Web
Analytics
தந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை - Sri Lanka Muslim Congress

நீதியமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், பா.உ, யாழ். தந்தை செல்வா சதுக்கத்தில் நிகழ்த்திய தந்தை செல்வாவின் 36 ஆவது நினைவுப் பேருரை. தந்தை செல்வா அறங்காவற் குழுவின் ஏற்பாட்டில், அவரது புதல்வர் சட்டத்தரணி சந்திரகாசனின் விருப்பத்தின் பேரில்,26.04.2013 அன்று அமைச்சர் ஹக்கீம் இப் பேருரையை ஆற்றினார்.
Published on: May 8, 2013 @ 10:29
இற்றைக்கு 15 ஆண்டுகளுக்கு முன் 1997 ஆம் வருடம் மார்ச் மாதம் 30 ஆம் திகதியன்று கொழும்பு புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்ற தந்தை செல்வாவின் நினைவு நிகழ்வில் எமது மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்களை உரையாற்ற அழைத்திருந்த பொழுது, அவருக்கு அன்றைய தினம் சமூகமளிக்க முடியாத காரணத்தினால், அவருக்குப் பதிலாக உரையாற்றுவதற்கு நான் நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தேன்.

அதற்கு தலைமை தாங்கிய அண்ணன் மு. சிவசிதம்பரம் அவர்கள் அவையில் இருந்தவர்களை விளித்த போது ‘இங்கு மேடையில் இருப்பவர்கள் எல்லோரும் தந்தை செல்வாவை நன்கு தெரிந்தவர்கள்;; பரி;ச்சயமானவர்கள்’ என்றார். நான் மட்டும் தான் அதற்கு விதிவிலக்காக இருந்தேன். தந்தை செல்வாவுடைய தலைமுறையைச் சார்ந்தவன் அல்லன் நான். தந்தை செல்வாவுடைய அந்த நினைவு நாளன்று நான் நிகழ்த்திய உரையை நிறைய பேர் பாராட்டக் கேட்டு, எனது மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஷ்ரப் என்னை அழைத்து, அந்த ஒலிநாடாவை வாங்கி ஒரு நூலாகவே அதனை எமது கட்சியினால் பதிப்பித்து வெளியிட்டிருந்தார். அத்துடன், தந்தை செல்வாவுடைய நினைவு மன்றத்தின் சார்பில் துணைச்செயலாளரான பாராளுமன்ற உறுப்பினர் மாவை எனக்கு நன்றி நவிலல் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தார்.

அதில் அவர் ‘எமது குறுகிய கால அழைப்பை ஏற்று தந்தை செல்வாவைப் பற்றி நல்ல பொருள் பொதிந்த உரையொன்றை அழகு தமிழில் ஆற்றியிருந்தீர்கள். அவையில் இருந்தோர் வெகுவாக கவரப்பட்டிருந்தனர் போலும். உரை நன்றாக இருந்தது என்று மனமுவந்து கூறினார்கள். தமிழ் முஸ்லிம் நல்லுறவை மேலும் வளர்ப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் தாங்கள் நிகழ்த்திய தந்தை செல்வா நினைவுச் சொற்பொழிவு பயனுற அமையும் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டிருந்தார்.

15 வருடங்கள் கடந்த பிற்பாடு நாங்கள் எல்லோரும் களமாடிக் களைத்துப் போயிருக்கிறோம். தந்தை செல்வாவுடைய அரசியல் நினைவுக்கு வருகிற போதெல்லாம், எல்லோருக்கும் ஒரு புத்தூக்கம் ஏற்படுகிற உணர்வு எழுகின்றது. நல்லை ஆதினத்து குருக்கள் உரையாற்றிய போது ‘இங்கு நீதியமைச்சர் வருகை தந்திருக்கிறார், நாங்கள் நீதிகேட்டு களைத்துப் போனோம்’ என்று சொன்னார். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற நிகழ்வுகள் நிறைய நடக்கத்தான் செய்கின்றன. நான் அறியாத விஷயமல்ல. அதேநேரம் தம்பி ஐயூப் பேசுகின்ற பொழுது, ‘கிழக்குத் தேர்தல் பின்னணியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு சேர்ந்து ஆட்சியமைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்’ என்று சொன்னார். அத்துடன், அவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரோ அல்லது இந்நாள் பாராளுமன்ற உறுப்பினரோ பேசிய பேச்சினால் நாங்கள் புண்பட்டுப் போயிருக்கிறோம் என்றார். தம்பிக்கு நான் சொல்ல விரும்புவது, தனி மரம் தோப்பாகாது. தந்தை செல்வாவின் தடம் பதித்து வாழ்ந்து, தமிழ் சமூகத்தினர் தமது சகோதர முஸ்லிம் சமூகத்தை வஞ்சிக்கத் துணியமாட்டார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த நிகழ்வில் நாங்கள் தந்தை செல்வாவைப்பற்றி பேசுகின்ற பொழுது அசாமான்ய துணிச்சல், அசாதாரண ஆற்றல் ஆகியவற்றோடு அவரது மெல்லிய உடலை வைத்துக்கொண்டு அமைதியான,ஆரவாரமில்லாத பேச்சாற்றலோடு சாதித்து முடிந்தவற்றையெல்லாம் பார்க்கின்ற பொழுது, சாமார்த்தியமாக அவர் சாத்வீக போராட்டங்களை; நடத்தியதைப் பார்க்கின்ற பொழுது வியப்பாக இருக்கின்றது. அவருடைய அரசியல் அலாதியானது; அபூர்வமானது. அது நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது அல்ல.

தந்தை செல்வாவுடைய வாழ்வோடு, சமகால அரசியல் செல்நெறியையும் இணைத்துப் பேசி இந்த உரைக்கு அணி சேர்க்கலாம் என நான் நினைக்கிறேன். தந்தை செல்வாவுடைய மூன்று தசாப்த கால இயங்கு அரசியல், 1947 இல் இருந்து 1977 வரையாகும். அந்த அரசியலில் சமஷ்டி கோரிக்கையுடன் தனி நாட்டுக் கோரிக்கை வரை திருமலைத் தீர்மானம் முதல் வட்டுக்கோட்டை பிரகடனம் வரை இடையிடையே துணுக்குகளை குறிப்பிட்டு நான் பேசுவதற்கு விரும்புகிறேன்.

