ளது.

மியன்மார் நாட்டின் 50 மில்லியன் சனத்தொகையில் சுமார் 12 இலட்சம் ரோஹிங்யா முஸ்லிம்கள் வாழ்ந்து வாழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. உலகிலேயே மிக மோசமான அடக்குமுறைக்கு உள்ளாகும் சிறுபான்மை இனமாக ரோஹிங்யா முஸ்லிம்கள் இனங்காணப்படுகின்றார்கள்.

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஜனநாயகத்தை நிலைநாட்டப் போராடியமைக்காக 1991ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, மனித உரிமைகளுக்கான விருது, ஜவகர்லால்நேரு அமைதி விருது எனப் பலதரப்பட்ட விருதுகளைப் பெற்ற ஆங்சான் சூசியின் தேசத்தில்தான், இஸ்லாத்தைப் பின்பற்றும் ‘ரோஹிங்யா” இனக்குழுமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள், படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.   

அதுவும், ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்காக, அந்நாட்டின் இராணுவத்துக்கு எதிராகப் போராடிய ஆங்சான் சூகி, அந்நாட்டின் பிரதமருக்குச் சமமான பதவியான ‘ஸ்டேட் கவுன்சிலராக’, ஆட்சியதிகாரத்தோடு இருக்கின்ற நிலையிலேயே, வடமேல் பிராந்தியமான ரெக்கைனில், இந்தக் காட்டுமிராண்டித்தனம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றது.  

‘உலகின் இரும்புத் திரை’ என வர்ணிக்கப்பட்ட மியன்மாரில் ஒரு குறிப்பிட்ட இனக் குழுமத்தைச் சேர்ந்த மக்களை நோக்கி, நன்றாகக் கட்டமைக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட வகையிலான வன்முறைகள் முன்னெடுக்கப்படுகின்றமையையும் அதற்கு அரசாங்கப் படைகள் துணை நிற்கின்றமையும் ஆங்சான் சூகியும் அரசாங்கமும் எல்லாவற்றையும் மூடிமறைக்க முனைகின்றமையும் உலகெங்கும் பாரிய எதிர்ப்பலையை உருவாக்கியிருக்கின்றது

உலகிலேயே மிகவும் அடக்குமுறைக்குள்ளான சமூகமாக மனித உரிமைகள் அமைப்புக்களால் விமர்சிக்கப்படுகின்ற ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு தீர்வொன்றினை பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் சர்வதேச சமூகம் உள்ளது.

இம்முஸ்லிம்களுக்கு எதிரான வன்செயலினை பூரணமாக நிறுத்தப்பட வேண்டுமாயினால் சர்வதேச சமூகத்தின் அணுமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும்.

 

சர்வதேச சட்டங்களை மீறி ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் இன அடையாளத்தை மறுத்து அவர்களைக் கொன்றொழிக்கும் மியன்மார் அரசாங்கத்தை கண்டிப்தோடு, அதற்கு துணைநிற்கும் ஆங் சாங் சூகியையும், மியன்மார் அரசாங்கத்தையும் சர்வதே விசாரணைக்கு உட்படுத்தவும் வேண்டும். அந்த மக்களின் உரிமைகளை பாதுகாக்க சர்வதேச சமூகம் துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளமை காலத்தின் கட்டாயமாகவுள்ளது. அதற்கு அனைத்து தரப்பினரும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டும்.

எனவே, முஸ்லிம் அரசியல் தலைமைகள், இலங்கையிலுள்ள முஸ்லிம் நாடுகளின் தூதுவர்களைச் சந்தித்து, மியான்மார் முஸ்லிம்கள் விவகாரத்தில் தலையிடுமாறு அழுத்தம் கொடுக்க வேண்டுவதோடு, ரோஹிங்யா முஸ்லிம்களுக்காக முஸ்லிம் மக்கள் அனைவரும் மனமுருகி பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பிற்காக இறை பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும்.

இந்நிகழ்வில் உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே.எல். ஹம்ஸா, கணக்காளர் திருமதி ஸீசைமா, கிராம சேவை உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E


CONTACT FROM