பிரித்தானியரின் குடியேற்ற நாடாக இருந்ந காலத்திலிருந்தே இலங்கையில் அரசியல் கட்சிகள் தோற்றம் பெற ஆரம்பித்தன.
முதன்முதலாக 1936ம் ஆண்டு லங்கா சமசமாஜ கட்சி தோற்றம் பெற்றது. அதனை தொடர்ந்து ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை இந்திய காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆரம்பிக்கப்பட்டன.
சுதந்திர இலங்கையில் தமிழ் அரசு கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என பல அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றன.
பிரித்தானிய வரலாற்று ஆசிரியரும் நீதியரசருமான சேர் அலஸ்சாண்டர் ஜோன்சனின் கூற்றுப்படி இலங்கையில் முஸ்லிம்கள் கி.பி. 6 ஆம், 7 ஆம் நூற்றாண்டுகளிலிருந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால், இலங்கை சுதந்திரமடைந்து நான்கு தசாப்தங்கள் வரை முஸ்லிம்களுக்கான தனித்துவமான ஒரு அரசியல் கட்சியின் வெற்றிடம் நிலவிவந்தது. காலத்துக்கு காலம் பல முஸ்லிம் அமைப்புகள் தோற்றம் பெற்று வந்திருப்பதை வரலாற்றில் கண்டுகொள்ள முடியும். முஸ்லிம் லீக், அகில இலங்கை சோனகர் சங்கம், முஸ்லிம லீக் வாலிப முன்னணி, இஸ்லாமிய சோசலிச முன்னணி, மார்க்சிச எதிர்ப்பு முன்னணி, முஸ்லிம் உரிமைகளுக்கான தேசிய அமைப்பு, கிழக்கு இலங்கையின் முஸ்லிம் முன்னணி போன்ற அமைப்புகள் முஸ்லிம் அரசியல்வாதிகளினால் உருவாக்கபட்டு வந்தபோதும் ஒரு அரசியல் கட்சியை தோற்றுவிக்கும் திராணியும், ஆத்ம பலமும் இருக்கவில்லை. நாட்டை காலத்துக்கு காலம் மாறி மாறி ஆட்சி புரிந்து வந்த பௌத்த சிங்கள அரசுகளால் முஸ்லிம் தலைமைகள் உருவாக்கப்பட்டு வந்த மானக்கேடான நிலைமை 40 வருடகாலமாக காணப்பட்டது.
இந்த அவல நிலையை துடைத்தெறியும் நோக்கில் 1986 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தனித்துவமான அரசியல் கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டு இற்றைக்கு சரியாக 35 ஆண்டுகளுக்கு முன்னர் 1988 பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி தேர்தல் ஆணையகத்தால் முஸ்லிம் காங்கிரஸ் ஒரு அரசியல் கட்சியாக அங்கீகரிக்கபட்டது.
பல அரசியல் முகாம்களில் சிதறிக்கிடந்த முஸ்லிம் மக்களை ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபடுத்தி அவர்களை கட்டுறுதியான ஒரு அரசியல் சமூகமாக மாற்றியமைத்த பெருமை கட்சியின் ஸ்தாபக தலைவர் மர்ஹும். எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களையே சாரும்.
அப்துல் மஜீத்
தவிசாளர்
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்