பெருந்தலைவர்களின் வாழ்க்கையில் துணுக்குச் செய்திகளும் கூட வரலாறு ஆகின்றன. அந்த அடிப்படையில் தந்தையுடைய மருமகனார் பேராசிரியர் ஜெயரத்தினம் வில்சன் எழுதிய ‘தந்தை செல்வாவும் தாயகக் கோட்பாடும்’ சம்பந்தமான அவருடைய புத்தகத்தை திருப்பித் திருப்பி படிக்கின்ற பொழுது அந்த அபூர்வ மனிதரின் அபார அரசியல் ஆற்றல் கண்டு நாம் அனைவரும் வியப்புறுகிறோம். இந்த விந்தை மனிதரின் வித்தியாசமான அரசியல் எப்படி இந்த நாட்டின் சிறுபான்மை சமூகங்களுக்கு அரசியல் வழியை, நெறியை காட்டியது என்பதை குறித்து நாங்கள் ஆச்சரியமடைகிறோம்.
குறிப்பாக அவரது சாத்வீக போராட்டம் சமரச அரசியலுக்கு அவர் கொடுத்த விலை, அஹிம்சை வழியில் ஒத்துழையாமை இயக்கம் என்று அவர் தொடங்கிய போராட்டத்தின் தார்மீக தாக்கம் இந் நாட்டு அரசியலை எவ்வாறு உலுக்கியது என்று நாங்கள் உற்று நோக்குகின்ற பொழுது இன்று மூன்று தசாப்த கால வன்முறை அரசியலில் துவண்டு, யுத்தத்தினால் அனைத்தையும் இழந்து, இன்னும் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற வகையில் சக்கரம் சுழன்று மீண்டும் அஹிம்சை வழியில் வந்து நிற்கின்றது.

அவருடைய அந்த வழியை மீண்டும் தழுவுகின்ற, இதனை எப்படியொரு சாத்வீகமான போராட்டமாக, அதுவும் அந்த சாத்வீக போராட்டத்தை ஒரு பிரயோக வலுவுள்ள போராட்டமாக மாற்றுவது என்பதை பற்றி சிந்திக்கின்ற ஒரு தருணமாக இதனைக் கொள்ள வேண்டுமென நான் பணிவோடு கேட்க விரும்புகின்றேன்.

இங்கு எனக்கு முன் சிறிது உரையாற்றிய தம்பி ஐயூப்,கிழக்கில் தேர்தல் நடந்த முடிந்த பின்னணியில், முஸ்லிம் காங்கிரஸ் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்கவில்லையே என்ற ஆதங்கத்தைப் பகிர்ந்து கொண்டார். அதற்கு நிறையக் கைதட்டலும் கிடைத்ததை நான் அவதானித்தேன். ஒன்றை மட்டும் தான் என்னால் சொல்ல முடியும். நாங்கள் சூழ்நிலைக் கைதிகள். அதேவேளை ஒரு முடிவை மேற்கொள்கின்ற பொழுது, அந்த முடிவு சரியான சந்தர்ப்பத்தில் சரியான முடிவாக எடுக்கப்பட வேண்டும். பிழையான சந்தர்ப்பத்தில் எடுக்கப்படும் சரியான முடிவும் பிழையான முடிவாகத் தான் அமையும்.

என்னுடைய பார்வையில், நாங்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகளுக்கு மத்தியில், இன்று தெற்கில் வியாபித்துள்ள யுத்தத்துக்கு பின்னரான வெற்றிக்களிப்புடனான மோசமான அரசியல் பின்னணியில் முஸ்லிம் சமூகம் ஆறஅமர இருந்து சரியான முடிவை சரியான சந்தர்ப்பத்தில் தான் எடுக்க வேண்டும். தம்பி ஐயூப் இங்கு சொன்னது சரியான முடிவு. ஆனால் எங்களது பார்வையில் பிழையான சந்தர்ப்பம். நிச்சயம் சரியான சந்தர்ப்பம் வரும் அது வெகுதொலைவில் இல்லை என்ற நம்பிக்கை உண்டு.

தந்தை செல்வாவை தொடர்ந்து வந்த எவரையும் ‘பெரியவர்’ என எவரும் சொன்னது கிடையாது; தந்தை என்ற அடைமொழியால் யாரையும் அழைத்தது கிடையாது. பெரியவராக, தந்தையாக, தமிழ் தேசிய இனத்தின் தானைத்தளபதியாக, தமிழ் பேசும் சமூகங்களின் தனிப்பெரும் தலைவராக நாங்கள் தந்தை செல்வாவைப் பார்க்கிறோம்.

அவரது அரசியலில் வக்கிரமான வார்த்தைப் பிரயோகங்களை நாங்கள் காணவே முடியாது. அவருடைய வாழ்க்கையின் ஆரம்பத்திலேயே அவர் எதிர்கொண்ட சவால்கள் அதை இன்று அவருக்குப் பின்னால் தோன்றியுள்ள நாங்கள் எதிர்நோக்குகின்ற அறைகூவல்களோடு நோக்குகின்ற பொழுது, நாங்கள் எம்மாத்திரம் என எண்ணத் தோன்றுகின்றது.

தலைமைப் பதவியில் இருக்கிற எங்களுக்கும் அடிக்கடி துரோகத்தனங்களும், கழுத்தறுப்புகளும் ஏராளம் நடக்கின்றன. ஆனால், தந்தை செல்வாவின் காலத்தில் அவர் அனுபவித்த இன்னல்களைப் பார்க்கின்ற பொழுது, இடறுகளைப் பார்க்கின்ற பொழுது நாங்கள் ஆறுதல் அடைகிறோம். அதில் இம்மியளவும் நாங்கள் இன்னும் அனுபவிக்கவில்லை போல் தோன்றுகிறது.

தந்தை செல்வாவைப் பற்றி பேசுகின்ற பொழுது, அவர் அரசியல் பிரவேசித்த சந்தர்ப்பத்தில் அவரது நண்பராக இருந்த ஜீஜீ யைப் பற்றி பேசாமல் தந்தை செல்வாவைப் பற்றி பேச முடியாது என்றளவுக்கு, ஜீஜீ பொன்னம்பலம் என்கின்ற ஆளுமை தமிழர் போராட்டத்தில் இன்னுமொரு தனியான ஆளுமையாக இருந்தது. அதைப்பற்றிய பார்வை பலவாறாக இருக்கலாம்.

அதற்கு வருவதற்கு முன்னர், அதுபற்றிய ஓர் ஒப்பீட்டு ஆய்வை நான் செய்யலாம் என நினைக்கிறேன். அதற்கு முன்பு நேற்று காலை ஓர் ஆங்கில தினசரியில் ஜீஜீ பொன்னம்பலத்துடைய பேரன் கஜேந்திர குமார் பொன்னம்பலம் ஓர் அறிக்கையை விட்டிருக்கிறார். எதிர்வரும் வடமாகாணத் தேர்தலை தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என கூறியிருக்கிறார். அதனை வாசித்தவுடனேயே என்னுடைய நினைவுக்கு வந்ததெல்லாம், கடந்த வருடம் தந்தை செல்வாவின் நினைவுப் பேருரையை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர் பத்மநாதன் நிகழ்த்தினார். அந்த பேருரையில், தமிழர்கள் தேர்தல் பகிஷ்கரிப்பினால் அடைந்த நஷ்டங்களைப் பற்றிப் பேசினார்.

ஆதற்கு முதலில் அவர் உதாரணமாக கொண்டது நண்பர் கஜேந்திரகுமாரின் பாட்டனார் ஜீஜீ பொன்னம்பலம் அவர்கள் டொனமூர் ஆணைக்குழுவின் முன்னிலையில், தான் அவ்வளவு காலமாக இங்கிலாந்தில் இருந்து பரிஸ்டராக வந்த நிலையில் சட்டசபைக்குப் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வத்தோடு இருந்த அவரை அன்று யாழ்ப்பாணத்தில் இருந்த இளைஞர் காங்கிரஸார், நாங்கள் பகிஷ்கரிக்க வேண்டும் ஏனென்றால் டொனமூர் ஆணைக்குழு சட்டசபையில் தமிழர்களுக்கு நியாயம் செய்யவில்லை, டொனமூர் ஆணைக்குழு இலங்கைக்கு முழுமையான சுதந்திரத்தை வழங்கவில்லை என்பதை நாங்கள் எதிர்க்க வேண்டும். நாடுதழுவிய முழுமையான சுதந்திரத்தை வேண்டி யாழ். இளைஞர்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்றனர்.

ஆனால், தெற்கிலும் அவ்வாறு நடக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், தெற்கில் அவ்வாறு நடக்கவில்லை. ஈற்றிலே முழுச் சிங்கள அமைச்சரவை (Pயn ளுinhயடய ஊயடிiநெவ) என்றமைந்தது. அனைவரும் சிங்களவர்களாக உள்ள அமைச்சரவை அமையும் நிலைமை ஏற்பட்டு, அதிலே தமிழ் சமூகம் நட்டம் அடைந்தது. அதுமட்டுமல்ல, அதற்குப் பின்னர் நடந்த பகிஷ்கரிப்புகளைப் பற்றி பேராசிரியர் பத்மநாதன் குறிப்பிட்டு, அதுபற்றி அவரும் மேலோட்டமாக பேசி முடித்துவிட்டார்.

தேர்தல் பகிஷ்கரிப்பினால் ஏற்படும் நஷ்டங்கள் என பட்டியல் போடப்போனால் நீண்டுவிடும். எனவே அந்த தவறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் செய்யமாட்டார்கள் என்று நான் திடமாக நம்புகிறேன்.  தந்தை செல்வாவும் ஜீஜீயும் இரண்டு வித்தியாசமான ஆளுமைகள். ஒருவர் மேடை அதிரப் பேசுகின்ற மேதா விலாசம் கொண்டவர். குற்றவியல் வழக்கறிஞராக தன்னிகரற்ற தனிப்பெரும் வழக்கறிஞர் மகான் என்று இன்னும் அவர் போற்றப்படுகிறார்.

தற்கேற்றமாதிரிதான் சிவில் வழக்குகளில் வாதாடுவதில் தந்தை செல்வா புகழ்பூத்தவராக இருந்தார் என்பது மாத்திரமல்ல, இரண்டு தடவைகள் உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசராக வரவேண்டுமென அன்றிருந்த ஆங்கில உயர் நீதியரசர் அழைத்தும், அதற்கு இணங்காமல் அரசியலில் தனது வாழ்நாளை அர்ப்பணித்து, தமது செல்வத்தையெல்லாம் செலவிட்டவராக, வாழ்ந்து மறைந்தவராக நாம் அவரைப் பார்க்கிறோம்.

இன்று 1947 ஆம் ஆண்டு தேர்தலில் ஜீஜீ பொன்னம்பலம் தலைமையில் தமிழ் காங்கிரஸார் ஜீஜீ பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியிலும், தந்தை செல்வா காங்கேசன் துறை தொகுதியிலும் வென்ற போது, ஜீஜீ பொன்னம்பலம் வையிட்ஹோல் பிரித்தானியருக்கு தேர்தல் முடிந்த கையோடு விண்ணப்பம் செய்தனர். சோல்பரி அரசியல் அமைப்பை இலங்கை வாழ் தமிழ் சமூகம் நிராகரித்து விட்டது. இந்த தேர்தல் முடிவு அதைத் தான் காட்டுகின்றது என்று தனது ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் சோல்பரி அரசியல் அமைப்பு குறித்த தனது நிலைப்பாட்டை திடமாக ஆங்கிலேய ஏகாதிபத்திய வாதிகளுக்கு மகஜர் அனுப்பி அதனை நாங்கள் நிராகரித்து விட்டோம் எனவே, தமிழர்களுக்கு அரசியல் உரிமையை அங்கீகரிக்கின்ற புதிய அரசியல் யாப்பு தேவை என்று விண்ணப்பம் செய்தார்கள்.

ஆனால், அதைத் தொடர்ந்து டி.எஸ். சேனாநாயக்க, இதனை எவ்வாறு கையாள்வது, இதனை எவ்வாறு முறியடிப்பது என்;பதற்கு அவர் கைக்கொண்ட கபடத்தனமான முயற்சிகளில் ஒன்று தான் ஜீஜீ பொன்னம்பலம் இங்கிலாந்து சென்றிருந்த வேளையில், தந்தை செல்வாவுக்கு செய்தி அனுப்பி நீங்கள் அரசாங்கத்தோடு இணைந்தால் என்ன எனக் கேட்ட பொழுது, அதை தந்தை செல்வா மறுத்ததன் மூலம் விசுவாசமாக நடந்த தந்தை செல்வாவைத் தான் நாங்கள் பார்க்கிறோம்.

தொடர்ந்தேர்ச்சியாக ஜீஜீ பொன்னம்பலம் தனது அரசியலில் தடம் புரள நேர்ந்தது. அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் பற்றி பலவாறாக பேசப்படுகின்றது. இந்த இரண்டு ஆளுமைகளும் ஈற்றில் எழுவதுகளின் நடுப்பகுதியில் அண்ணன் அமிர்தலிங்கத்திற்கு எதிராக ட்ரயல் அட் பார் வழக்கு நடந்த பொழுது, ஒன்றிணைந்தார்கள் என்பதும், அந்த வழக்கில் தந்தை செல்வாவும் ஜீஜீ பொன்னம்பலும் கலந்து கொள்ளச் செய்த அந்த நிகழ்வு தமிழ்த் தேசியம் ஈற்றிலே கண்ட பெரு வெற்றியாக கணிக்கப்படுகின்றது.

இருபதுக்கும் மேற்பட்ட இராணி அப்புக்காத்துமார்கள் பங்குபற்றினர். தந்தை செல்வா கிங்ஸ் கவுன்சில், அதாவது மன்னரின் வழக்கறிஞர் ஜீஜீ பொன்னம்பலம் குயின்ஸ் கவுன்சில் அதாவது இராணியின் வழக்கறிஞர். சிரேஷ்டமானவர் என்ற காரணத்தினால் அவருக்கு கனிஷ்டரான ஜீஜீ இந்த வழக்கைப் பேசுவாரா என்ற ஒரு சந்தேகம் நிலவியது. முன்னர் தமிழரசுக் கட்சியின் சார்பில் செனட்டராக இருந்து அமைச்சர் பதவி வகித்த மு. திருச்செல்வம் அந்த ஏற்பாட்டை செய்திருந்தார். தமிழ் சமூகத்திற்கு அபார வெற்றியாக அது நோக்கப்பட்டது.

அண்ணன் அமர்தலிங்கத்தின் சார்பிலே அந்த ட்ரயல் அட் பார் வழக்கில் வாதாடிய இந்த விஷயம் தமிழர் போராட்டத்தில் ஒரு வித்தியாசமான மைல்கல் என நான் நினைக்கிறேன்.  இன்று மோசமாகப் பேசுகின்ற தென்னிலங்கை காவி உடை தரித்தவர்களுக்கு எதிராக அவ்வாறு வழக்குத் தொடுப்பதற்கு இந்த அரசுக்கு துணிவு வருமா என எனக்குத் தெரியாது. ஏனென்றால், அவ்வளவு தூரத்திற்கு இனத் துவேசத்தைக் கக்குகிறார்கள்.

அதை சமாளித்துப் போகலாம் என்ற ஒருவிதமான உப்புச் சப்பற்ற அரசியல் அணுகு முறையைத்தான் நாங்கள் இன்று பார்க்கிறோம்.
திருகோணமலை பிரகடனம் தொடக்கம், வட்டுக்கோட்டை தீர்மானம் வரை தமிழர் போராட்டத்தை நெறிப்படுத்திய தந்தை செல்வா அவர் முன்னெடுத்த சாத்வீக போராட்டங்களின் தாக்கம் என்ன? எனப் பார்க்கின்ற போது எதற்கும் விலை போகாமல் மதிநுட்பத்தோடும், மன உறுதியோடும் தனது இலக்கை நோக்கி அவரது அரசியலை கழுத்தறுப்புகளுக்கு மத்தியில் சாணக்கியத்தோடும், திட நம்பிக்கையுடன் அவர் நகர்த்திய விதம் உண்மையிலேயே ஓர் அபார அரசியல் சாதனையாகும்.

பரஸ்பர விட்டுக்கொடுப்புடனான புரிந்துணர்வுக்கு வழிகோலுகின்ற சாமர்த்தியமான வார்த்தைப் பிரயோகங்களை நாங்கள் திருமலை பிரகடனத்தில் பார்க்கிறோம். ஆங்கிலத்தில் Pழடவைiஉள ளை வாந யசவ ழக வாந pழளளiடிடந என்பார்கள். அதாவது அரசியல் என்பது சாத்தியமானவற்றை சாதிக்கின்ற கலை என்பதாகும். சாத்தியமானவற்றை சாதிக்கின்ற கலையாக அரசியலை செய்து காட்டிய உதார புருஷர் தந்தை செல்வா என துணிந்து கூறும் அளவுக்கு அவருடைய சாமர்த்தியமான செயற்பாடுகளைப் பார்க்கிறோம்.

பிரதம மந்திரிகள் மூவரோடு, 1957 இல் எஸ்.டபிள்யு.ஆர்.டி பண்டாரநாயக்காவுடன் பண்டா –செல்வா ஒப்பந்தம், 1960இல் எழுத்திப் இல்லாத ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுடனான ஒப்பந்தம் மீண்டும் 1965 இல் டட்லி செல்வா ஒப்பந்தம் இந்த மூன்று ஒப்பந்தங்களிலும் அவற்றின் முன்னோடியான பண்டா செல்வா ஒப்பந்தத்துடன் அடிப்படையில்தான் இன்றும் தமிழ் பேசும் இனங்களுக்கான தீர்வின் வரையறைகள் அனைத்தும் அமைந்திருக்கின்றன என்றால் அது மிகையாகாது என நான் நினைக்கின்றேன்.

இறுதியில் இந்திய -இலங்கை உடன்படிக்கையைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அதில் குறைபாடுகள் உள்ளன. தந்தை செல்வாவுக்குப் பின்னர் அவர் எம்மத்தியிலிருந்து மறைந்த பிற்பாடு நடந்தேறிய விஷயங்கள் 1952இல் தந்தை செல்வா காங்கேசன்துறை தேர்தலில் போட்டியிட்ட போது நேர்ந்த இரண்டு விடயங்களை இங்கு குறிப்பிடலாம் என நான் நினைக்கின்றேன். தமிழ் காங்கிரஸில் இருந்து பிரிந்து தமிழரசுக் கட்சி அமைத்து, நாடுமுழுவதும் தமிழர்களின் சுயாட்சி சம்பந்தமாக, சமஷ்டி ஆட்சி என்பது குறித்த பிரசாரங்களை தந்தை செல்வா முன்னெடுத்துச் சென்று செயல்பட்டுக்கொண்டிருந்த போது அவர் சந்தித்த முதலாவது பின்னடைவு 1952 ஆம் ஆண்டு தேர்தலாகும்.

அந்தத் தேர்தலில் தந்தை செல்வா இந்து சமயத்தவர் ஒருவராக இல்லை என்ற காரணத்தையொட்டி அவருக்கு எதிராக எதையெதையெல்லாமோ பேசுவதற்கு பலரும் துணிந்தனர்.  வீ. நவரத்தினம் தந்தை செல்வாவை நல்லை ஆதீனத்திற்கு அழைத்துச் சென்று அவர் ஆதினத்து குருக்களிடம் களஞ்சி பெறுவதாக ஒரு படம் பிடித்துப் போடலாம் என்றார். ஏனென்றால், மக்கள் மத்தியில் செய்யப்படும் பிரசாரத்திற்கு எதிராக அந்தப் படத்தைப் போடுவது பிரசார நடவடிக்கைகளுக்கு வாய்ப்பாக அமையும் என்று அவர் ஓர் யோசனையை முன்வைத்தார். ‘சாட்டுக்காக சமயத்தை அரசியலுக்கு பாவிப்பதற்கு நான் விரும்பவில்லை’ என திட்டவட்டமாக மறுதலித்த தந்தை செல்வாவைத்தான் நாங்கள் பார்க்கின்றோம். அந்த தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவினார்;. ‘நான் தோற்கவில்லை;;; தமிழ் தேசியம் தோற்றுவிட்டது’ என்ற வார்த்தைகளோடு அவர் கச்சேரியை விட்டு வெளியேறினார்.

அண்ணன் அமிர்தலிங்கம் பிரசாரப் பீரங்கியாக 1952 தேர்தலில்தான் தோற்றமளிக்கின்றார். என்னுடைய அரசியல் வாழ்க்கையில் நினைவுப் பேருரைகளை நிகழ்த்துவதற்கு அழைக்கப்பட்டு வருகின்றேன். தந்தை செல்வாவின் நினைவு பேருரைகள் இரண்டை நிகழ்த்துவதற்கு நான் அழைக்கப்பட்டதை பெரும் பேறாகக் கருதுகின்றேன்.

அவ்வாறே 2010 ஆம் ஆண்டில் லண்டன் நகரில் அண்ணன் அமிர்தலிங்கத்தின் நினைவு பேருரையை நிகழ்த்துவதற்கு என்னை மங்கையர்க்கரசி அம்மையார் அழைத்திருந்தார். அதுவும், அன்றிருந்த யுத்தத்திற்குப் பின்னரான சூழ்நிலையில், சிறுபான்மை தமிழ்பேசும் சமுதாயங்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து அங்கு நான் உரையாற்றினேன்.

சில வருடங்களுக்கு முன், அண்ணன் சிவசிதம்பரத்தின் நினைவுப் பேருரையொன்றை நிகழ்த்துவதற்கு அவரது கல்லூரி நண்பர்கள் என்னை வேண்டிக்கொண்டதால், கொழும்பு தமிழ் சங்கத்தில் அண்ணன் சிவாவை நினைவுறுத்தி நான் உரையாற்றினேன். தந்தை செல்வாவுடைய சுயாட்சிக் கோட்பாடு என்பது அன்றும், இன்றும் திரிபுபடுத்திக் கூறப்படும் ஒன்றாகத்தான் இருக்கின்றது. அதை ஒரு பிரிவினைவாத கோட்பாடாகத்தான் இன்றுவரை தெற்கில் பேசி வருகின்றனர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸார் கூட ஓரு கட்டத்தில் அவ்வாறுதான் பேசினார்கள். ஆனால், அதன் தானைத் தளபதியாக விளங்கிய ஜீஜீ பொன்னம்பலத்தின் பேரரான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று அரசியலில் தீவிரத்தை விஞ்சிய தீவிரத்தில் இருக்கின்றார். சமஷ்டி (கநனநசயவழைn) அல்ல, கூட்டாட்சியும் (ஊழகெநனநசயவழைn) வேண்டாம். தனி நாடுதான் வேண்டும் என்று அவர் விடாப்பிடியாக நிற்கின்றார் என்றால் வரலாறு எப்படி தலைகீழாக மாறியிருக்கின்றது என்பதைப் பாருங்கள்.

சமஷ்டி கிடைத்தால் யானையிரவுக்கு அப்பால் புகையிரதம் போகாது என்றார்கள். அப்படியெல்லாம் எள்ளி நகையாடினார்கள். அப்படியான சவால்களுக்கு மத்தியில் சமஷ்டியின் அடிப்படையில் தான் உண்மையான யதார்த்தபூர்வமான அரசியலின் கோட்பாட்டு ரீதியான அணுகுதல் எப்படி என்பது பற்றி அன்று தந்தை செல்வாவும் அவரது சகாக்களும் மேடைகளில் பேசி வந்தனர். ஈ.ஐ.பி. நாகநாதன், வன்னியசிங்கத்தார் என்று அவரது பாசறையில் இருந்த தனிப்பெருந் தலைவர்கள் மற்றும் இந்த சபையில் அமர்ந்திருக்கும் நண்பர் சித்தார்த்தனின் தந்தையார் தர்மலிங்கம் போன்றவர்கள் அந்த பாசறையில் இருந்து எல்லாவிதமான எதிர்ப்புகளுக்கும் முகம் கொடுத்து முழுக்க முழுக்க அஹிம்சை போராட்டமாக, அறவழிப் போராட்டமாக, ஒத்துழையாமைப் போராட்டமாக அன்றிருந்த அரசுகளையெல்லாம் ஆட்டிப் படைத்தார்கள் என்பதை பார்க்கின்ற போது மீண்டும் அந்த நாட்களை எண்ணிப் பார்ப்பது மட்டுமல்ல, அதே அணுகுமுறையை தமிழ் பேசும் சமூகங்கள் அரவணைத்தும், அனுசரித்தும் செல்வதன் ஊடாக வெற்றியடையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை நான் இங்கு அழுத்தம் திருத்தமாக சொல்லியாக வேண்டும்.

இடைநடுவில், நான் இலங்கை – இந்திய உடன்படிக்கைப்; பற்றி பேச வேண்டும். 1983 ஆம் ஆண்டின் இனக் கலவரம் தமிழர்களின் அரசியல் வரலாற்றுத் திருப்புமுனை என்று சொன்னால், அதற்கு அடுத்து ஒரு வரலாற்றுத் திருப்புமுனையாக முஸ்லிம்களுக்கு மத்தியில் 1990 ஆம் ஆண்டு அமைந்துள்ளது.

வடக்கில் முஸ்லிம்களின் இனச் சுத்திகரிப்பு, கிழக்கில் தொடர்ந்து நடந்தேறிய படுபாதக படுகொலைகள் என்பன நினைவுக்கு வருகின்றன.
1990 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் மனங்களில் இருந்து அகற்ற முடியாத வடுக்களைக் கொண்ட ஆண்டாகும். அது முஸ்லிம் அரசியலில் திருப்புமுனையாக அமைந்த வருடமாகும். அதற்கெல்லாம் கால் கோலாக அமைந்தது 1987 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் இலங்கை முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு விட்டார்கள் என்ற உணர்வாகும். ஆதனூடான எழுந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கமும், அந்த இயக்கம் முன்னெடுத்த முஸ்லிம்களின் தாயகக் கோட்பாடும் முக்கியமானவை.

முஸ்லிம்களுக்கும் சுய நிர்ணய உரிமை உண்டு எனக் அழுத்தம் திருத்தமாக சொன்ன அரும் பெரும் தலைவராக நாங்கள் தந்தை செல்வாவைப் பார்க்கின்றோம். அதை பண்டா-செல்வா ஒப்பந்தத்திலேயே சூசகமாக எழுதி வைத்தது மாத்திரமல்ல, வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பிற்பாடு, வடகிழக்கில் தமிழருக்கு சுயநிர்ணய உரிமை இருப்பது போல சமமான சுயநிர்ணய உரிமையும், தமிழ் தாயகத்திலிருந்து பிரிந்து செல்வதற்கான உரிமையும் முஸ்லிம் தேசத்திற்கு இருக்கின்றது என 1977 ஆம் ஆண்டு தமிழர் விடுதலை கூட்டமைப்புடைய விஞ்ஞாபனத்தில் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்கள்.

காலப்போக்கில், வன்முறை அரசியலின் தோற்றத்தை தொடர்ந்து, அவற்றையெல்லாம் மறந்து தமிழ் தேசியத்தின் கணிசமான பிரிவினர் ஆயுதக் கலாசாரத்தின் பால் சென்றதால், தமழீழ கோரிக்கை ஆயுத கலாசாரத்தை நாடி நகர்ந்து முஸ்லிம்களை ஆயுதத்தினால் பணிய வைக்கும் படுபாதகச் செயல்கள் இடம்பெற்ற போதுதான், இந்த விரிசல் எங்களையெல்லாம் பாதித்தது. 1985 இல் கல்முனையிலும், வாழைச்சேனையிலும் ஏற்பட்ட கலவரங்களில் ஒரு சிறு நாட்களுக்கு முடிந்து மீண்டும் சமாதானம், நல்லிணக்கம், பரஸ்பர வாழ்வு என மீள நிலைநிறுத்தி கொள்ளுதல் போன்ற இயல்பு வாழ்க்கைக்கான சாத்தியப்பாடுகளை நாங்களாக தமிழ் பேசும் சமூகங்களோடு சேர்ந்து ஏற்படுத்திக்கொண்டோம். ஆனால், அப்படியாக அழிந்துபோன, தொலைந்துபோன நம்பிக்கைகள் மீண்டும் கட்டியெழுப்பப் பட்டு வருகின்ற சந்தர்ப்பத்தில் 1990 களில் நடந்த அசம்பாவிதங்கள் தமிழ், முஸ்லிம் உறவில் தீராத வடுவாக மாறியது.

வெறும் ஆங்காங்கே நடக்கின்ற கலவரங்களாக மட்டுமன்றி, முன் திட்டமிடப்பட்ட இராணுவ நடவடிக்கைகளாக நடந்தேறிய அப் படுபாதகச் செயல்கள், தமிழர் தரப்பின் மீது முஸ்லிம்கள் நிரந்தரமான அச்ச உணர்வை ஏற்படுத்துகின்ற அபாயத்தை தோற்றுவித்தன.

1987 இந்திய – இலங்கை உடன்படிக்கையின் பின்னணியில், முஸ்லிம்கள் புறக்கணிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டுவிட்டோம் என்ற மனவுணர்வோடு, தங்களது அரசியல் தனித்துவமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என தொடங்கிய முன்னெடுப்பின் பின்புலத்தில், 1988ம் ஆண்டு மாகாண சபை தேர்தல் வடகிழக்கில் நிராகரிக்கப்பட முடியாத அரசியல் பரிணாமமாகவும் வகிபாகமாகவும் முஸ்லிம்கள் உருவெடுக்கின்ற சூழலை ஏற்படுத்தியது.

பல்வேறு சமூகங்கள் ஒன்றிணைந்த தேசிய இனப் பேராட்டமொன்றில் அவை ஒவ்வொன்றினதும் தனித்துவங்களை எவ்வாறு அணுகவேண்டும் என்பதில் தமிழ் இயக்கங்களிடமிருந்த அரசியல் போதாமையின் வெளிப்பாடுதான் இந்த வன்முறை செயற்பாடுகள் என்பதை நாங்கள் மனம் கொள்ள வேண்டும்.
தந்தை செல்வா மிகுந்த கரிசனையோடு கட்டியமைத்த, முஸ்லிம்களையும் அரவணைத்துச் செல்லும் சுய நிர்ணயக் கோட்பாடு கைவிடப்பட்டு, பாசிச அடக்குமுறையுடனான தமிழீழபோராட்டமாக அது முஸ்லிம்களை அச்சுறுத்தியபோது, முஸ்லிம்கள் அவர்கலிருந்து தூரவிலகச் செல்ல முனைந்தபோது அவர்களின் முன்னெடுப்பின் அந்த முயற்சியின் போக்கை அரசியல் ரீதியாக அணுக முடியாத – அணுகத் தெரியாத விடுதலைப்புலிகள் தமது இராணுவக் கண்ணோட்டத்தில் அதற்கு தீர்வுகாண முற்பட்டதன் விபரீதம் தான் தமிழ்- முஸ்லிம் பிரிவினையை உருவாக்கியது என்பதை நாமனைவரும் மனம் கொள்ள வேண்டும்.

அந்த உணர்வுகளோடுதான் அடுத்த கட்ட அரசியலை நாம் அணுக வேண்டிய அவசியமிருக்கிறது. எந்த அச்ச உணர்வு முஸ்லிம்களை தமிழ்த் தேசிய போராட்டத்திலிருந்து தூரப்படுத்தியதோ, எந்த அரசியல் போதாமை விடுதலைப் புலிகளை முஸ்லிம்களுக்கு எதிராகப் கிளர்ந்தெழச் செய்ததோ அவற்றிலிருந்து பாடம் கற்க வேண்டிய மிகப் பெரிய தார்மீக பொறுப்பு இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது.

அண்மைக்காலமாக அண்ணன் சம்பந்தனின் பேச்சுக்கள் நம்பிக்கையூட்டுவனவாக உள்ளன என்பதையிட்டு நாங்கள் பெரு மகிழ்வுறுகின்றோம். ஆனால், இது வெறும் உதட்டளவிலான உச்சரிப்பாக மட்டும் இருந்துவிடக் கூடாது. இதயசுத்தியுடனான உடன்பாடுகளுடனான விஷயமாக அது மாறவேண்டும். 1960இல் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தேர்தலுக்குப் பிறகு பண்டா-செல்வாவுடனான ஒப்பந்தத்தை தாம் நிறைவேற்றுவதாக கூறி ஏமாற்றியது போல இது இருந்துவிட முடியாது. நன்கு தீர ஆராய்ந்து உற்று நோக்கி அடுத்த கட்ட அரசியலை பற்றிய தீர்மானிக்க வேண்டிய கட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

தந்தை செல்வாவின் தூரநோக்கு, தீர்கதரிசனம், எதிர்காலம் குறித்து கட்டியம் கூறுகின்ற சமார்த்தியம் என்பன அவருக்கே உரித்தான தனிப்பெரும் சிறப்பியல்புகளில் பால்பட்டவை. அவருடைய மருமகனார் பேராசிரியர் ஜெயரட்ணம் வில்சன் தனது ஆங்கிலப் புத்தகத்தில் சில முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார். ஜீஜீ பொன்னம்பலம் சுநளிழளெiஎந ஊழழசிழசயவழைn என்ற பொறுப்புணர்வுடனான ஒத்துழைப்பு என்ற கோட்பாட்டை முன்வைத்தார். ஜீஜீ பொன்னம்பலம் டி.எஸ். அரசுடன் சேர்ந்தார். தந்தை செல்வா முரண்பட்டு தமிழரசுக் கட்சியை அமைத்த போது அதை யாழ்ப்பாணத்திலிருந்த மத்தியதரவர்க்கத்து உறுப்பினரகள் எல்லாம் இந்த பொறுப்புணர்ச்சியுடனான ஒத்துழைப்பு என்ற அண்ணன் ஜீஜீ உடைய கோட்பாட்டை இன்னும் இரண்டு வாரங்கள் பொறுத்துப் பார்ப்போம் என தந்தை செல்வாவுக்கு சொன்னாரகள்;.

தந்தை பொறுக்கத் தயாராக இருக்கவில்லை.நிச்சயம் ஏமாற்றப்படுவோம் என்ற அவருக்கு கருத்துக்கு மாற்றுக் கருத்து எதுவும் இருக்கவில்லை. உடனடியாக தமிழ் தேசியத்தின் முன்னரங்கு நிலைகள் வடக்கில் அல்ல கிழக்கில் உள்ளன என்று அங்கு களமிறங்கினார்.தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பூமிகள் பறிபோகப் போகின்றன என்றும் அதுவும் கிழக்கில் அசுர வேகத்தில் நடைபெறப் போகின்றது என்றும் அதனை உடனடியாக உணர்ந்து உரிமைக்காக கிழக்கில் களமிறங்கி தமிழரசுக் கட்சியை துரித வேகத்தில் வளர்த்தெடுப்பதில் அவர் காட்டிய அதீத ஈடுபாட்டை இன்று நினைத்துப் பார்க்கின்ற பொழுது ஆச்சரியமாகவிருக்கிறது. ஏனென்றால் அவர் கிழக்கில் களமிறங்குவதற்கு முன்பே கல்லோயாத் தீட்டம் ஆரம்பிக்கப்பட்டு, நிலக் கபளீகரம் தொடங்கிவிட்டது.

எனவே தான் சுநளிழளெந ஊழழசிழசயவழைn என்ற பொறுப்புணர்ச்சியுடனான ஒத்துழைப்பு என்ற இந்த கோட்பாட்டில் தமிழர் தனக்கு உடன்பாடு இல்லை என தந்தை செல்வா இறுதிவரை அவரது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். எவரது மனதையும் புண்படுத்தாத மிகப் பக்குவமான வார்த்தைப் பிரயோகங்களை சாமர்த்தியமாகவும், சாணக்கியமாகவும் அரசியலை நகர்த்தியவிதம் இவற்றின் பிரயோக வலுவும், பிரயோக பயனும் இன்னும் அற்றுப் போகவில்லை. இந்த நாட்டில் உள்ள அநீதிகளையெல்லாம் ஓரங்கட்டுவதற்கு இருக்கும் மிகப் பெரிய சிறந்த ஆயுதமான காந்தீய ஆயுதமாகும். அதை மீண்டும் பரீட்சித்துப் பார்க்கின்ற ஓரிரு நிகழ்வுகள் ஆங்காங்கே நடப்பதை நான் பார்க்கின்றேன்.

குண்டர்களின் தாக்குதல், தடியடிப் பிரயோகம் என்றவாறு நடக்கும் அசம்பாவிதங்களை எல்லாம் தந்தை செல்வாவும் அவரது சீடர்களும் காணாத அசம்பாவிதங்களா? அவையெல்லாம் ஈற்றில் தமது இலக்கிற்குச் செல்கின்ற தெளிவான வழிகள் என்பதில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்.

இவை தற்காலிகமானவை. 15 வருடங்களுக்கு முன்னர் அன்று நான் பேசுகின்ற பொழுது, தந்தை செல்வா, தன்னுடைய சமஷ்டிக் கோரிக்கைக்கு துணிந்த போது சமகாலத்தில் தமிழ் நாட்டில் பெரியார். ஈ.வே.ரா உடைய திராவிடர் கழகத்தில் இருந்து அறிஞர் அண்ணா விலகி, திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார். இலங்கையை விடத் தமிழகத்தில் பிரிவினைவாதம் தலைதூக்கி தாண்டவம் ஆடிய காலம். அதை எனது முன்னைய உரையில் நான் குறிப்பிட்டுள்ளேன். ஆனால், இந்திய மத்தியஅரசு தூரநோக்கோடு சாணக்கியமாக மொழிவாரி மாநிலங்களை அமைக்கும் முடிவுக்க்கு வந்த பிற்பாடு அந்த பிரிவினை வாதம் போன இடம் தெரியவில்லை. அந்த சாணக்கியம் அதாவது ஒரு நாட்டிற்குள் இன்னொரு மொழி பேசும் சமூகத்தை அரவணைத்து அரசியல் செய்வதற்கான சாத்தியமான வழியை யாரும் மூடி மறைப்பது என்பது இலகுவாக காரியமல்ல. தமிழ் பேசும் சமுதாயங்களுக்கு மத்தியில் அரசியல் ரீதியான வெறும் கோட்பாட்டு ரீதியான பிரச்சினை மட்டுமல்ல, பிரயோக அரசியலின் யதார்த்தங்களை புரிந்து கொண்டு அவற்றிற்கான வியூகங்கள் வகுக்கப்பட வேண்டும்.

இந்த விடயங்கள் நாளை பத்திரிகையில் வந்தால் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியும். சொல்ல வேண்டியவற்றை சரியான நேரத்தில் சரியான இடத்தில் சொல்ல வேண்டும். சரியானவை ஒருபோதும் பிழைக்காது. எனவே தான் இங்கு நான் பேசத் துணிந்தேன். மொழியையும், பாரம்பரியத் தாயகக் கோட்பாட்டையும் தந்தை செல்வா மிகச் சாமார்த்தியமாக ஒன்றிணைத்துச் சென்றார். அதை பேராசிரியர் வில்சன் தன்னுடைய அந்த ‘தந்தை செல்வாவும் தாயகக் கோட்பாடும்’ என்ற நூலில் மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றார். தந்தை செல்வா ஒருபோதும் தனிநாடு கோர வேண்டும் என்று சொல்லவில்லை ஒரு நாட்டுக்குள் சுயாட்சி என்ற கோட்பாட்டைத்தான் அவர் தொடர்ந்தும் மிகத் தெளிவாகச் சொல்லி வந்தார்.

வட்டுக்கோட்டை தீர்மானமாக வந்து, பிறகு வன்முறை அரசியலாக வடிவெடுத்துப் போனாலும், தந்தையின் வாழ்நாளில் அஹிம்சை போராட்டம், சாமார்த்தியமான அரசியல் விட்டுக்கொடுப்புடனான அணுகுமுறைகள் என்பவற்றுக்கு அவர் கொடுத்த விலை நான் முன்னர் கூறியதைப் போன்று சாமான்யமானதைப் ஆயினும், அவர் தமது கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார். அந்த கொள்கைக்கான வெற்றி, அந்தக் கொள்கையிலிருந்து தடம் புரளாத சீடர்களுக்கு கிடைக்க வேண்டுமாக இருந்தால் அவரது தடம் பதித்துச் செல்லவேண்டும். அனைவரையும் அரவணைத்துச் செல்கின்ற அரசியலாக அது மாற வேண்டும். தெற்கில் வாழும் சிங்கள சமூகத்தின் பீதி மனப்பான்மைக்கு விடையளிக்கிற பக்குவமான அரசியலாக, அது விளங்க வேண்டும். யுத்தத்தின் பின்னரான இந்த சூழலில் வடுக்களைத் தடவிக்கொண்டு அரசியலில் செய்யும் வக்கிரமான போக்கை நாம் கைவிட வேண்டும். தெளிவாக நேர்மையாக எங்களுடைய புதிய அரசியல் பாதையை வகுப்பதற்கு நாங்கள் தயாராக வேண்டும். இந்த நிலையில் தந்தை செல்வா இன்னுமொரு சாமர்த்தியமாக அரசியல் நகரச் செய்ததை நான் நினைவுறுத்துகிறேன்.

1972 ஆம் ஆண்டு புதிய அரசியல் யாப்பு வரையப்பட்டபோது அதில் இருந்த அத்தனை காப்பீடுகளும் அகற்றப்பட்டு சிறுபான்மையினருக்கு அது பாதகமாக அமையப்போகின்றது என்பதை கண்டபோது மிகவும் துணிகரமாக நமது காங்கேசன்துறை பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து, அவர் விடுத்த சவால்களை அதை அன்றைய அரசு மூன்று வருட காலம் தாழ்த்திப் பீதியடைந்திருந்த பின்னணியில் ஈற்றில் 1975இல் தேர்தல் நடந்த போது தந்தை செல்வா வரலாறு காணாத பெரும்பான்மையோடு அடைந்த வெற்றியும், உலகுக்கு பறைசாற்றிய செய்தியும் சாமான்யமானவையல்ல.

அதிலிருந்து தான் 1977இல் தமிழர் விடுதலை கூட்டணி பாராளுமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்று எதிர்க்கட்சித் தலைவராக அண்ணன் அமிர்தலிங்கம் வருகின்ற அளவுக்கு அது வலுப்பெற்றது. அதிலுள்ள ஒரேயொரு படிப்பினை தேர்தல்களை பிற்போடுவதினாலும் ஆபத்து என்பதை அரசு உணர வேண்டும் என்பதாகும்.

அரசு திட்டவட்டமாக வடமாகாண சபைத் தேர்தலை நடாத்தும் என செய்திகள் வெளிவந்துள்ளன. ஆனால் ஆங்காங்கே சில சில்லறைகள் எவற்றையெல்லாமோ உளறித்தள்ளுகின்றன. அது அரச கொள்கையாக இருக்க மாட்டாதென நான் திடமாக நம்புகிறேன். தந்தை செல்வாவின் கடந்த கால அனுபவங்களை இரைமீட்டிப் பார்க்கின்ற பொழுது இந்த வரலாற்றுத் தவறுகளை நாங்கள் இனியும் செய்ய மாட்டோம் என்ற ஒரு முடிவோடு தான் தெற்குச் சிங்களமும், வடக்குத் தமிழ்த் தேசியமும், வடகிழக்கிலும், வடகிழக்குக்கு வெளியிலும் அங்கும் இங்கும் சில்லாங்கொட்டைகள் போன்று சிதறி வாழும் முஸ்லிம்களும் தந்தை செல்வா என்கின்ற தானைத்தளபதியின் தடம் பதித்து ஒற்றுமையாக வாழ்ந்து புத்துலகு படைப்போம் எனக் கூறுகின்ற அதேவேளை, இந்த உரையை நிறைவு செய்வதற்காக தந்தை செல்வாவினுடைய இறுதி யாத்திரை நிகழ்ந்த பொழுது தெல்லிப்பழை சந்தியில் பெருந்திரளான மக்கள் கூடி மறைந்த தலைவருக்கு அஞ்சலி செலுத்த அணிதிரண்ட போது அங்கு தொங்கிய பதாகையொன்றில் பின்வரும் வாசகங்கள் காணப்பட்டதை கூறி முடிக்கிறேன். அந்த பதாகை சொல்லிய செய்தி இன்னும் உண்மையாய் ஒலிக்கிறது. அதில் ‘உத்தமனார் ஊர்வலத்தில் உயிரோடு போகின்றார்;; செத்தவராய் நாம் எல்லாம் வீதியிலே நிற்கின்றோம்’ என்றிருந்தது. நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

JOIN WITH THOUSANDS OF SUBSCRIBERS ! GET OUR LATEST ARTICLES DELIVERED TO YOUR E

CONTACT FROM